புத்தாண்டில் புது வாழ்வைப் பெறுவோம்... அன்னை மரியாவைப்போல..!

உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் பண்டிகை என்றால், அது புத்தாண்டாகத்தான் இருக்க முடியும். இது, சாதி, மதங்களைக் கடந்த அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாகவே அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் நாளில் பலவரும் கோயிலுக்குச் செல்வார்கள்; வேண்டாத விஷயங்களில் இருந்து தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வதற்காக புதிய தீர்மானங்களை, உறுதிமொழிகளை எடுப்பார்கள். 

 அனைத்து மத மக்களாலும் கொண்டாடப்பட்டாலும், கிறிஸ்தவ மதத்தில் மட்டும்தான் 'கிறிஸ்துமஸ்' விழாவுக்கு இணையாகக் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இங்கே கிறிஸ்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் அருட்தந்தை, தஞ்சை டோமி. 

``புத்தாண்டின் முதல் மாதம் ஜனவரி (January). அந்த வார்த்தை, 'Janus' என்னும் ரோமக் கடவுளைக் குறிக்கும் வார்த்தையிலிருந்து வந்தது. இந்தக் கடவுளின் முகம் இரு பக்கங்களை உடையது. ஒன்று, கடந்த காலத்தை நோக்குவதாகவும், இன்னொன்று, எதிர்காலத்தை நோக்குவதாகவும் இருக்கும். ஜனவரி 1-ம் தேதியன்று கடந்த ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகள், நாம் கொண்ட விருப்பங்கள், உறுதிகள் அப்படிப் பார்க்கப்படுகின்றன. அதேபோல வெற்றி - தோல்விகளை மனத்திலிருந்து தியானிக்க அன்னை மரியாள் கற்றுத் தருகிறாள். அன்னை மரியாளைப்போல், புதிய ஆண்டுக்கான விருப்பங்கள், அவற்றை அடைவதற்கான உறுதி என்னும் புதிய நம்பிக்கையை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் ஓர் ஒளியின் நாளாக புத்தாண்டின் முதல் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில் அன்னை மரியாளை நம்புவோர் அனைவரும் முழுமையடைகிறார்கள். 

புதிய ஆண்டுக்கான இலக்குகளை மட்டும் முடிவு செய்தால் போதாது. அவற்றை அடைவதற்கான உறுதியை அடைய, விவிலிய வார்த்தைகளை ஒவ்வொருவரையும் உச்சரிக்கவைத்து; உறுதிமொழியாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. அதனால்தான் புத்தாண்டின் முதல் நாளில், சாதாரண விருப்பங்களை மட்டும்கொண்ட மனிதர்களாக நாம் இல்லாமல், அந்த விருப்பங்களை நிறைவேற்ற உறுதி எடுக்கும் மனிதர்களாக இருக்க இந்த இனிய நாளில் அன்னை மரியாள் நம்மை அனைவரையும் அழைக்கிறாள். நம் அனைவரையும் ஆசீர்வதித்து இந்த ஆண்டில் நமது குடும்பம் மற்றும் குழந்தைகள் நலம், உடல் ஆரோக்கியம், பொருளாதாரம் மேம்பட உதவுகிறாள். அமைதியும் வெற்றியும் பெற செபிப்பதற்கு நமக்கு ஒரு தாயாக மரியாள் துணை நிற்கிறாள். அந்த நம்பிக்கை, இந்த இனிய புத்தாண்டில் நம்மைத் தீமைகளிலிருந்து மீட்டு, வெற்றியடைய உதவும். 

மரியாள் நமக்கு சிறந்த முன்மாதிரியாக உள்ளார். கடவுளின் அருள்தான் மரியாளின் புனிதத் தன்மைக்குக் காரணம். என்றாலும், இறை அருளுடன் முழுமையாக ஒத்துழைத்தவர் என்பதே மரியாளின் பெருமை. இறை வார்த்தையை இதயத்தில் இருந்து தியானித்ததாலேயே இறைவனின் விருப்பம் என்ன என்பதை மரியாளால் கண்டுபிடிக்கவும், வெற்றிபெறவும் முடிந்தது. இந்தப் புத்தாண்டின் முதல் நாளில், அன்னை மரியாளைப்போல இறை வாரத்தைகளை மனதிலிருந்து தியானிப்போம். புது வாழ்வைப் பெறுவோம். மகிழ்ந்து வாழ்வோம். ஒருவருக்கொருவர் உண்மையாக அன்பு செலுத்துவோம். இதையே இந்த ஆண்டின் தீர்மானமாக நாம் முன்மொழிவோம்!" 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 

- ரா.வளன் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!