வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (27/01/2017)

கடைசி தொடர்பு:08:36 (27/01/2017)

கவனித்தல் மேதையாக்கும்! ஒரு கதை ஒரு நீதி - 2

‘கற்க கசடற’ என்கிறது திருக்குறள். கவனித்தல், கல்விக்கு அத்தனை முக்கியம். கல்வி, கலைகள், பயிற்சிகள்... எதுவாகவும் இருக்கட்டும். கூர்ந்து கவனித்துக் கற்பவன் மட்டுமே அதில் மேதையாக முடியும்; சாதனை புரியவும் முடியும். அதற்கு உதாரணம், அர்ஜூனன். ‘வில்லுக்கு விஜயன்’ எனப் பெயர் எடுத்தவன்... குரு துரோணாச்சாரியாரின் அன்புக்கு பாத்திரமானவன்... அவரின் அத்யந்த சிஷ்யன். அதனாலேயே பலரின் காழ்ப்புக்கும், சிலரின் வெறுப்புக்கும் ஆளானவன். ஒருவன் திறமைசாலியாக மிளிர கவனித்தல் திறன் எவ்வளவு அவசியம் என்பதை துரோணர், மற்றவர்களுக்கு உணர்த்திய சம்பவம் ஒன்று உண்டு. 

கவனித்தல்

அது, துரோணருடன் வனத்தில் இருந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து கௌரவர்களும் பாண்டவர்களும் அப்பியாசம் (பயிற்சி பெறுதல்) பெற்றுக்கொண்டிருந்த காலம். அங்கே வேறு சில அரச குமாரர்களும் வித்தைகள் கற்க வந்திருந்தார்கள். அஸ்திரப் பயிற்சிகளை தம் மாணவர்களுக்கு குரு துரோணர் கற்றுக்கொடுக்கும் பாங்கே அலாதியானது. ஆசிரமத்திலிருந்து மாணவர்களை வெகுதூரம் அழைத்துச் செல்வார். இருந்திருந்தாற்போல் எதையாவது சொல்வார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றினால், கற்றுத் தேறிவிடலாம்.  

அன்றைக்கும் அப்படித்தான். தன் சிஷ்யர்களுடன் அடர்ந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தார் துரோணர். உச்சிப்பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மேல் இருந்த பறவைகள் மனிதர்களின் பெருத்த காலடியோசையில் அதிர்ந்து பறந்து, திரும்ப வந்து அமர்ந்தன. அணில்கள் கிளைவிட்டுக் கிளைக்குத் தாவிக் குதித்து ஓடின. புதர்களில் பதுங்கியிருந்த சிறு முயல்கள் பதறி, குதித்து ஓடின. மாணவர்களுக்கு எல்லையில்லாக் களைப்பு. அன்றைக்கு ஆதவனின் வெப்பம், வனத்தின் குளுமையையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது. பலருக்கும் வியர்க்கத் தொடங்கியிருந்தது. 

ஓர் இடத்தில் நின்றார் துரோணர். மாணவர்களும் தேங்கி நின்றார்கள். தன் பார்வையை மாணவர்களின் மேல் அலையவிட்டார். ஓர் இடத்தில் நிலைகொண்டது அவர் பார்வை. குறிப்பறிந்து, முன்னால் வந்து நின்றான் அர்ஜூனன். 

``காண்டீபா...! வெகு தாகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?’’

``ஆணையிடுங்கள் குருதேவா!’’ 

``ஆசிரமத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். அங்கு போய் நீர் கொணர்வது சாத்தியமில்லாதது. நாம் வரும் வழியில் எங்கோ ஒரு நீர்நிலை இருந்ததாக நினைவு...’’ 

``ஆம் குருவே! இதோ அருகேதான்... ஒரு காத தூரம்கூட இருக்காது.’’ 

``அப்படியானால் ஒன்று செய்! அந்தத் தடாகத்துக்குப் போ! எனக்கு நீர் கொண்டு வா!’’ 

அர்ஜூனன் குருவைப் பணிந்து வணங்கினான். துரோணரின் நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டான். வந்த வழியே திரும்பி நடந்தான். 

அர்ஜூனன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், துரோணர் மாணவர்களை நோக்கித் திரும்பினார். 

``பீமா! அஸ்திரப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?’’ 

பீமன் வாயைத் திறக்கக்கூட இல்லை.

``அர்ஜூனன் இல்லாமலா?’’ கேட்டது துரியோதனன். 

துரோணர், துரியோதனனை வெறித்துப் பார்த்தார். 

``பரவாயில்லை துரியோதனா... அதனால் என்ன?’’ 

துரியோதனனிடம் இருந்து மறுபேச்சு வரவில்லை. துரோணருக்கு துரியோதனனின் மனநிலை நன்கு தெரியும். 

‘அர்ஜூனனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறான். என் பிரியத்துக்கு உரியவன் என்பதாலேயே, சிறப்பு கவனம் கொடுத்து அனைத்தையும் கற்றுக் கொடுப்பதாக எண்ணுகிறான். அது தவறு என்பதை உணரச் செய்ய வேண்டும்...’ யோசனையோடு அத்தனை மாணவர்களையும் பார்த்தார் துரோணர். 

தரையில் அமர்ந்தார், ஒரு குச்சியால் மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார். 

``இன்றைய அஸ்திரப் பிரயோகத்துக்கான மந்திரம் இதுவே... எல்லோரும் மனனம் செய்துகொள்ளுங்கள்.`` 

சீடர்கள் முன்னே வந்தார்கள். துரோணர் உரக்க அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னார். மந்திரத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அவர் எழுதி வைத்ததைப் படித்து உறுதி செய்துகொண்டார்கள். குருதேவர் சற்று அவகாசம் கொடுத்தார். 

``என்ன ஆயிற்றா?’’ 

``முடிந்தது குரு தேவா!’’ மாணவர்களின் குரல்கள் ஒருசேர ஒலித்தன. 

``துரியோதனா உன் தனுசைக் கொடு!’’ 

கவனித்தல்

துரியோதனன் பவ்யத்தோடு தன் வில்லை நீட்டினான். துரோணர், அவராகவே அவனுடைய அம்புராத்தூளியிலிருந்து ஓர் அம்பை எடுத்தார். வில்லில் நாண் ஏற்றினார். 

``இப்போது மனதுக்குள் அந்த மந்திரத்தைச் சொல்லி பாணத்தை விட வேண்டும். என்ன நடக்கிறதென்று பாருங்கள்!’’ 

அங்கே நடந்தது மாயாஜாலம். துரோணர் விட்ட அம்பு, எதிரே இருந்த ஆல மரத்தை நோக்கிப் போனது. சில விநாடிகள்தான். மரத்தில் இருந்த அத்தனை இலைகளிலும், ஒன்றுவிடாமல் துளையிட்டது. சரியாக ஓர் இலையில் ஒரு துளை! பிறகு, துரோணரிடமே திரும்பி வந்தது.

மாணவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் சொல்லி மனனம் செய்துகொண்டார்கள். 

``மேலே செல்லலாமா?’’ 

துரியோதனன், குருவிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கிக்கொண்டான். எல்லோரும் குருவின் பின்னே நடந்தார்கள்.  

*** 

அப்போது, அர்ஜூனன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு துரோணரும் மற்றவர்களும் சென்ற பாதையில் வந்துகொண்டிருந்தான். குருவும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தபோது துரோணர் மணலில் கிறுக்கியிருந்த மந்திரத்தைப் பார்த்தான்; படித்தான்; தன் காண்டீபத்தை எடுத்தான்; மந்திரத்தைச் சொல்லி அம்பு தொடுத்தான். அது துரோணர் விட்டதைப்போலவே ஆல மரத்தை நோக்கிப் பறந்தது. எல்லா இலைகளிலும் சில விநாடிகளில் மற்றொரு துளையைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தது. 

அர்ஜூனன் திருப்தியோடு, குருவைத் தேடிப் போனான்.

*** 

கவனித்தல் - பறக்கும் அம்பு

எல்லோரும் அன்றைய பயிற்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அர்ஜூனன் கொண்டு வந்து தந்திருந்த நீர் அவர்களின் தாகத்தைத் தணித்திருந்தது. பழைய இடத்துக்கு வந்தபோது, அனைவரின் கண்களும் துரோணர் அம்புவிட்ட மரத்தில் நிலைகுத்தி நின்றன. துரியோதனனின் விழிகள் ஆச்சர்யத்தால் விரிந்தன. 

``குரு தேவரே! தாங்கள், மரத்தின் இலைகளில் ஓர் துளைதானே இட்டிருந்தீர்கள்... இந்த மர இலைகளில் மற்றொரு துளையும் சேர்ந்திருக்கிறதே!’’ 

``இன்னுமா உனக்குப் புரியவில்லை. இது அர்ஜூனன் எய்த அம்பில் விளைந்தது.’’

``அது எப்படி? நீங்கள் இதைக் கற்றுக் கொடுத்தபோது அவன் இல்லையே!’’ 

``எப்படிக் கற்றாய்... நீயே சொல் அர்ஜூனா!’’ துரோணர் அர்ஜூனனை நோக்கிச் சொன்னார்.

அர்ஜூனன், மணலில் குரு எழுதிய மந்திரத்தைப் படித்ததையும், அம்பு எய்ததையும் கூறினான். 

``இப்போது புரிந்ததா? ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அர்ஜூனன். அவனுடைய கவனித்தல் திறனுக்கு இது ஒரு சான்று. இன்றைக்கு நான் அஸ்திரப் பிரயோகத்தில் ஒன்றைக் கற்றுக்கொடுப்பேன் என்றதுமே அவன் கவனம் எல்லாம் அதிலேயே குவிந்துவிட்டது. `எப்போது... எப்போது...’ என என் பயிற்சி குறித்தே யோசித்திருக்கிறான். அந்த கவனித்தல், அவனைத் தரையைப் பார்த்தபடியே நடந்துவரச் செய்திருக்கிறது. மந்திரத்தைப் பார்த்தான்... படித்தான்... கற்றான்...’’ 

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்தல் ஒருவனை மேதையாக்கும். எந்த குருவாக இருந்தாலும், தன் சிஷ்யர்களை `கவனி... கவனி... கவனித்தல் முக்கியம்’ என அடிக்காத குறையாக வலியுறுத்துவது இதன் காரணமாகத்தான். துரியோதனன் அன்றைக்கு முக்கியமான பாடத்தைக் கற்றிருந்தான்... மண்டியிட்டு வீழ்ந்து மனதார குருவை வணங்கினான். 

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்