வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (07/01/2017)

கடைசி தொடர்பு:20:11 (07/01/2017)

வைகுண்ட ஏகாதசி... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்..! #EkadasiSpecial

பெருமாளுக்கு உகந்த நாள் வைகுண்ட ஏகாதசி  

 

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 


பெருமாள்  குறித்து பாடப்பட்ட  நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இப்படி கூறுகிறார் பெரியாழ்வார் . அதாவது, ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்வுற்ற  காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை நம்பி வாழ்வது என்பது உலகத்தின் இயல்பே. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன். ஏனென்றால் 'ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நீ. அதேபோல எனது கடைசி காலங்களில் ஒருவேளை நோயால் அவதிப்படும்போது,  உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன் என்கிறது பாடல் வரிகள். 


எனவே தேவரின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்துகிறது இந்த பாடல். அப்படி தேவரின் நாமத்தை உச்சரிப்பதால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும். அதேசமயம் வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய தினங்களில் உச்சரிக்கும் போது மேலும் அதிகமான பலன்கள் கிடைக்கும். ஏன் வைகுண்ட ஏகாதசிக்கு இவ்வளவு சிறப்பு என்பது குறித்து விளக்குகிறார் சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்.பி.என்.பரசுராமன்


ஞான எந்திரியங்கள் 5. கர்மேந்திரியங்கள்  5. மனசு ஒன்றையும் சேர்த்து பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். (விரதம் மூலம் இறைவனிடம் நெருங்கி வருதலாகும்)
மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வருகின்றன. 'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான  மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது.  இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி'  விரதமென மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள்.


வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?


வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை  அனுசரிப்பது மிகவும் நல்லது.  பிரதமை திதியிலிருந்து பத்தாவது நாளான  தசமியிலும் துவாதசியிலும் ஒரே வேளை உணவைத்தான் உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து நீராடி, பூஜையில் அமர்ந்து அந்தப்பரந்தாமனை மனதில் தியானித்து வழிபடவேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள்,  பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.

 

ஏகாதசியில் வழிபாடு 


பகலில் தூங்காமல் இருந்து, அன்றன்றைக்கு உரிய வேலைகளை கர்மசிரத்தியோடு செய்து முடிக்க வேண்டும். இரவில் விழித்து பகவானின் புகழ் பாடும் பக்திப்பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கண்விழித்து இருந்து பகவானின்  நாமத்தைச் சொல்லும் பாடல்கள், பஜனைகள் செய்து, ஆன்மிகக் கதைகளைப் படித்துக்கொண்டோ பாராயணம் செய்து கொண்டோ மனதை ஒருங்கிணைக்க வேண்டும். 


ஶ்ரீ ரங்கம் தொடங்கி திருப்பதி வரை உள்ள வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற வரிசையில் காத்திருந்து  சொர்க்க வாசல் வழியாகச் சென்று இறையருளைப் பெறுவார்கள். மறுநாள் துவாதசி நாளில்  காலைக் கடன்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து உண்ண வேண்டும். 

 வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல்


என்ன செய்யக்கூடாது?


இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நன்று. ஏனெனில் எந்த வீட்டில் தாய சத்தம் கேட்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க மாட்டாள். அந்த விளையாட்டின்போது, இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன் வெட்டுகிறேன் என கூறிக்கொள்வார்கள். ஒரு தெய்வத்திற்கு உகந்த நாளில் இப்படி அபச குண வார்த்தைகளை கேட்டால் எப்படி இறவனின் அருள் கிட்டும்? சினிமாவுக்கு செல்வார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே. அதேபோல பரமபத விளையாட்டு ஆடும் வழக்கம் உள்ளது. இதையும் செய்யக்கூடாது. 


ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவதாகும்.

 

வைகுண்ட ஏகாதசி பக்தர்கள் வழிபாடு


இதனால் நம் மன அழுக்கைப் போக்கி எண்ணங்களை, தூய்மை அடைய செய்வது மிகவும் எளிதாகும். மனத்தூய்மை அடைந்தாலே, இனிமையான வாழ்க்கை  நமக்கு அமைந்திடும். மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசியின் நோக்கமாகும். மூன்றும் ஒரு நிலையில் இருக்கும்போது நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறிடும்.


எஸ்.கதிரேசன், ஜி.லட்சுமணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்