பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? இயேசு பேசுகிறார்! #ChristmasSpecial

இயேசு

 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையிது. இயேசு கிறிஸ்து பிறப்பின் மகிமையை அறிந்துகொள்ளும் விதமாக புகழ்பெற்ற அவரது மலைப்பிரசங்கத்தின் தங்க வரிகளை வார்த்தைகள் பிசகாமல் உங்கள் பார்வைக்காக வழங்கி இருக்கிறோம். புதிய ஏற்பாடில் மத்தேயு 6- ம் அதிகாரத்தின் சுவிசேஷ செய்திகள் தரப்பட்டுள்ளன. கடவுளிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்னும் பிரார்த்தனை வடிவமும் இதில் இடம் பெற்றுள்ளது.

 

 

மத்தேயு 6

* மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

* ஆகையால் நீ தர்மஞ்செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.

* அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

* அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

* அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

* அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

* நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது;

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,

ஆமென், என்பதே.

தொகுப்பு: எஸ்.கதிரேசன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!