கிருஷ்ணர் விளையாடிய ஜல்லிக்கட்டு.. 7 காளைகளை அடக்கிய எழில் மாயோன்..! #Jallikattu | Lord Krishna played Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (20/01/2017)

கடைசி தொடர்பு:13:17 (20/01/2017)

கிருஷ்ணர் விளையாடிய ஜல்லிக்கட்டு.. 7 காளைகளை அடக்கிய எழில் மாயோன்..! #Jallikattu

                                     ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்னும் ‘ஏறு தழுவுதல்’ தொன்றுதொட்டு இருந்து வரும் தமிழர்தம் வீர விளையாட்டு ஆகும். இந்த வீரவிளையாட்டுக்கு இலக்கியங்களிலும், புராணங்களிலும் சான்றுகள் காணப்படுகின்றன.

முல்லைக்கலியில் ஆயர் மகளை மணந்துகொள்ளவேண்டும் என்றால் ஏறு தழுவுதல் என்ற வீரவிளையாட்டில் வெற்றி பெற்றால்தான் முடியும். இதைப் பற்றி கலித்தொகை முல்லைக் கலியில்

“எளியவோ ஆய் மகள் தோள்?
விலை வேண்டார் , எம் -இனத்து  ஆயர்  மகளிர் –
கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்...'' என்று புலவர் நல்லுருத்திரனார் பாடி இருக்கிறார்.

அப்படி  கண்ணனும் ஏறு தழுவிதான் காதல் கொண்ட ஒரு பெண்ணை மணந்தான் எனக் கூறப்படுகின்றது. ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில், 'நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்' என்றும், 'கொத்தலர் பூங்குழல் நப்பின்னை' என்றும், 'செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்' என்றும் குறிப்பிடும் நப்பின்னைதான் அந்தப் பெண்.

இலக்கியங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் நப்பின்னை கண்ணனின் தேவியரில் ஒருத்தியாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறாள். கண்ணன் இவளை ஏறு தழுவி திருமணம் செய்துகொண்டதைப் பற்றி,

''மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று தம்முடைய பெரிய திருமொழியில் நம்மாழ்வார் குறிப்பிட்டு இருப்பது, நப்பினையின்மேல் உள்ள காதலால், ஆயர்குல வழக்கப்படி கண்ணன் ஏறு தழுவி அவளைத் திருமணம் செய்துகொண்டதைக் குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாழ்வார், 'பின்னை மணாளனை' என்று நப்பின்னையை கண்ணன் திருமணம் செய்துகொண்டதைப் பாடுகிறார்.

திருமங்கை ஆழ்வாரும் நப்பின்னையை கண்ணன் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி பின்வருமாறு பாடி இருக்கிறார்.

''இன் துணை பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன்
நற் புவி தனக்கு இறைவன்,
தன் துணை ஆயர் பாவை
நப்பின்னை தனக்கு இறை ,
மற்றையோர்க்கெல்லாம் வன் துணை ..”

திருமாலுக்கு மூன்று தேவியர் இருக்கின்றனர். திருமகள், பூமிதேவி, நீளா தேவி என்பவரே அந்த மூன்று தேவியர். இந்த மூன்று தேவியரைப் பற்றிய சூக்தங்களில் நீளா தேவியைப் பற்றிய சூக்தத்தில்,'நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள்; பூமியில் உள்ளவர்களுக்கும் விண்ணில் உள்ளவர்களுக்கும் ஏற்படக்கூடிய துன்பங்களைப் போக்குபவள் என்று கூறப்பட்டு உள்ளது.

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதைகூட, நப்பின்னையை கண்ணனின் மாமன் மகளாக குறிப்பிட்டு பாடுவதாக பெரியாழ்வார் பாடி இருக்கிறார்.

“பூணித் தொழுவினிற் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி 
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் 
நாண் இத்தனையும் இலாதாய்! நப்பின்னை காணிற் சிரிக்கும் 
மாணிக்கமே என் மணியே!  மஞ்சனம் ஆடநீ வாராய்!

சிறுவனான கண்ணன் புழுதியில் விளையாடி உடல் முழுவதும் புழுதியை அப்பிக் கொள்கிறான். அவனுடைய அந்த அழுக்கு திருக்கோலத்தைப் பார்த்தால் கேலி பேசி சிரிப்பாள். எனவே அழுக்கு போக குளிக்க வா கண்ணா என்று யசோதை அழைப்பதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்.

                                         கிருஷ்ணர்

சரி, நப்பின்னை திருமாலின் மூன்று தேவியரில் ஒருத்தியான நீளாதேவி என்பதைத் தெரிந்துகொண்டோம். அவளை கண்ணன் திருமணம் செய்துகொள்வதற்கு ஒரு காளையை அல்ல, ஏழு காளைகளை அடக்கினான்.

அந்த புராண கதையைப் பார்ப்போம்...

யசோதையின் சகோதரன் கும்பகன். அவனுடைய மகள்தான் நப்பின்னை. கும்பகன் என்பவன் மிதிலை நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாகவும், அங்கிருந்த ஆயர்களுக்கு தலைவனாகவும் இருந்தான்.

அவனுக்கு ஒரு சோதனை வந்தது. ஏழு காளைகள் அவனுடைய நகரத்தில் புகுந்து, அங்கிருந்த பசுக்களையும், காளைகளையும் அடித்துக் கொன்றது. இது பற்றி மக்கள் கும்பகனிடம் முறையிட்டனர். அவனால் ஆன அந்த ஏழு காளைகளை விரட்ட முடியவில்லை. அப்போதுதான் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி அந்த ஏழு முரட்டுக் காளைகளை எவன் அடக்குகிறானோ அவனுக்கே மிக்க பேரழகு கொண்ட தன் மகள் நப்பின்னையை திருமணம் செய்துகொடுப்பதாக அறிவித்தான்.

ஆனால், யாராலும் அந்தக் காளைகளை அடக்கவே முடியவில்லை. தன் தேவியரில் ஒருத்தியான நீளாதேவிதான் நப்பின்னை என்பது கண்ணனுக்குத் தெரியாதா என்ன? மேலும் அந்த ஏழு காளைகளும் யார் என்பதும் கண்ணனுக்குத் தெரிந்த விஷயம்தான்.

அந்த ஏழு காளைகள் காலநேமி என்ற அசுரனின் பிள்ளைகளாக இருந்தவர்கள். தேவர்களுடன் ஏற்பட்ட போரில் தோல்வி அடைந்த அந்த அரக்கர்கள், தங்கள் தோல்விக்குக் காரணமான திருமாலை எப்படியாவது கொல்லவேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தனர். திருமால் கண்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்வதைக் கண்டு, தாங்கள் ஏழு காளைகளாக வந்து அவனை அழிப்பதற்காக கும்பகனின் நகரத்தை அடைந்து அட்டூழியம் புரிந்தனர். 

காளைகள் வடிவில் வந்திருக்கும் அந்த ஏழு அரக்கர்களையும் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் கொல்வதுடன், தன் மனதுக்குப் பிரியமான நப்பின்னையை திருமணம் செய்துகொள்ள விரும்பிய கண்ணன் கும்பகனின் நகரத்துக்கு வந்து காளைகளை அடக்கி, அதற்குப் பரிசாக நப்பின்னையை திருமணம் செய்துகொண்டான்.. 

- எஸ்.கண்ணன் கோபாலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்