நாத்திகர்களும் போற்றிய அருட்பெருஞ்சோதி! - தத்துவ பனி பொழிந்த மார்கழி இசைவிழா | Even Atheist also Praised Arutperunjothi - bits from margazhi music festival

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/12/2016)

கடைசி தொடர்பு:13:11 (30/12/2016)

நாத்திகர்களும் போற்றிய அருட்பெருஞ்சோதி! - தத்துவ பனி பொழிந்த மார்கழி இசைவிழா

"தியாகராஜர் கீர்த்தனைகளைப் போலவே, இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ஒவ்வொருவர் மனங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும். நாத்திகர்களின் மனங்களிலும் அவர் குடியிருந்தார்" என நெகிழ்கிறார் வருமான வரித்துறையின் முன்னாள் ஆணையர் செந்தாமரைக் கண்ணன். 

இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளை, தஞ்சை தமிழ்  பல்கலைகழகம் மற்றும் பசும்பொன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா சென்னை, தி.நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஆண்டுதோறும் இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் ஆத்மநாதன் செய்துவருகிறார். இந்த நிகழ்ச்சியில், நாடகம், வில்லுப் பாட்டு, பரதநாட்டியம், சிலம்பாட்டம் என களைகட்டி வருகிறது. இவற்றோடு சான்றோர் பெருமக்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

விழாவில் பேசிய வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி செந்தாமரை கண்ணன், "கடவுள் என்ற சித்தாந்தத்தை இராமலிங்க வள்ளலார் கூறியதைப் போல, வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பரம்பொருளை இந்த பூவுலகில் பிரிதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றால், அருட்பெரும் ஜோதியாக காட்சிப்படுத்துவதைத் தவிர, வேறு எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அது சரியாக இருக்காது.

இந்து மதப் புராணங்களில் கடவுள்களின் திருவிளையாடல்களை பக்தி இலங்கியங்கள் போற்றிப் பாடுகின்றன. புராணங்களைப் பொய் என்று நினைக்கின்றவர்கள், இதுபோன்ற காரணங்களால்தான் நாத்திகத்தின் பக்கம் கவனத்தைச் செலுத்துகிறார்கள். ஆனால், அனைவரும் நம்புகின்ற வகையிலும் கடவுள் மறுப்பாளர்கூட போற்றுகின்ற வகையில் கடவுள் சிந்தாந்தத்தை விளக்கி இருக்கிறார். அவர் அருளிய திருவருட்பாவில் பல வரிகள், பிற மதக் கடவுளுர்களுக்கும் பொருந்தும். 

ஆண்டுதோறும் தியாகராஜர் கீர்த்தனையின்போது, கர்னாடக இசை வல்லுநர்கள் குழுவாக இணைந்து பாடுவதைப் போன்று, அண்மையில் பாரதியாரின் ஐந்து பாடல்களை சென்னையில் உள்ள அவரது வீட்டில் குழுவாக இணைந்து சிலர் பாடினார்கள். அதேபோல், வள்ளலாரின் பாடல்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் ஐந்து பாடல்களை வடலூரிலோ அல்லது சென்னையிலோ ஒன்றாகக் கூடி பாடினால், அனைவர் மனங்களுக்குள்ளும் வள்ளலார் சென்று சேருவார். 'ஒளியாகி, உள்ஒளியாய், உள்ஒளிக்குள் ஒளியாய்' என்று தொடங்கும் பாடலை முதல் பாடலாகவும், 'அருள் பழுத்தோங்கும் கற்பகத் தருவே' என்று தொடங்கும் பாடலை இரண்டாவது பாடலாகவும், 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' என்று தொடங்கும் பாடலை மூன்றாவது பாடலாகவும், 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைக் கிடைத்த' என்று தொடங்கும் பாடலை நான்காவது பாடலாகவும், ' கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பரும் களிப்பே' என்று தொடங்கும் பாடலை ஐந்தாவது பாடலாகவும் இசைக்க வேண்டும். வள்ளலாரின் அனைத்து பாடல்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள முடியாதவர்கள் கூட, இந்த ஐந்து பாடல்களையாவது தெரிந்து வைத்துக்கொண்டால், அது அவரின் அனைத்து பாடல்களையும் அறிந்து வைத்துக்கொள்வதற்குச் சமமாகும்" என்றார் நெகிழ்ச்சியோடு. 

அடுத்ததாகப் பேசிய டெல்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன், இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி விரிவாக பேசினார். அவர் பேசும்போது, "உலகின் இசை குயில் என்று உணரப்பட்ட இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூறாவது ஆண்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.அவரது வாழ்க்கை சரிதம், நம் அனைவருக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியது. அவர் பிறக்கும்போதே இசை ஞானம் பெற்றவராக இருந்தார். தனது 10-வது வயதில், மதுரை சேதுபதி கல்லூரியில் முதல் இசைக் கச்சேரியை தொடங்கினார். அன்றிலிருந்து இறுதி மூச்சு வரையில் அந்த இசைக் குயிலின் பயணம் தொடர்ந்தது. உலகமெல்லாம் இசை மனம் பரப்பினார். 

ஓர் இசைக் கலைஞருக்கு பாரத ரத்னா பட்டம் முதன் முறையாக கொடுக்கப்பட்டது என்றால், அது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மட்டும்தான். மகாத்மா காந்தி ஒரு முறை பேசும்போது, ' எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது பாடல்களை பாடமல், வெறும் வார்த்தைகளாக சொன்னால், அது அவருடைய பாடலை மற்றவர்கள் பாடுவதை விட, மிக இனிமையாக இருக்கும்' என சிலாகித்தார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குறிப்பிடும்போது, ' நான் சாதாரன பிரதம மந்திரி. ஆனால், அவரோ இசையின் பேரரசி' எனப் புகழ்ந்தார். நம்முடைய பாரம்பரியத்தை இன்னும் ஆழமாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதைதான், அவர் நமக்கு ஆழமாக உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார். இதை உணர்ந்து நாம் வாழ வேண்டும்" என்றார். 

- ரா.வளன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்