வெளியிடப்பட்ட நேரம்: 07:41 (18/01/2017)

கடைசி தொடர்பு:07:48 (18/01/2017)

நவகிரக தோஷம் விலக... நன்மைகள் பெருக! தினம் ஒரு மந்திரம் - 4 #Manthra

தினம் ஒரு மந்திரம்


வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் சுகமாகத்தான் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடி அமைந்திருந்தாலும்கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் செய்வதும். தெய்வ மந்திரங்கள் என்றால் சமஸ்கிருதத்தில் இருக்கும்; அதன் உச்சரிப்பு பிசகாமல் எப்படி  பாராயணம் செய்வது என்ற கவலையே யாருக்கும் வேண்டாம். தமிழிலும் பல அற்புதமான துதிப் பாடல்களும், பதிகங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி, திவ்விய பிரபந்தம் போன்ற வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லலாம்.

அம்மன்

 

இந்த வருடம் மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ஆகஸ்டு மாதம் ராகு - கேது பெயர்ச்சியும், செப்டம்பர் மாதம் குரு பெயர்ச்சியும், டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சியும் நடைபெற உள்ளன. எனவே இந்த வருடம் நடைபெற இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்.

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர் - தரதலித ஹேமாம்புஜ - ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ - ரந்தரசரீம்

'தேவீ, உன்னுடைய வலக் கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது.
இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.

சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.

சிவன்

 


திருஞானசம்பந்தர் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் திருமறைக்காடு என்னும் தலத்தில் இருந்தபோது, பாண்டிய மகாராணி மங்கையர்க்கரசியாரிடம் இருந்து திருஞானசம்பந்த பெருமானுக்கு அழைப்பு வருகிறது. சைவம் துறந்து சமணம் சார்ந்த பாண்டிய மன்னை திரும்பவும் சைவத்துக்கு மாறச் செய்யவேண்டும் என்பதுதான் அழைப்புக்கான காரணம்.

உடன் இருந்த திருநாவுக்கரசர் பெருமானுக்கு உள்ளுக்குள் கலக்கம். திருஞானசம்பந்தக் குழந்தை மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் சமணர்களால் எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினார். மேலும் அப்போது கிரகநிலைகளும் சாதகமாக இல்லை. எனவே, அப்போதைய கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று கூறி, திருஞானசம்பந்தரை மதுரைக்குப் போகவேண்டாம் என்று தடுத்தார். ஆனாலும் பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்ற காரணத்துக்காக மதுரைக்குச் செல்ல விரும்பிய திருஞானசம்பந்தர், எல்லாம் வல்ல இறைவன் நமக்கு பக்கத் துணை இருக்கும்போது, நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை சிவபெருமான்என்று கூறி, கோளறு பதிகம் பாடி திருநாவுக்கரசர் பெருமானை சமாதானம் செய்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கவும் செய்தார்.

திருஞானசம்பந்தர் பெருமானின் கோளறு பதிகத்தை முழுவதும் பாராயணம் செய்யாவிட்டாலும், இங்கே உள்ள இந்தப் பாடலை மட்டுமாவது பாராயணம் செய்யலாம்.


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்