வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (30/12/2016)

கடைசி தொடர்பு:08:32 (30/12/2016)

தினம் ஒரு திருப்பாவை - 15 எண்ணிப் பார்த்துக்கொள்; எல்லோரும் வந்துவிட்டோம்!#MargazhiSpecial

 

Andal
          


தோழிகள் ஒவ்வொருவராக எழுப்பிக் கொண்டு வரும் ஆண்டாள், அடுத்ததாக எழுப்பச் செல்லும் தோழி, ஆண்டாளுடன் உரையாடுகிறாளே தவிர எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ஆண்டாள் ஒன்று சொல்ல, அந்தத் தோழி பதிலுக்கு ஒன்று சொல்வதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். முடிவில் ஆண்டாள் தாங்கள் எதற்காக அவளை எழுப்புகிறோம் என்று சொன்னதுமே தோழி எழுந்துகொள்கிறாள்.


    எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ.
    சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்,
    வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
    வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக,
    ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
    எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொல்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.


அந்தத் தோழி ஆண்டாளுக்கு மிகவும் பிரியமானவள் போலும். அதனால், 'ஏ, சகியே' என்று அழைக்கும் ஆண்டாள் தொடர்ந்து, 'இனிமையாகப் பேசும் இளங்கிளியே' என்று அழைக்கிறாள். அப்படி செல்லமாக அழைத்து, 'நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்ட பின்பும், நீ இன்னுமா தூங்குகிறாய்?' என்று கேட்கிறாள். ஆண்டாளுக்கு பிரியமான அந்தத் தோழி, அந்தப் பிரியத்தை சலுகையாக எடுத்துக்கொண்டு, ''ஏன் இப்படி என்னை சிலுசிலுவென்று அழைக்கிறீர்கள்? இதோ நான் எழுந்து வந்துவிடுகிறேன்'' என்கிறாள். ஆனாலும் அவள் எழுந்து வரவில்லை என்பதால், ஆண்டாள், ''உன் பேச்சு வல்லமையையும், உன்னுடைய உறுதிமொழியையும் நாங்கள் அறிவோம். எனவே பேசிக்கொண்டே இருக்காமல் சீக்கிரம் எழுந்து வா'' என்கிறாள். அதற்கும் அந்தத் தோழி, ''ஆமாம், நீங்கள்தான்  பேசியபடி நடப்பவர்கள். நான் பேச்சில் மட்டுமே வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன். இப்போது நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்கிறாள். பதிலுக்கு ஆண்டாள், ''நீ ஒன்றும் சொல்லவேண்டாம். உடனே எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டு மார்கழி நீராட வந்தால் போதும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள்'' என்று சொல்கிறாள்.

Andal
''அது சரி, நான் எதற்காக எழுந்து வந்து உங்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டும்?'' என்று கேட்கிறாள் அந்தத் தோழி.
பதிலுக்கு ஆண்டாள் தாங்கள் எதற்காக அந்தத் தோழியை அழைக்கிறோம் என்பதை மிக அழகாகவும் நயமாகவும், ''வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை'' என்று பகவான் கிருஷ்ணரின் மகிமையைச் சொல்கிறாள்.
வல்லானை என்பதற்கு தனக்குச் சமமானவன் என்று பொருள். பகவான் கிருஷ்ணருக்குச் சமமாக யாரைச் சொல்லமுடியும்? ஆனால், அப்படி ஒருவன் தன்னை கிருஷ்ணனுக்குச் சமமாக நினைத்து அட்டகாசம் செய்துகொண்டு இருந்தான்.

 

 
அவன் பெயர் பௌண்ட்ரக வாசுதேவன். அவன் கிருஷ்ணன் போல் வேஷம் போட்டுக் கொண்டு, சங்கு சக்கரங்களை மரக்கட்டையால் பண்ணி அவற்றைக் கைகளில் கட்டிக்கொண்டு, மரக் கருடனைப் பண்ணி அதற்கு வர்ணம் அடித்து, அதில் யந்திரத்தைப் பொருத்திவிட்டான். பிறகு அந்த கருடன் மேல் அமர்ந்துகொண்டு, ''நான்தான் கிருஷ்ணன். என்னைத்தான் எல்லோரும் பூஜிக்கவேண்டும். ஆனால், துவாரகையில் ஒருவன் என்னைப் போலவே வேஷம் போட்டுக்கொண்டு, தான்தான் தெய்வம் என்றும், அனைவரும் தன்னையே வழிபடவேண்டும் என்று சொல்லித் திரிந்துகொண்டு இருக்கிறானாம். அவனை யாரும் நம்பிவிடாதீர்கள். அவனுடைய கர்வத்தை நான் அடக்கிவிடுகிறேன்'' என்று அடிக்கடி கூச்சல் போட்டு யாரையுமே நல்ல காரியங்களையும் தெய்வ வழிபாடுகளையும் செய்யமுடியாதபடி தொல்லை கொடுப்பான். தேவரிஷியான நாரதர் எப்படியோ தந்திரம் பண்ணி அவனைக் கிருஷ்ணனோடு சண்டை போடுவதற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். அவன் மரக் கருடனைக் கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஏறிக்கொண்டு, ஆண்டிகள் ஊதுவதுபோன்ற சங்கை எடுத்து ஊதினான்.


 நாரதர் கிருஷ்ணரிடமும் வந்து விஷயத்தை சொன்னார். கிருஷ்ணர் கருடன் மேல் ஏறிக்கொண்டு வந்து பௌண்ட்ரக வாசுதேவனைப் பார்த்து சந்தோஷப்பட்டான். "நாரதரே, இவன் நம்மைப் போல் வேஷம் போடுவதற்கு எவ்வளவு கலர் பூசிக் கொண்டிருக்கிறான்? சங்கு சக்கரங்களுக்கு எவ்வளவு அலங்காரம் பண்ணியிருக்கிறான்!பார்த்தீரா?" என்று கிருஷ்ணர் கேட்டார்.

இதைக் கேட்டதும் பௌண்ட்ரகன் கோபத்துடன், "உன் கருடனுக்கு என் கருடன் தோற்றவனல்ல. உன் சங்கு சக்கரங்களுக்கு என் ஆயுதங்களான சங்கு சக்கரங்கள் தோற்றவையல்ல. உனக்கு நானும் தோற்றவனல்ல. உனக்கு வெட்கமாக இல்லையா? என் எதிரில் என்னைப் பார்த்தபிறகும் சங்கு சக்கரங்களைக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறாயே. கீழே போட்டு விடு" என்று ஆணவத்துடன் பேசினான்.

 

krishna


    பதிலுக்கு "சக்கரத்தை கீழே போடக்கூடாது, உன் மேலே போடப் போகிறேன்" என்றார் கிருஷ்ணர்.


"உனது சக்கரத்தை என்மேல் போட்டால் அதைப் பொடிப் பொடியாக ஆக்கிவிடுவேன்" என்று கர்ஜித்தான். உடனே கிருஷ்ணர் தன் சக்கராயுதத்தை அவன்மேல் பிரயோகித்தார். பகவானுடைய சக்கராயுதம் அவனது தலையை அறுத்தது. இப்படி தனக்குச் சமமாக நினைத்துக்கொண்டிருந்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவர் கிருஷ்ணர். இதைத்தான் ஆண்டாள், 'வல்லானைக் கொன்றானை' என்று கூறுகிறாள்.


அடுத்ததாக ஆண்டாள், 'மாற்றாரை மாற்றழிக்க வல்லானை' என்கிறாள். மாற்றாரை என்பது மாற்றுக் கருத்துக்களை அதாவது கெடுதலான எண்ணங்களை உடையவர்களை அழிக்கமாட்டாராம். மாறாக அவர்களுடைய கெடுதலான எண்ணங்களை அழிப்பதில் வல்லவராம். ஆனால், அவர் அப்படி நம் மனதில் மாயையினால் ஏற்பட்ட கெடுதலான எண்ணங்களை அழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இன்று நாங்கள் அவர்புகழைப் பாடி வந்திருக்கிறோம். நீயும் சீக்கிரம் எழுந்து வா என்று ஆண்டாள் தன்னுடைய பிரியத்துக்கு உரிய தோழியை அழைக்கிறாள். தன்னிடம் மிகுந்த பிரியம் கொண்டுள்ள ஆண்டாளை இனியும் வாசலில் காத்திருக்கவைக்கக் கூடாது என்று எண்ணியவளாக அந்தத் தோழி எழுந்து வருகிறாள்.


-க.புவனேஸ்வரி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்