கால்நடைகளைக் காக்கும் மால் வழிபாடு! #MaalWorship

மால் வழிபாடு

தமிழ் சமூகத்தின் எந்த ஒரு பழக்கத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகால தொன்மை இருக்கும். பூச்சூடுவது, பொட்டுவைப்பது தொடங்கி கடவுளுக்குப் படையலிட்டு வணங்குவது வரை நம் சடங்குகள், பண்டிகைகள் அனைத்திலும் தொல்குடி சமூகத்தின் கூறுகள் நிறைந்திருக்கும். பொங்கல் பண்டிகையும் அப்படியான ஒரு பாரம்ர்யமான திருவிழாதான். பொங்கல், ஒரு விவசாயப் பண்டிகை. விவசாயத்துக்கு வலுசேர்க்கும் சூரியனையும் கால்நடைகளையும் போற்றும் திருநாள். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கால்நடைகளைக் கொண்டாடும் விதமான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகள் ஒரு பக்கம் என்றால், ஜலகராட்டம், தேவராட்டம், பூம்பூம் மாடுகள் போன்ற கலை சார்ந்த கொண்டாட்டங்கள் மறுபுறம் இருக்கும். இப்படி, மாடுகளைப் போற்றும் கொண்டாட்டங்களில் ஒன்றுதான் மால் வழிபாடு.

கிருஷ்ணன் கொங்குப் பகுதியில் மால் வழிபாடு பிரபலம். பொங்கலுக்கு மறுநாள் `பட்டிப் பொங்கல்’ எனப்படும் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக, உடுமலைப்பேட்டை அருகே உள்ள பெதப்பம்பட்டி என்ற கிராமத்துக்கு அருகே 'ஆல் கொண்ட மால்' என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு, மாட்டுப் பொங்கல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பெரும் விமரிசையாக `மாலாகோயில் திருவிழா’ கொண்டாப்படுகிறது. இது மால் வழிபாட்டோடு தொடர்புடைய ஆயிரம் ஆண்டுகால பண்டிகையாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

 

மாடுகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது. உலகில் உள்ள பெரும்பாலான பழங்குடிச் சமூகங்களை வேட்டைச் சமூகம் என்றும் மேய்ச்சல் சமூகம் என்று இரண்டு வகையாகப் பிரித்துவிட முடியும். இதில், `மேய்ச்சல் சமூக மக்களே உலக நாகரிகத்தை நிறுவியதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்’ என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்று உலகெங்கும் உள்ள முக்கியமான வணிக வழித்தடங்களை, சாலைகளை உருவாக்கியவர்கள் மேய்ச்சல் சமூகப் பழங்குடிகளே! தமிழகத்தைப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதிகளுமான முல்லைத் திணை மேய்ச்சல் சமூகத்தவர்களிடம் இருந்தது. இவர்களின் கடவுள் மாயோன். `மாயோன் மேய மைவரை உலகம்’ என்பது தொல்காப்பியப் பாடல்.  நம் சங்ககால இலக்கியங்களில் இடையர் மேய்ச்சல் நிலங்களின் வழியே பொருள்வயிற்பிரிவு நடத்தும் தலைவன் வண்டி கட்டிச் செல்வதான பாடல்கள் உள்ளன.

இந்த ஆல் கொண்ட மால் கோயில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு முன் உள்ள புதிர். ஆல் கொண்ட மால் என்ற பெயரைக் கவனியுங்கள்... ஆலமர நிழலில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணன். இது ஓர் இடைச் சிறுவனின் சித்திரத்தைத் தருகிறதுதானே!

இந்தத் திருவிழா உடுமலை, பொள்ளாச்சி, சூலூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெகு பிரபலம். அனைத்து கிராமங்களிலும் இருந்து வண்டி பூட்டிக்கொண்டு வருவார்கள், எல்லா நாளும் வருவோரும் உண்டு... கால்நடைகளின் திருவிழா இது. நிலப்பிரபுத்துவம் இந்த வழிபாட்டை மாட்டுப் பொங்கலுடன் இணைத்திருக்க வேண்டும். இங்கு இன்றும் ஆடப்படும் ஜலகராட்டம், தேவராட்டம் போன்றவை, இதன் பழமைக்கு சாட்சி. இங்கு வணங்கினால் கால்நடை சம்பத்து பெருகும் என்றும், அவற்றின் நோய் குணமாகும் என்றும் நம்பிக்கை. இந்த மூன்று நாட்களும் சுற்று வட்டாரத்தில் பிறக்கும் ஆடு, மாடுகள் கோயிலுக்குத்தான் சொந்தம் என்ற வழக்கு உள்ளது. இப்படி செல்வத்தை பொதுவாக பாவிப்பது முக்கியமானதொரு பழங்குடிப் பண்பாடு. நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு குணமான பின்னர் அவற்றின் மண் பொம்மைகளை வைத்து பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.  இன்று இது ஒரு வழக்கமான கிருஷ்ணன் கோவில் திருவிழா... குடை ராட்டினம், ஜெயண்ட் வீல், டெல்லி அப்பளம், வளையல் கடைகள், துணிக்கடைகள், பொம்மைக்கடைகள்... என்று சோ கால்டு தமிழகத் திருவிழாவாக ஆகிவிட்டது இந்த ஆயிரம் ஆண்டுகால பழங்குடி வழிபாடு!

- இளங்கோ கிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!