108 திவ்விய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டுமா?

108 திவ்விய தேசங்களை ஆளும் பெருமாள்  

 

108 திவ்விய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டுமா? இதோ அது பற்றிய செய்திகளின் தொகுப்பை  இப்போது பார்க்கலாம்.'108 வைணவத் திருத்தலங்களையும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும்' என்ற ஆவல் எல்லோருக்கும் இருக்கும். குறிப்பாக, வைணவர்களுக்கு அது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக இருந்துகொண்டிருக்கும். ஆனால், அந்த லட்சியத்தை நிறைவேற்றும்விதமாக ஒரே இடத்தில் அந்தக் கோயில்களின் மூலவர் சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து, நாம் தரிசிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சென்னை வானகரம் ஶ்ரீவாரு கல்யாணமண்டபத்தில்தான் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி 

 

திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள், பத்மாவதி தாயாரின் நெடிதுயர்ந்த சிலைகளும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியைப் பற்றி அதன் அமைப்பாளர் உதயகுமாரை சந்தித்துப் பேசினோம். 'இந்தக் கண்காட்சியை ஏற்கெனவே மதுரையில் நடத்தி இருக்கிறோம். இப்போது சென்னையில் டிசம்பர் 30 -ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 12 நாட்கள் ஜனவரி 10-ம் தேதி வரை நடத்த இருக்கிறோம். இதுவரை 20 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னை மக்களுக்கு இது புதிய அனுபவமாக இருப்பதால், மிகுந்த மனதிருப்தியுடன் வந்து செல்கின்றனர்'' என்றார்.

'' இதை ஏன் நகரின் மையப்பகுதியில் நடத்தக்கூடாது?'' என்று கேட்டோம். இது போன்ற கண்காட்சிகளை திறந்தவெளியில் நடத்துவது சிரமம். மக்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இங்கே நடத்துகிறோம்'' என்றார்.

108 திவ்விய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசித்த அன்பர்கள் சிலரிடம் இது பற்றி கேட்டோம்.

பக்தர்கள்

சம்பத் - சாந்தா தம்பதி, தி.நகர்: நான் ஆஸ்திரேலியாவுல விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது சென்னை தியாகராய நகரில் வசிக்கிறேன். பெருமாள் எனக்கு ரொம்ப இஷ்டம். 77 வயசாகிறது. 108 திவ்விய தேசத்தையும் ஒண்ணா பார்க்கிறது பெரிய பாக்கியம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கிருஷ்ணசாமி மைதிலி: நாங்க ஹைதராபாத்தில் இருக்கோம். எங்க அண்ணா ஃபோன் பண்ணி, 'இப்படி ஒண்ணு நடக்குது. புறப்பட்டு வா'ன்னு சொன்னார். நானும் புறப்பட்டு வந்தேன். வந்ததுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

கிஷோர், அம்பத்தூர்: ரொம்ப நல்லா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. திருப்பதி, பார்த்தசாரதி கோயில், சோளிங்கர்னு பத்து பதினைஞ்சு ஸ்தலங்களுக்குப் போயிருக்கிறேன். ஆனா, இப்படி சேர்ந்தாற் போல் ஒரே இடத்துல பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

பக்தர் மோகன் குடும்பம் மோகன் குமார் பூந்தமல்லி: எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. மூலஸ்தான சிலைகளை  இவ்வளவு நெருக்கமா பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு.

 தேவிகா: எல்லாமே ரொம்ப தத்ரூபமா பண்ணி இருக்காங்க. திருவனந்தபுரம் அனந்தபத்மநாப  பெருமாள் சிலையை முழுவதும் ஒரே சமயத்துல பார்க்க முடியாது. தலை, உடல், பாதம்னு  தனித்தனியாத்தான் பார்க்க முடியும். மத்தபடி இது ரொம்பவே புது அனுபவமா இருந்தது.

 செஞ்சிகிருஷ்ணன்: 108 திவ்ய தேசங்கள்ல 67 திருத்தலங்களைப் பார்த்துட்டேன். பத்ரிநாத்ல  இருக்கிற பத்ரி நாராயணன், சாளக்கிராமம் முக்திநாராயணன் ஆகிய இரண்டும் ரொம்ப  விசேஷமானது. மீதி இருக்கிற பார்க்காத திருத்தலங்களையும் இங்கே குடும்பத்தோட வந்து  பார்த்தோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 

 

வைணவர்கள், பகல் பத்து ரா பத்து அனுசரித்து விரதமிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் கண்காட்சி முக்கியத்துவம் பெறுகிறது. 

108 திவ்விய தேசங்கள் ஒரே இடத்தில்... போட்டோ ஆல்பம்...

...

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!