“பக்தர்கள் சேவை... ஐயப்ப சேவை!” - இப்படியும் சில தன்னார்வலர்கள்!

ஐயப்பன் 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லணைக்குப் பிரியும் சாலையில், பாபா கோயிலுக்குச் செல்லும் வழியில், காவிரி பாலத்தின் பக்கமாக நாம் சென்றபோது, திரளான ஐயப்ப பக்தர்கள் அந்தப் பக்கமாகச் சென்றுகொண்டு இருப்பதைப் பார்த்தோம்.
அருகில் ஏதேனும் ஐயப்பன்கோயில் இருக்கிறதோ என்று நினைத்தவர்களாக நாமும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றோம்.
சென்ற இடத்தில் நாம் கண்டது கோயிலை அல்ல, ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் தேவைகளைப் பார்த்து பார்த்து கவனிக்கும் சேவை மையத்தையே நாம் கண்டோம்.

ஔவைப் பாட்டி 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்றார். ஆனால், அத்தகைய தொண்டர்க்குச் செய்யும் சேவையே அதனினும் பெரிது என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதுபோல் அந்த சேவை மையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.
மாலை அணிந்து விரதம் இருந்து ஐயன் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் தேவைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவதற்கான அந்த சேவை மையத்தில், தங்கும் இடம், பொருட்களைப் பாதுகாக்க வசதி, மருத்துவ உதவி, பஸ், கார்களை நிறுத்த போதுமான இடவசதி என்று அத்தனை வசதிகளும் இங்கே இருந்ததைப் பார்த்தோம். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 500 பேர் இலவசமாகத் தங்கும் அளவுக்கு இடவசதி அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவையை வழங்கிவரும் அமைப்புதான் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் என்ற அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்வது ஐயன் ஐயப்பனை தரிசிப்பதற்கு அல்ல; ஐயனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்குத்தான் என்பதை அறிந்து நாம் நெகிழ்ந்துதான் போனோம்.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளரிடம் பேசியபோது,``கடந்த வருடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே வந்து, தங்கிப் பயனடைந்தார்கள். அதேபோல் இந்த வருடமும் மண்டல பூஜை, மகர ஜோதி காலங்களில் சுமார் 65 நாட்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம், தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். சபரிமலை தேவஸ்தானம் போர்டு ஆரம்பிப்பதற்கு முன்னரே தொடங்கப்பட்டது எங்கள் அமைப்பு. கடந்த 74 வருடங்களாக ஐயப்ப பக்தர்களுக்காகப் பல சேவைகளைச் செய்துவருகிறோம். இந்த அமைப்புக்கு உலகம் முழுக்க கிளைகளும் தன்னார்வ தொண்டர்களும் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க இது ஐயப்ப அடியார்களுக்கு சேவை செய்வதற்கான அமைப்பு. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவ வசதி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி எனப் பல உதவிகளைச் செய்துவருகிறோம். எரிமேலி, அழுதாநதி உள்ளிட்ட இடங்களில் மருத்துவ முகாம்களும் நடத்தியிருக்கிறோம்,

நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் சபரிமலைக்குச் சென்று, அங்கேயே  இரண்டு மாதங்கள் தங்கியிருந்து சேவைசெய்து வருகின்றேன். ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு அந்த ஐயப்பன் மீதான மாறாத பிரியமும், ஈர்ப்பும், பக்தியுமே காரணங்கள். இப்படி சேவை செய்யும்போதுதான் அந்த அன்னதானப் பிரபுவின் அருளை நாங்கள் பரிபூரணமாக உணர்கிறோம்.'' என்றவரிடம், ''உங்களுடன் இந்த சேவையில் எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள்? சபரிமலை சீசனைத் தவிர மற்ற காலங்களில் ஏதேனும் சேவை செய்து வருகிறீர்களா?'' என்று கேட்டோம்.

''திருச்சியில் மட்டும் என்னைப்போல் 500 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். சபரிமலை சீசன் மட்டுமல்லாமல் மற்ற நாட்களில், திருச்சியைச் சுற்றியுள்ள வயலூர் முருகன் கோயில், திருவானைக்காவல், குணசீலம் பெருமாள் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் நடக்கும் திருவிழாக் காலங்களில் தேவையான உதவிகளைச் செய்வது, உண்டியலில் குவியும் பணத்தை எண்ணித் தருவது, டிக்கெட் கொடுப்பது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுவது... என எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். தஞ்சை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் எங்கள் சங்கத்தினர் இதுபோன்ற பணிகளைச் செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் திருச்சியில் உள்ள சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதியில் வலம்வருவோம். கடை கடையாக ஏறி, மஞ்சள் பையை ஏந்தி  ஐந்து ரூபாய் பத்து ரூபாய்... என வசூல் செய்வோம். அதைக்கொண்டு பக்தர்களுக்கு உதவுவோம். எங்கள் சேவையைப் பார்த்த பிறகு பலர் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். எங்களின் சேவை குறைவின்றி நடைபெற பல உயர்ந்த உள்ளங்கள் உதவுகிறார்கள். பணமாக வாங்காமல் பொருட்களாக வாங்குவதால் பலரும் நம்பிக்கையோடு உதவுகிறார்கள்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமல்ல, திருச்சி வழியாக பல கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களும் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாகப் பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் அன்னதானம் உள்ளிட்ட வசதிகளை வழங்கினோம். கடந்த வருடம் அன்பர் ஒருவர் இடம் கொடுத்து உதவினார். அவர் கொடுத்த இடத்தில் முகாம் அமைத்தோம். பக்தர்கள் தங்குவதற்கும், குளிப்பதற்கும், அன்னதானம் பெறுவதற்கும் அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, ஜி.வி.என் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ உதவிகளும் செய்கிறோம். இங்கு ஐயப்ப பக்தர்கள் மட்டுமில்லாமல், அம்மன் பக்தர்களும் வந்து போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம்” என்கிறார் உறுதியான குரலில் ஸ்ரீதர்.

 

 


அவரைத் தொடர்ந்து, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதனிடம் பேசினோம்.
''இந்த வருடம் சபரிமலை, திருச்சி தவிர சென்னை விருகம்பாக்கம், உளுந்தூர்பேட்டை, வேலூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி என்று 17 இடங்களில் சேவை மையங்களை அமைத்து ஐயப்ப பக்தர்களுக்காக சேவை செய்யக் காத்திருக்கிறோம். விபத்துகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த ஆண்டில் இருந்து பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

கடந்த ஆண்டிலிருந்து தேனி மாவட்டம், வீரபாண்டியில் பாதயாத்திரையாக சபரிமலைக்குப் போகும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தலையில் பொருத்தக்கூடிய சாலைப் பாதுகாப்பு ஸ்டிக்கரும், காலுறையும் கொடுத்துவருகிறோம். இது மட்டுமல்ல... அந்த வழியாகப் போகும் ஐயப்ப பக்தர்களின் வாகனத்தை நிறுத்துவோம். ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்களா... நல்ல நிதானத்தோடு ஓட்டுகிறார்களா என சோதித்து, அவர்களுக்குப் பானகம் கொடுத்து அனுப்புவோம். டிரைவர்கள் சோர்ந்து போயிருந்தால், அவர்களை சிறு ஓய்வு எடுக்கச்சொல்லி, ஓய்வுக்குப் பிறகே அவர்களை அனுப்புவோம். எங்களுடைய இந்த முயற்சியால், கடந்த ஆண்டு பல விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. இந்த வருடமும் அதே பணியைச் செய்கிறோம்.

ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் இருந்து எங்களின் 3,500 தன்னார்வத் தொண்டர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள். 10 நாட்களுக்கு ஒருமுறை 300 பேர் என தன்னார்வலர்கள் மாறிக்கொண்டே இருப்போம். பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் உடன் இருந்து சேவை செய்வார்கள். சபரிமலையில் கூட்டத்தில் பிரிந்தவர்களுக்கு உதவிசெய்வது, ஸ்ட்ரெச்சர் சர்வீஸ், மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் வசதி என எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். கடந்த வருடம் சபரிமலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்தக் குழந்தையை, `இருபது நிமிடங்களுக்குள் பம்பையில் சேர்க்க வேண்டும்’ என்றார்கள் மருத்துவர்கள். உடனே, எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்தக் குழந்தையை பம்பைக்குக் கொண்டு சேர்த்தோம். ஐயப்பன் அருளால் குழந்தை உயிர்பிழைத்தது. கடந்த ஆண்டு மட்டும் ஐந்து உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததும் அந்த தர்ம சாஸ்தாவின் அருளால்தான். இந்தச் சேவைக்காக பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர், எங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.

 


1997-ம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கிவருகிறோம். சின்னதாக ஆரம்பித்த இந்தச் சேவை, இப்போடு மெள்ள மெள்ள வளர்ந்து, மிகப்பெரிய சேவை அமைப்பாக உயர்ந்திருக்கிறது. எங்கள் சேவையைப் பார்த்து, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, 6,000 சதுர அடி இடத்தைக் கொடுத்து நாங்கள் செய்யும் அன்னதானத்துக்கு உதவியிருக்கிறார்கள். அங்கே தினமும் குறைந்தது இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த வருடம் ஏனோ தெரியவில்லை அன்னதானத்தை நிறுத்திவிட்டார்கள். சபரிமலை சாஸ்தாவைப் பொறுத்தவரை அன்னதானம் மிக முக்கியமானது. ஆனாலும், அந்தச் சேவையைச் செய்ய எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்கிறார் விஸ்வநாதன்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

 
   


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!