வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (18/01/2017)

கடைசி தொடர்பு:09:23 (19/01/2017)

கால்நடைகளுக்கு கோசாலை! மிருக நலனில் தமிழர்களின் அக்கறை #SaveOurCulture

கோசாலை

பண்டைய தமிழர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும், பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் பிழைக்கவேண்டும் என்ற திட்டமிடலும் செயல்வடிவமும் இருந்திருக்கிறது என்றால் தங்களால் நம்பமுடிகிறதா? ஆனால், அது தான் ஆணித்தரமான உண்மையும் கூட. ஆம். அசலான நாட்டுமாடுகளையும் பசுக்களின் மரபு இனங்களையும் காக்கவேண்டும் என்ற நுண்ணறிவில் தான்  கோசாலைகளும், காளைகளைப் பராமரிக்கும் கூடங்களும் கோயில்களில் நிர்மாணித்துஇருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.


பன்னெடுங்காலம் முன், மூவேந்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்  பல  ஊரின் மிகப்பெரிய கட்டடப்பரப்பாக இருந்திருக்கின்றன. அப்படி  பரந்துபட்டு கட்டப்பட்டகோயில்கள் வழிபாட்டுக்கு மட்டும் இருந்திருக்கவில்லை. தானியங்கள் மற்றும் விருட்சங்களைப்பாதுகாக்கும் களஞ்சியமாகவும், மருத்துவம்  பார்க்கவும்,  ஆநிரைகளைப் பாதுகாக்கும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது என்றால், அது மிகையில்லாத உண்மை.


'கோசாலை' என்னும்  நாட்டுக்காளைகள் மற்றும் பசுக்களின் புகலிடம்:


     ஒவ்வொரு கிராமத்திலும் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் வைத்திருக்கும் தொழுவத்தில்  பிறக்கும் முதல் காளைக்கன்றையோ அல்லது  மாட்டுப்பொங்கலின்போது பிறக்கும் காளைக்கன்றுகளையோ  கோயிலுக்கு நேர்ந்துவிடும் பழக்கம் தமிழகத்தில் நிலவிவந்துள்ளது.தவிர, தங்களின் நேர்த்திக்கடன் நிறைவேறும் பட்சத்தில் பசுக்களையும் நாட்டுக்காளைகளையும் தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றிய இறைவனுக்குத் தானமாக வழங்குகின்றனர், தமிழ்மக்கள்.  இப்படி நேர்ந்து விடப்படும் காளைகள்தான் 'கோயில் காளைகள்' என மக்களால் பரவலாக அழைக்கப்படுகின்றன.   இந்த  ஆநிரைகளுக்கு  உண்டான உணவு கோயிலில் காணிக்கையாக கிடைக்கும் தானியங்களில் இருந்தும்,  கோயிலுக்குச் சொந்தமான விவசாயநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன. இவை  கோயில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதி ' கோசாலை' என அழைக்கப்படுகிறது.

 

கோசாலை


'கோசாலை' அமைத்த தமிழர்களின் நுண்ணறிவு:


         இப்படி  கோயில்களில் நிர்மாணிக்கப்பட்ட 'கோசாலைகளில்' நாட்டுக்காளைகளும் பசுக்களும் பேணிப்பாதுக்காக்கப்படுகின்றன. இவை அமைக்கப்படுவதற்கு உண்டான முக்கிய நோக்கம் என்னவென்றால், கறவைக்கோ அல்லது உழவுக்கோ பயன்படாத நிலையில் இருக்கும் பசுக்களையும் காளைகளையும் வறுமையின் காரணமாக  பணத்துக்காக  அடிமாடுகளாக விற்கும் அவலம் நேரிடலாம். அப்படி ஒரு அவல நிலை நம்முடைய வழிபாட்டுக்கு உரிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் ஏற்படாமல் இருக்கவே, கோயில்களில்  'கோசாலை' அமைக்க ஆவன செய்து உள்ளனர், பழந்தமிழர்கள்.


கோசாலையில் இருக்கும் ஆநிரைகள் நமக்கு எப்படி பயன்பட்டன?
         முன்னர், தமிழர்கள்  கோசாலையில் இருக்கும் வாய் இல்லா ஜீவன்களான  நாட்டுக்காளைகளை மிகமுக்கியமாக இனவிருத்திக்காகவும், ஜல்லிக்கட்டின் போது களமிறக்கியும் பெருமை சேர்த்துள்ளனர். 


 'ஊர்க்காளைகள்' என்று ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே சில காளைகளைப் பிரத்யேகமாக பெற்ற பிள்ளைகளைப்போல் வளர்த்துள்ளனர்.  இதன்மூலம் மறைமுகமாக நாட்டுப்பசுக்கள் மற்றும் காளைகளின் இனத்தைக் கட்டிகாத்து உள்ளனர். இதனால் அவர்களுடைய வாழ்நாள் காலம் 100 ஆண்டுகளைத் தாண்டியும் நிலைபெற்று இருந்தது. ஆனால், தற்போது கலப்பின மாடுகளின் வருகையால் நம் மக்களின்  ஆரோக்கியம், தற்போதைய பணப்புழக்கத்தைப் போல் சரிந்துள்ளது என்பது மட்டும் தவிர்க்கமுடியாத உண்மையாகி நிற்கிறது. 


    பழந்தமிழர்கள் வகுத்துள்ள மரபுகளிலும், நம் சந்ததியினர் வாழ்வதற்குத் தேவையான அடிநாதம் ஒளிந்துஇருக்கிறது. இனியாவது, அதைக்கண்டறிந்து நம் மரபுகளில் இருக்கும் உன்னதத்தை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். அதைப் புரட்சிக்கான விதையாக உச்சஸ்தாயிலில் ஒலிக்கவிடவேண்டும்.  கால்நடைகளைப் பாதுகாக்க, ஆன்மிகத்தில் வழிமுறைகளைச் செய்திருந்தது  நம் தமிழ்ச் சமூகம். அந்த, வழிவகையில் வந்த இன்றைய மரபுத் தமிழர்கள் எப்படி அந்த அறத்தை மீறத்துணிவார்கள்?


   ' விதைத்தவனுக்கே...நாற்று நடும் முறையை, புதிதாக சொல்லிக்கொடுப்பது எவ்வகையில் நியாயம்'. இனியாவது, தமிழ்கூறும் நல்லுலகம் நம் பாரம்பர்யத்துக்காக ஒன்றுபடும் தருணம் இது.

  - ம.மாரிமுத்து ,

படம் - க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிகையாளர்)
      
     
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்