வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (23/01/2017)

கடைசி தொடர்பு:11:34 (24/01/2017)

வழிகாட்டிய காளையை வழிபடுவோம்! #SaveOurCulture

காளைகள் வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்க்கையில் தொன்மைக் காலம் முதலே இருந்து வருகிறது. காளைகள் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரின் அம்சமாக போற்றுகிறோம். காளைகளின் தெய்வப் பிரதிநிதியாகத் திகழும் நந்திதேவர் , தம்பிரான் தோழர் என்று சிறப்பித்துப் போற்றப்படும் சுந்தரருக்கு வழிகாட்டிய வரலாற்றையும், தெய்வப் பசுவான காமதேனு இறைவனை வழிபட்ட வரலாற்றையும் இங்கே பார்ப்போம்.

காளை 


காளையார்கோயில், சிவகங்கை மாவட்டம்:


சமயக்குரவர் நால்வர்களில் ஒருவரான சுந்தரர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதரை தரிசித்து விட்டு, காளையார்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். ஆனால் ஊரின் எல்லை வந்ததும், வழியெங்கும் சிவலிங்கங்களாக இருப்பதைப் பார்த்து, எப்படி அவற்றின்மேல் கால் வைத்துச் செல்வதென  திகைத்து நின்றார். தன் நிலையை விவரித்து இறையனாரை நினைத்து, கசிந்துருகி தேவாரம் பாடினார். இறையனார் தனது வாகனமான காளையை அனுப்பி வைத்தார். சுந்தரர் இருக்குமிடம் வரை வந்த அந்தக் காளை அவரை வரவேற்கும் விதமாக தலையை ஆட்டி மீண்டும் கோயில் நோக்கிச் சென்றது. அப்போது வானத்தே ஓர் அசரீரி கேட்டது. 'காளை கால் தடம் பதித்துச் செல்லும் இடங்களில் லிங்கங்கள் இல்லை' என்று அந்த அசரீரி கூறியது. அதன் பிறகு சுந்தரர் காளையின் கால்தடத்தைப் பின்பற்றிச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அது முதல் அந்த ஊர் காளையார்கோயில் என இன்றளவும் அழைக்கப்படுகின்றது.

 

காளையார் கோயில் 


புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர்:


சுந்தரர் ஒருமுறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தி தலத்துக்கு வருகை தந்தார். திருஞானசம்பந்தர் பாடியதும், நாவுக்கரச பெருமான் பதிகம் பாடி உழவாரப் பணி செய்த பெருமை படைத்ததுமான அந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், திருஞானசம்பந்தரர் ஒருமுறை இந்தத் திருத்தலத்துக்கு வந்திருந்தார். நாவுக்கரசரான அப்பர் திருவடிகள் பட்ட மண்ணில் தன் கால்கள் மிதிக்கக்கூடாது என்று நினைத்த சுந்தரர், வெளியில் இருந்தபடியே இறைவனை வணங்க விரும்பினார். சுந்தரரின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்ட ஈசன், நந்தியை சற்றே விலகி இருக்கும்படி கூறி, சுந்தரர், தம்மை வழிபட அருள்புரிந்தார். 

 

 


பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர்: 


பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட காமதேனு பசுவுக்கு, பிரம்மனைப் போல் படைக்கும் தொழிலில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டது. சிவபெருமானை நோக்கி தவமிருந்தது. நாரதர்  தட்சிண கயிலாயம் என்று அழைக்கப்படும் பேரூர் சென்று தவமிருக்கும்படி  ஆலோசனை கூறினார். அதன்படி காமதேனுவும் அதனுடைய கன்றுக்குட்டியும் பேரூர் சென்று நடராஜரை வழிபட்டனர். ஒவ்வொரு நாளும் புற்றிலிருந்த லிங்கத்துக்கு தன் மடியில் இருந்து பாலை சொரிந்து  பாலாபிஷேகம் செய்து வணங்கியது. அப்படி வணங்கிய போது கன்றுக்குட்டியான பட்டியின் கால் புற்றில் சிக்கிக் கொண்டது. கன்றை விடுவிக்க கொம்பால் புற்றை இடித்தது. அப்போது ரத்தம் பெருகியது. இதைக் கண்டு காமதேனு திகைத்து நிற்க... இறைவன் காட்சி அளித்தார். இது முக்தி தலம் என்பதால் சிருஷ்டி ரகசியத்தை இங்கே சொல்வது தகாது என்று  கூறி திருக்கருகாவூர் வர ஏகினார். 'பட்டி' எனும் கன்றின் கால்கள் சிக்குண்டதால் அது முதல் அந்த ஊர் பட்டிபுரி என்றே  அழைக்கப்படுகிறது.


ஆக, புராண இதிகாசங்களில் மட்டுமல்லாமல், திருக்கோயில்களின் தலவரலாறுகளில் இருந்தும் காளைகளும், பசுக்களும் நமக்கு எப்படி எல்லாம் துணை நின்று உதவி புரிகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். காளைகளையும் பசுக்களையும் காப்பாற்றுவோம்; போற்றி வழிபடுவோம்.


எஸ்.கதிரேசன்
 

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்