கண்பார்வைக் குறைபாடுகள் நீங்க..! தினம் ஒரு மந்திரம் - 5 #Manthra

ண்கள் இறைவன் மனிதர்க்கு அருளிய பெருங்கொடை. கண்கள் இருந்தால்தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்கமுடிவதுடன், பல விஷயங்களையும் கற்றும் அனுபவித்தும் புரிந்து தெளிய முடியும். கண்கள் இருந்தால்தான், இறைவனின் பல திருக்கோலங்களை நம்மால் தரிசித்து வழிபடமுடியும். கண்கள் இல்லையென்றால், நம்மால் எதையுமே அதன் உண்மைத் தன்மையுடன் அறிந்துகொள்ள முடியாது. கோயிலில் பிரதிஷ்டை செய்யும் தெய்வ விக்கிரகங்ளுக்குக் கண்கள் திறக்கும் வைபவம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதில் இருந்தே நாம் கண்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மந்திரம்

 

நம்மில் பலருக்குக் கண்பார்வையில் சிற்சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.

அந்த ஸ்லோகம் இதுதான்.

லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:

மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா: |

ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:

உன்மீலனேன தவ தேவி நிமீலனேன ||

இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.

தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது. காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.

என்ன ஒரு அழகான உவமை அம்பிகையின் நீண்ட திருநயனங்களுக்கு?!

இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யமுடியாதவர்கள், காஞ்சிபுரத்தில் அருளும் அருள்மிகு ஏகாம்பரநாதர்பேரில் பதிகம் பாடி ஒரு கண்ணின் பார்வையைப் பெற்ற சுந்தரரின் பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

மந்திரம்

தம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரர்திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்துகொண்டவர், திருவொற்றியூருக்கு வந்தபோது, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதை மறைத்து, அங்கிருந்த சங்கிலிநாச்சியாரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், சங்கிலிநாச்சியார் இறைவனை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அப்படியே இறைவனின் உத்தரவின்படி கோயிலில் இருந்த மகிழமரத்தை சாட்சியாக வைத்து சங்கிலிநாச்சியாரை திருமணம் செய்துகொண்டார்.

பிறகு சங்கிலிநாச்சியாரைப் பிரிந்து செல்ல எண்ணியபோது, இறைவன் சுந்தரரின் கண் பார்வையைப் பறித்துவிட்டார். தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், காஞ்சிபுரம் தலத்துக்கு வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்து, 'ஆலம்தான் உகந்து அமுது செய்தானை' என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அதன் பயனாக ஒரு கண்ணில் பார்வை பெற்றார். மற்றொரு கண் பார்வையை திருவாரூரில் பெற்றார் என்பது சுந்தரரின் வாழ்க்கை வரலாறு.

சுந்தரர் காஞ்சியில் பாடிய பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்து, இறைவன் அருளால் கண் பார்வையில் உள்ள குறைபாடுகள் நீங்கப்பெறலாம்.

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை

ஆதியை அமரர் தொழுதேத்தும்

சீலம்தான் பெரிதுமுடையானை

சிந்திப்பாரவர் சிந்தையில் உள்ளானை

ஏலவார்க் குழலாள் உமையம்மை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானை

காணக் கண் அடியேன் பெற்றவாறே.

மிகவும் அற்புதமான சக்தி வாய்ந்த பாடல் இது. அன்பர்கள் இந்தப் பாடலை மட்டுமாவது பாராயணம் செய்து பலன் பெறலாம்.

- எஸ்.கண்ணன்கோபாலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!