தினம் ஒரு திருப்பாவை - 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ? #MargazhiSpecial | Andal thiruppavai Ninth devotional hymn

வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (24/12/2016)

கடைசி தொடர்பு:07:53 (24/12/2016)

தினம் ஒரு திருப்பாவை - 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ? #MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை


 

ஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு இருக்கும் கட்டிலின் சிறப்பையும் கூறுகிறாள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

ஆண்டாளின் தோழி படுத்துக்கொண்டு இருந்த அறையானது விலையுயர்ந்த மரவேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையைச் சுற்றி எட்டு திசையிலும் உறக்கத்துக்கு இடையூறு இல்லாதபடி, மிக மெல்லிய ஒளியைப் பரப்பிய விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. அந்த விளக்குகள் புகை தெரியாதபடி மிக மென்மையான நறுமணத்தை காற்றில் பரவச் செய்தது. ரத்தினமயமான அந்த அறையில், தந்தத்தால் செய்யப்பட்டு தங்கமும் நவரத்தினங்களும் இழைக்கப்பெற்ற கட்டிலில், மென்மையான இலவம்பஞ்சை அடைத்துத் தைத்த வெல்வெட் மெத்தையும், தலைக்கு திண்டுகளும் போடப்பட்டு இருந்தன. தூக்கமே வராதவர்கள்கூட படுத்த உடனே தூங்கிவிடும் அளவுக்கு அந்த அறையின் சூழ்நிலை காணப்பட்டது.    

 

அந்த அறைக்குள் தோழிகளுடன் சென்ற ஆண்டாள், தோழியை 'துயிலணைமேல் கண் வளரும் மாமன் மகளே' என்று அழைக்கிறாள். தோழி படுத்துக்கொண்டு இருப்பது ஆண்டாளுக்கு உறங்குவதுபோல் தெரியவில்லையாம். அதனால்தான், 'கண்வளரும் மாமான் மகளே' என்று அழைக்கிறாள். அவள் தூங்குவதுபோலவே தெரியவில்லையாம். கண்களை மூடியபடி எதையோ மனக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது ஆண்டாளுக்கு. பொதுவாக தூங்குபவர்களைக் கூட எழுப்பிவிடலாம். ஆனால், தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது அவ்வளவு சுலபமல்ல. உறங்காமல் உறங்குவது என்பது இதுதான் போலும் என்று ஆண்டாள் நினைத்துக்கொள்கிறாள். தான் கூப்பிட்டும் அவள் எழுந்திருக்கவில்லையே அவளை எழுப்ப என்ன செய்யலாம் என்று ஆண்டாள் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்தத் தோழியின் தாய் பேசும் குரல் உள்ளே இருந்து கேட்டது. உடனே ஆண்டாள் , ''மாமீ, உன் பெண்ணை எழுப்பக்கூடாதா? நாங்கள் எத்தனைநேரம்தான் அவளை எழுப்புவது? சீக்கிரம் உங்கள் பெண்ணை எழுந்திருக்கச் சொல்லுங்கள்'' என்கிறாள்.

 

அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை. உடனே மாமியைப் பார்த்து, ''எத்தனை சொல்லியும் உன் பெண் எழுந்திருக்காமல் இருக்கிறாளே, அவள் என்ன ஊமையா அல்லது செவிடா? அல்லது அவளுடைய சோம்பல்தான் அவளை எழுந்திருக்கவிடாமல் செய்கிறதா? இல்லை அவள் எழுந்திருக்கமுடியாதபடி ஏதேனும் மந்திரம் அவளைக் கட்டிப் போட்டுவிட்டதா?'' என்று கேட்கிறாள்.

 

கடைசியில் ஆண்டாள் ஒரு முடிவுக்கு வந்தவளாக யாருடைய பெயரைச் சொன்னால், தோழி எழுந்திருப்பாளோ அந்த பகவான் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி எழுப்புகிறாள்.

 

''தோழி, நாங்கள் மாயங்கள் செய்வதில் வல்லவனும், மாதவனும், வைகுந்தத்தில் இருப்பவனும் இப்போது கோகுலத்துக்கு வந்து நம்மை எல்லாம் மகிழ்விப்பவனுமாகிய அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடப்போகிறோம்; அவனுடைய அருளைப் பெறப்போகிறோம். வேண்டுமானால் நீயும் எழுந்து எங்களுடன் வா, மார்கழி நீராடி அந்த மாமாயக் கண்ணனைப் பணிந்து வணங்குவோம்'' என்று ஆசை வார்த்தைகள் கூறுகிறாள். அந்த மாயவன் பெயரைக் கேட்டவுடனே தோழி எழுந்துகொள்கிறாள்.

அவளையும் அழைத்துக்கொண்டு ஆண்டாள் தன்னுடைய மற்றொரு தோழியை எழுப்ப அவளுடைய வீட்டுக்குச் செல்கிறாள்.


க.புவனேஸ்வரி    


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்