'மாபெரும் புரட்சியாளர் இயேசு பெருமான்!' - அமரர் வலம்புரிஜான் #XmasSpecial

இயேசு பெருமான்

யேசு பெருமான் மாபெரும் புரட்சியாளர். அவர் தமது வாழ்நாளில் மற்றவர்களின் எண்ணங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டவராக இருந்தார். அப்போதே மனிதர்கள் பணத்தை ஆராதித்த ஆரம்பித்துவிட்டார்கள். 'எல்லோரும் பணத்துக்கு ஆலவட்டம் சுற்றுகிறார்களே' என்று இயேசு பெருமானும் சுற்றிவிடவில்லை.


ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காகப் படிப்பாளி ஒருவன் வந்தான்.


''ஆண்டவரே! நான் சொர்க்கத்தையடைய என்ன செய்ய வேண்டும்?" என்றான். அதற்கு அவர், 'மோசஸ் வழியாக, இறைவன் தந்த பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வா'' என்றார்.


அவனும், அவரைப் பார்த்து, ''நான் இந்தக் கட்டளைகளை எனது சிறுவயது முதற்கொண்டே கடைப்பிடித்து வருகிறேனே'' என்றான். அப்போது அவர், அவனைப் பார்த்து, ''அப்படியென்றால் நீ செய்ய வேண்டுவது வேறு ஒன்று உள்ளது; உன்னிடத்தில் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு; பிறகு வந்து என்னைப் பின் தொடர்ந்து வா'' என்றார்.


அவனோ கோபித்துக்கொண்டு போனான். அப்போது இயேசு பெருமான் ''இவன் திரும்ப வரமாட்டான். பணக்காரனின் இதயம் பணப்பெட்டியில் பத்திரமாக இருக்கிறது. ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும், பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினமானது" என்றார்.


நாளையைக் குறித்து, கவலைப்படுகிறவர்களை அவர் வெகுவாகச் சாடினார்.

 


''ஆகாயத்து பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; களஞ்சியங்களில் சேர்க்கிறதும் இல்லை. இருந்தும் உங்கள் பரமபிதா அவைகளுக்கும்  உணவளித்து வருகிறார்.


வயல் வெளிகளைப் பாருங்கள். லீலி மலர்களைப் பாருங்கள், சாலமோன் அரசன் முதலாக தனது சர்வ மகிமையிலும், இவைகளில் ஒன்றைப் போலெங்கிலும் உடை உடுத்தியது இல்லை. இன்றைக்கு இருந்து, நாளை அடுப்பிலே போடப்படுகிற காட்டுப்புல்லை கர்த்தர் இவ்வளவாக உடை உடுத்தினால், அற்ப விசுவாசிகளே! உங்களை எவ்வளவாக உடுத்துவார்!


ஆகவே, என்னத்தைக் குடிப்போமென்றும், என்னத்தை உண்போமென்றும், நாளையைக் குறித்து கவலைப்படாது இருங்கள். உங்களுக்கு, என்னென்ன தேவையென்பதை, உங்கள் தந்தையான இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். யோசித்துக் கவலைப்படுவதாலே உங்கள் உயரத்துக்கும் மேலே ஒரு முழம் கட்ட உங்களில் எவனாலே ஆகும்? ஆகவே நீங்கள் நாளையைக் குறித்துக் கவலைப்படுவானேன்?" என்று கேட்டார்.


எருசேலம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் எல்லோரும் காசுகள் போட்டபோது, ஒரு ஏழை விதவை இரண்டு காசுகள் மாத்திரமே போட்டாள். அதைப் பார்த்து இயேசு பெருமான் ''இவர்கள் எல்லோரிலும் இவளே அதிகமாகப் போட்டாள்; ஏனென்றால் மற்றவர்களெல்லாம் தங்களிடத்திலிருந்து, உள்ளதிலிருந்து கொஞ்சமாகப் போட்டார்கள்; ஆனால் இவளோ, தன்னிடத்தில் இருந்ததை எல்லாம் போட்டாள்" என்று குறிப்பிட்டார்.


அவர் ஒரு யூதராக இருந்ததால், யூதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மோசசின் சட்டத்தை அவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. 'சபாத்' என்கிற ஓய்வு நாளில் எழுபத்திரெண்டு அடி தொலைவுக்கு மேல் நடக்கக் கூடாது என்று அப்போது விதி இருந்தது.
முடவன் ஒருவனைக் குணமாக்கி 'நீ எழுந்து கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட" என்று இயேசு பெருமான் 'சபாத்' நாளில் குறிப்பிட்டார். நடக்கவே கூடாதென்று விதி இருக்கிறபோது கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட என்றால் எப்படி?
அர்த்தமில்லாத சடங்குச் சட்டங்களை ஆரவாரத்தோடு தூக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கு மத்தியில், இயேசு பெருமான் புரட்சிக்காரராக காணப்பட்டார்.


வேசித்தனத்தில் பிடிபட்ட பெண்ணை, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசு பெருமானுக்கு முன்னாலே கொண்டு வந்தார்கள். ''உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசுநாதர் குறிப்பிட்டார்.


ஒடுக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளான கலிலேயா, சமாரியா போன்ற இடங்களிலேதான் அவர் அதிகமாகப் பணியாற்றினார். கலிலேயா - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட நாடு.


சமாரியப் பெண் ஒருத்தி 'நான் தீண்டத்தகாதவள். என்னிடத்தில் யூதனாக இருக்கிற நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?' என்று கேட்டபோது, அவளுடைய வாழ்க்கையில் உள்ள மறைபொருள்களை அவர் வெளிப்படுத்தினார். அவளோடன் அவள் தங்கியிருந்த ஊருக்கே சென்றார்.
ஏழைகளுக்கு 'அருட்செய்தி' அறிவிக்க, சிறைப்பட்டோருக்கு விடுதலை தர, பார்வையற்றோருக்குப் பார்வை தர, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்ய, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார் என்கிற தீர்க்கதரிசனம் அவரால் நிறைவேற்றிற்று.


பிரபல எழுத்தாளர் மறைந்த வலம்புரி ஜானின்  'இந்த நாள் இனிய நாள்'  புத்தகத்திலிருந்து....

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!