வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (10/01/2017)

கடைசி தொடர்பு:19:03 (10/01/2017)

உலகில் எங்கிருந்தாலும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலை இரண்டே நிமிடங்களில் சுற்றிப் பார்க்கலாம்! #Vikatan360DegreeVideo

மயிலை கபாலீஸ்வரர்

 

மனம் ஒருநிலைப்பட்டு மனதுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் ஆற்றல் திருக்கோயில் தரிசனத்துக்கு உண்டு. ஒருமுறை திருக்கோயிலை வலம் வந்து அமர்ந்தால்,  கஷ்டங்களை இறக்கி வைத்த உணர்வும், வேண்டியவை நிறைவேறி விட்டது போன்ற  பரம திருப்தியும் கிடைப்பது உறுதி .அப்படியான ஒரு புரதான சிறப்புமிக்க, சென்னையின் பக்தி மணம் கமழும் ( "பக்தி ஸ்பாட்" என அழைக்கப்படும்) மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வாய்ப்பு.
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் புகழப்படும், சென்னை மயிலாப்பூரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த தலம், கபாலீஸ்வரர் திருக்கோயில்.


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமபெருமான், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற ஆலயம். முருகன் வேல் பெற்ற தலம்,  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது.
கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும்.  'கற்பகம்’ என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள். இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம். சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன. அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம். இப்படி பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோயிலை தரிசித்தால் உடல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்,  திருமணம் கை கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

கபாலீஸ்வரர் கோயில் தெப்பகுளம்


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 257-வது கோயிலாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் இத்தலம் 24-வது திருத்தலமாகவும் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்த கோயில், திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற கோயிலாகும்.
இங்கு  கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களையும் ஒரே இடத்தில் காணலாம். இக்கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், தீர்த்தக்குளம் ஆகியவற்றையும் கொண்டு விளங்குகின்றன. இது போன்று இந்த கோயில் பற்றிய பல்வேறு  தகவல்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம். இத்தலத்தின் வரலாற்று சிறப்புகளை கேட்டவாறே, பார்த்திடும் வாய்ப்பு. அதுவும் வெறும் 2 நிமிடத்திற்குள் கோயில்களுக்கு நேரில் சென்று சுற்றிப்பார்த்த இனிய அனுபவத்தை பெறலாம். வாருங்கள் கோயிலை சுற்றிப்பார்க்கலாம்.

 

 

 

வீடியோ: பிரசாந்த்.எஸ், தொகுப்பு: ஜி.லட்சுமணன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்