புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதையில் 24 மணி நேரமும் பஸ் வசதி

 

 
திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாது, வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அதிலும் குறிப்பாக வார விடுமுறை, அரசு விடுமுறை, பிரமோற்சவம் போன்ற நாட்களில் கூட்டம் அலைமோதும். இது போன்ற நேரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து பக்தர்களின் சிரமங்களைக் குறைப்பது வாடிக்கை. 


குறிப்பாக ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் நாளை மறுநாள் புத்தாண்டு பிறப்பதையொட்டி சிறப்பான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இது தொடர்பாக திருமலை அன்னமய்யாபவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான  நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

  

 


வருகிற ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்தையொட்டி டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களும் கீழ்திருப்பதியிலிருந்து, மேல் திருப்பதிக்குச் செல்வதற்கு  24 மணி நேரமும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக திருமலையில் இரவு 10.30 மணியிலிருந்து விடியற்காலை 3.30 மணிவரை பஸ் போக்குவரத்து இருக்காது. 


இதேபோல்  வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஜனவரி, 6, 7 , 8 மற்றும் 9 ம் தேதிகளிலும் 24 மணிநேரமும் பஸ் வசதி செய்யப்பட்டிருக்கும். இவைத் தவிர நாராயணகிரி கார்டன் அருகே பக்தர்களின் வசதிக்காக சாமியானா போடப்பட்டு  புதிதாக 16 கம்பார்ட்மெண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆண்டுதோறும் இருப்பதால், ஜனவரி 8 மற்றும் 9 ம் தேதிகளில்  மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் 'திவ்ய தரிசன' டோக்கன் வழங்கப்பட மாட்டாது. 
ஜனவரி 1, 8 மற்றும் 9 ம் தேதிகளில் ஆர்ஜித சேவைகள் நடைபெறாது. வி.ஐ.பி. தரிசனமும் கேன்சல் செய்யப்படுகிறது'' இவ்வாறு அவர் கூறினார். பக்தர்கள் இதற்கேற்ப தங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!