பசு பாசத்தாய்... பரிவுகாட்டும் சாமி! #SaveOurCulture | Cow is an affectionate mother... most sympathetic god

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (21/01/2017)

கடைசி தொடர்பு:13:57 (23/01/2017)

பசு பாசத்தாய்... பரிவுகாட்டும் சாமி! #SaveOurCulture

சு பாசத்தாய், பரிவுகாட்டும் சாமி. காளைகள் சிவனின் வடிவம் என்றால், பசுக்கள் சக்தியின் வடிவம். பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அஷ்ட திக்கு பாலகர்களும் வாசம் செய்கிறார்கள். கோயில்கள், குளங்கள் என நாம் எங்கும் சென்று வழிபடத் தேவையில்லை. பசுவை வணங்கினால் போதும், அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வது போலாகும்.

பசு பாசத்தாய்

பசு வழிபாடு, காளை வழிபாடு, இன்றைக்கு நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது. வேட்டை வாழ்க்கைக்கு முடிவுகட்டி நதிகளின் கரைகளில் வாழத் தலைப்பட்ட நாள் முதலாகவே இந்தப் பசு வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. பசு, பாசத்தாய்,பரிவுகாட்டும் சாமி.

கிர் மாடு

ஆன்மிக மண்ணான இந்திய மண்ணில்  வட இந்திய பசு வகைகளான காங்கிரேஜ், சிந்து, தார்பார்க்கர், கிர், சாஹிவால்  போன்ற பசுக்களும், தென் இந்திய வகைகளான ஓங்கோல், புங்கனூர், உம்பளாச்சேரி, காங்கேயம் பசுக்களும் நம் மண்ணின் பாரம்பர்யத்தையும் பெருமையையும் பேசுபவை.  உலகில் வேறெங்கும் நிலவிடாத தட்பவெப்ப சூழ்நிலைகளும், ஆறுகளும், தாவரங்களும் நம் இந்தியத் துணைக் கண்டத்தில் இருப்பதால், இங்கு வளரும் நாட்டுப் பசுக்களின் பயன்கள் அளவிடமுடியதாவை. பச்சிளங்குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பாலுக்கு மாற்றாக பசுவின் பால் குழந்தைகளுக்குக் கொடுத்து வளர்ப்பதால்தான், பசுவை இன்னொரு தாயாகவே வணங்குகிறோம்.

நாட்டுப் பசுவின் பால்,  தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடை, ஐஸ்க்ரீம் என எண்ணற்ற பால் பொருட்களை மக்களுக்குத் தருகிறது. இவற்றின் சுவையும் மணமும் அலாதியானவை. கலப்பினப் பசும்பாலில் இத்தகு நன்மைகள் கிடையாது. நாட்டுப் பசுவின் பால்பொருட்கள் சாத்விக குணத்தையே  நமக்குள் உண்டுபண்ணும் குணம் வாய்ந்தவை. இது தியானத்துக்கும், யோகத்துக்கும், மோட்ச சாதனைகளுக்கும் பெரிதும் உதவுபவையாகும். நெய்யினால் பல பட்சணங்கள், சுவையான சமையல் வகைகளை பண்டிகைக் காலங்களில் செய்யலாம். ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் குணம் நாட்டுப்பசு நெய்க்கு உண்டு. நாட்டுப்பசுவின் சாணம்,  நம் விவசாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக முக்கிய பங்கை வகித்து வருகிறது. நல்லதோர் இயற்கை உரம், எரிபொருள், பூச்சிக்கொல்லி மருந்து என  வயல்களிலும் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.  

வெண்மைப் புரட்சியின்  விளைவாக நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துபோனதால், இன்று நாட்டு மாடுகளைத் தேடிப்போக வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, 'பசுமைப் புரட்சி' என்ற பெயரில் ரசாயன உரங்களும் நம்மண்ணை மலடாக்கிப் போட்டுவிட்டன.

மணப்பாறை மாடு

பூமித்தாய் பெரிதும் விரும்புவது நாட்டுப் பசுஞ்சாணத்தைத்தான். அதை உரமாகப் போட்ட நிலங்களில் செடிகள்,  மலர்கள், மரங்கள் செழிப்பாக வளர்வதே சாட்சி! அதனால்தான், பசுஞ்சாணத்தில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பசுஞ்சாணம்  நம் மண்ணுக்கு மிக பெரிய பிரியமான ஐஸ்வர்யம்.

நாட்டுப் பசுஞ்சாணத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது அதனின்று வெளிவரும் புகை அனைத்துப் பூச்சிகளையும் விரட்டும். பசுஞ்சாணத்தால் மெழுகிய வீடுகள் குளிர்காலத்தில் குளிருக்கு இதமாகவும் கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான்  ஆன்மிகப் பெரியோர்கள், 'வீட்டில் சாண வரட்டி வைத்து ஹோமம் செய்வது விசேஷ பலனைத் தரும்' என்கிறார்கள். ஹோமம் எங்கு நடந்தாலும், அங்கு அவசியம் போய் வருவது நல்லதென்பார்கள். 

ரெட் சிந்தி

ஓர் அளவுக்கு மேல் பசுஞ்சாண வரட்டிகளில் நெருப்பு உஷ்ணம் திடுமென உயர்வதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவேதான் அதைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகள், பதமாக சமைக்கப்பட்டு, முக்கியமான சத்துக்கள், வைட்டமின்கள், உயிர்ச்சத்துக்கள் அழிவதில்லை. அளவுக்கதிகமான உஷ்ணம் இருந்தால், சமைக்கப்படும் காய்கறி, பருப்பு வகைகளிலிருந்து நமது உடலுக்குச் சேர வேண்டிய  தாது உப்புகள், வைட்டமின்கள்  மடிந்து போகும். அவற்றை உண்பதால், யாதொரு பயனுமில்லை. சக்கையை உண்பதாகவே அர்த்தம். இத்தனை சிறப்பு வாய்ந்த வரட்டியின் பயன்பாடு இப்போது கிராமங்களில் கூட இல்லாமல் போய்விட்டது. திருநீறு, பல்பொடி, ஊதுபத்தி  போன்ற பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

நாட்டுப்பசுவின் சிறுநீர் மருத்துவ குணமுடையது.  மருத்துவ மற்றும் ஆன்மிக காரியங்களில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. நாட்டுப் பசுவின் சிறப்பே அது தரும் பொருட்களால்தான். பசுக்களைப் போல்  உதவுபவை வேறெவையும் இல்லை. பசுவைப் போலவே காளைகளும் நமது விவசாயத்தில் ஏர் உழுவது, வண்டி இழுப்பது, அறுவடையில் தானியங்களைப் பிரிப்பது என பலவற்றுக்கும் பயன்படுகிறது. விவசாயத்தின் முதுகெலும்பே மாடுகள்தான். இத்தனை நலம் தரும் பசுக்கள் வயலில் நாம் வேண்டாமென ஒதுக்கும் வைக்கோல், சோளத்தட்டு புல், தவிடு, அரிசி களைந்த நீர் போன்றவற்றை சாப்பிட்டே உயிர் வாழ்கின்றன. இதனால்தான் பசுவை இன்னொரு தாய் என்று போற்றிவழிபடுகின்றோம்.


- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்