சபரிமலையில் 26-ம் தேதி மண்டல பூஜை நிறைவு 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 26-ம் தேதியுடன் மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜை, வரும் 26-ம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்கு சன்னிதான நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து  3.15 மணிக்கு மஹா கணபதிஹோமம் நடைபெறும். 

வேதபாராயண முறைப்படி கலச பூஜை நடத்தப்பட்டு, ஐயப்பனுக்கு கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தி மண்டலபூஜை நிறைவு அபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர், சுவாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து மண்டல பூஜை வழிபாடு நடைபெறும். அத்துடன் அன்றிரவு 41 நாள் மண்டல பூஜையை நிறைவு செய்து தேவதைகளுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன் முக்கியமாக, ஐயப்பனை உடல் முழுவதும் விபூதி அபிஷேகம் செய்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்து கையில் வில் அம்பு கொடுத்து தவம் இருக்க வைத்து ஹரிவராசனம் பாடி கோயில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது.

தொடர்ந்து 4 நாள்கள் நடை அடைக்கப்பட்டு, மகரஜோதிக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஐயப்பனுக்கு மகரஜோதி உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!