வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (15/01/2017)

கடைசி தொடர்பு:19:51 (15/01/2017)

காளைகளும்... கடவுள் வழிபாடும் #SaveCulture

வழிபாடு

 

முரட்டுப் பார்வையும், உருண்டு திரண்ட தோரணையான திமில்களும், கூர்மையாக சீவிய கொம்புகளுமாக ஒரு கம்பீரமான விலங்கை அறுதியிட்டுக்கூற நினைத்தால்,  எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லாமல் நம் கண்முன் நிழல் ஆடுவது 'காளைகள்'தான். அந்தக் காளைகளைத் தமிழர்கள் போற்றி வழிபடும் திருநாள் தான் 'மாட்டுப்பொங்கல்'. 'காளை வழிபாடு' நாம் மட்டும் அல்ல, பல்வேறு காலங்களில், பல்வேறு நிலப்பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களும் தெய்வங்களாகப் பாவித்து வழிபாடு நடத்தியிருக்கின்றனர்.

மொகஞ்சதாரோ நாகரிகத்தில் காளைகளின் வழிபாடு:

ஆதிமனிதர்கள்,  இடைக்கற்காலத்தில் காட்டு விலங்குகளாக இருந்த நாய், காளை, சேவல், ஆடு போன்ற விலங்குகளை, புதியகற்காலத்தில், விவசாயத்தில் உதவும் வீட்டு விலங்காக மாற்றியிருந்தனர். தவிர, மேற்கூறிய ஒவ்வொரு விலங்குகளில் காளையை  ஏர்பூட்டி விவசாயம் செய்யவும், நாயைத் தங்கள் பாதுகாப்புக்குக் காவல் புரியவும், கோழி, சேவல், ஆடு போன்றவற்றை உணவுக்காகவும், ஆடு, பசு ஆகியவற்றைப் பால்  உற்பத்திக்கும் பழக்கப்படுத்தியிருந்தனர். அவற்றின்மூலம் வாழ்வு செழித்ததால், அவற்றைத் தெய்வங்களாகப் பாவித்து வழிபட்டனர். இதுதான் சிந்துசமவெளி காலத்திய மக்களின் வாழ்வியலிலும் எதிரொலித்தது. அப்படி, சிந்துசமவெளியில் இருந்த மொகஞ்சதாரோ நகரத்தில் காளைகள் முக்கிய தெய்வமாகக் கருதப்பட்டன. இவற்றை மறைமுகமாக வணங்கும் 'பசுபதி' வழிபாட்டுமுறை நடைமுறையில் இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாறைகளிலும், சுவர் ஓவியங்களிலும் 'காளைகளின்' உருவத்தைப் போன்ற திமிலுடன்கூடிய  'பசுபதியின்' சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. இதில் இருந்து அன்றைய புதியகற்கால மனிதர்களுக்கு காளைகளின் மேல்  இருந்த பக்தியையும் நன்றி உணர்வையும் புரிந்துகொள்ளமுடியும்.

நந்தி தேவர்:

இந்து மத சாஸ்திரங்களின்படி, 'நந்தி தேவர்' என்பவர் காளையின் முகத்தை, தன்னில் தாங்கியிருக்கும் சிவபெருமானின் வாகனக்கடவுள். இவர் பல்வேறு ஆலயங்களில் காளை ரூபத்திலேயே அருள்புரிவதுண்டு. முழுமுதற்கடவுளான சிவபெருமானின் சிவாகமத்தை சிவனிடம் இருந்து பெற்று, பூமியில் வசிக்கும் அத்தனை மக்களுக்கும் வழங்கியவர், எம்பெருமான் நந்திதேவர். இதனால்தான் பல்வேறு சிவாலயங்களில் சிவனிடம் தங்கள் வேண்டுதல்களை  நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக, நந்தியின் காதில் சொல்லி, வழிபடுகின்றனர் பக்தர்கள். இதன்மூலம் தங்கள்வேண்டுதல்களை சிவனிடம் தெரிவிப்பதில் நந்திதேவருக்கு முக்கிய அங்கம் இருப்பதாக நினைக்கின்றனர்.

மேலும் பிரதோஷ காலங்களில் நந்தியின் தலையின் மேல் சிவனார் நடனம் புரிவதாகவும், அதனால் பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுவது சிவபெருமானையே வழிபடுவதற்குச் சமம் என்றும்  சாஸ்திரங்கள் கூறுகின்றன. தவிர, பசுக்களை 'கோமாதாவாகப் போற்றும்' -கோமாதா வழிபாடும் வெகுபிரசித்தம்... இந்து சாஸ்திரங்களில்.

' மாட்டுப் பொங்கல்' எனும் காளை வழிபாட்டு விழா: 

காளை

 பழங்காலம் தொட்டே தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் காளைகளும், பசுக்களும் தெய்வங்களாகவே பாவிக்கப்படுகின்றன.  தமிழகத்தில், தமிழர்கள் ஒவ்வோர் ஆண்டும்  மாட்டுப்பொங்கலின்போது, விவசாயப்பெருங்குடிமக்கள் தங்களின் வாழ்வு  செழிக்கக்  காரணமாய் இருந்த காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர் . இதற்காக,'மாட்டுப் பொங்கலின்'போது காளைகளின் தலையில் உள்ள கொம்புகளைச் சீவி,  நன்கு குளிப்பாட்டி, அதிகாலையில் விவசாய நிலங்களில் நிற்கவைத்து வழிபடுவது வழக்கம். இதன்பின், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவற்றை இறைவனுக்குப் படைத்து, புதுப்பானையில் கால்நடைகளுக்கு முன் பொங்கல் இடுகின்றனர். பின்னர் மாடுகளுக்கு ஆரத்திக்காட்டி, பொங்கலை முதலில் தம் வாழ்வுசெழிக்க உதவிய அந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு உண்ணக்கொடுக்கின்றனர். இதுதான் அன்று தமிழர்கள் படைத்த முதல்விருந்தும் விருந்தோம்பலும்.  தவிர, முக்கியமாக தமிழர்களின் வீரவிளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றைத் தொடங்குவதற்கு முன் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை தங்கள் குலதெய்வமாகக்கருதி வணங்கி, நாள்தோறும் பயிற்சி அளிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் இட்டபின் ஆரம்பிக்கும் வீரவிளையாட்டுக்களில் களம்காணும் காளைகளைப் போருக்கு ஒரு வீரனை வழியனுப்புவதைப்போல் நெற்றியில் திலகமிட்டு அனுப்பிவைக்கும் மரபு இன்றும் தமிழர்கள் மத்தியில் தொன்றுதொட்டு நிலவிவருகிறது.

கர்நாடகா மகரசங்கராந்தியில் காளைகளுக்கு நடக்கும் மரியாதை:

தென் கர்நாடகாப் பகுதியில் மகரசங்கராந்தியின்போது  காளைகளை வணங்கி, தெருக்களில் வைக்கோலில் செயற்கையாக தீயை மூட்டித் தாண்டவிடும் மரபு அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது. தவிர, மகரசங்கராந்தியை ஒட்டி கோயில்களில் நடக்கும் விழாக்களில், தாங்கள் வளர்த்த காளைகளை கூட்டுவண்டியாகக் கட்டி, கோயில்களுக்குச் சென்று மாட்டுச்சந்தை நடத்துவது வழக்கம்.

இந்தியாவில் இருக்கும் நிலவியல் கூறுகளின்படியும், மதக்கோட்பாட்டின்படியும் பார்க்கும்போது நிச்சயம் காளைகள் தெய்வங்களாகப் போற்றப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய நடமாடும் தெய்வங்களைப் போற்றும் ஒவ்வொரு சாமானியனும் மதிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் உற்ற தோழனாக  இருக்கும் காளைகளின் வாழ்வியல் பேணிகாக்கப்பட்டால் மட்டுமே, தமிழர்களின் தொன்றுதொட்ட மாட்டுப் பொங்கல் விழாவும்  ஜல்லிக்கட்டு வழிபாட்டு முறையும் நிகழும்; வருங்கால தமிழ் மக்களுக்கான நல்ல ஓர் ஆரோக்கியமான உணவும் பாலும் எஞ்சியிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.

- ம.மாரிமுத்து,

படம் - வீ.சக்தி அருணகிரி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்