திருக்கடையூர் திருவிளையாடல்... அபிராமியின் அற்புதம்! #ThaiAmavasai | Thirukadaiyur Abirami's miracle special article

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (27/01/2017)

கடைசி தொடர்பு:18:52 (27/01/2017)

திருக்கடையூர் திருவிளையாடல்... அபிராமியின் அற்புதம்! #ThaiAmavasai

சோழவளநாட்டின் தஞ்சை நகரிலே உள்ள சிவ தலங்களில் ஒன்றாக திகழுவது திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சுமார்  300 ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடு நடத்தி வந்தவர் அபிராமி பட்டர் என்னும் சுப்பிரமணியன்.  
இவர் சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

 

 

அபிராமியின் அற்புதம் 


 

அவர் அன்னையின்  மீது கொண்ட அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். ஒளி வடிவில் அன்னையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவரை பித்தன் என்று வசைபாடினர். ஆனால் அபிராமி பட்டரோ அதைக் பொருட்படுத்தாமல், அபிராமியைத் துதிப்பதும், அன்னையின் பேரில் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார்.   


இந்நிலையில், ஒரு தை அமாவாசை தினத்தன்று  தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த சரபோஜி மன்னர், திருக்கடையூருக்குத் தரிசனம் செய்ய வந்தார்.


மன்னனைக் கண்டதும் மக்கள் வணங்கி நின்று வரவேற்றனர். ஆனால், மன்னர் வந்திருப்பதை அறியாத பட்டர், அவரை வணங்காமல், அன்னை அம்பிகையின் சிந்தனையில் கண்மூடிய யோக நிலையில் ஆழ்ந்து இருந்தார்.


உடனே அங்கிருந்தவர்கள், " மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன்" என்று பட்டரைப் பற்றி மன்னரிடம் புகார்களை அடுக்கினர். 


ஒரு நிமிடம் யோசித்த சரபோஜி மன்னர், உண்மை எதுவென்று அறிந்து கொள்ள எண்ணி, பட்டரை அழைத்து, 'இன்று என்ன திதி?' என்று கேட்டார்.


மெய்மறந்த நிலையில் அன்னையின் யோக நிலையிலிருந்து மீளாத பட்டர், சற்றும் தாமதிக்காமல், "பௌர்ணமி” என்றார். 
'அப்படியென்றால் இன்று இரவு முழு நிலவு வருமா?' என்று மன்னர்  திரும்ப கேட்க, "நிச்சயம் வருமே" என்றார் கண்மூடிய மோன அபிராமிநிலையிலேயே பட்டர்.


(முழுநிலவாய் அன்னை பக்தனின் உள்ளத்தில் பிரகாசிக்கும்போது, அடியவனுக்கு எல்லா நாளுமே முழுநிலவு நாள்தானே! இதனால் சோதிப்பதற்காக, மன்னர் கேட்ட அன்றைய திதி பற்றிய கேள்விக்கு,  பௌர்ணமி என்று திதியை மாற்றிக் கூறி விடுகிறார் பட்டர் ).
இதனால் சரபோஜி மன்னர் கடும்கோபம்கொண்டு, இன்று இரவு முழுநிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை. இது அரசகட்டளை என்று கூறி மன்னர் சென்று விடுகிறார்.


அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நடந்ததை உணர்ந்து மிகவும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர். "இந்த தவறிலிருந்து அன்னையே தன்னைக் காத்தருளவேண்டும்" என்று அவர் வேண்டிக்கொண்டார். 


பின்னர் அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி அனல் மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். 'அன்னை எனக்குக் காட்சி கொடுத்து, அற்புதத்தை நிகழ்த்தி  இந்தப் பழியை நீக்காவிட்டால், தீயில் விழுந்து உயிரை துறப்பேன்' என்று சபதமேற்று, "உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பித்து,  நூறு பாடல்களை கொண்ட அபிராமி அந்தாதியை பாடினார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கையில் மாற்றமில்லை! அமாவாசை வானம் இருள தொடங்கியது. 

அபிராமி 


அபிராமியின் அற்புதம்...


ஆனால், அன்னையின் அற்புதத்தால் நிலவு நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து கொண்டிருந்தார் பட்டர். 78 பாடல்கள் பாடி முடிந்தது 78 கயிறும் அறுபட்டு விட்டது மிகுதியாக இருந்த கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது பாடிக்கொண்டே இருந்தார். பட்டர் 79 - வது பாடலாக அம்மா! ”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு” என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். அபிராமி தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீசிட, அது பல கோடி நிலவின் ஒளியாக ஜொலித்தது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது. 


அபிராமி, தன் பக்தன் பட்டரிடம், "நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு" என்றாள். பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.


அபிராமிப்பட்டரின் இந்த உறுதியான பக்தியை கண்டு சரபோஜி மன்னரும், மக்களும் அகமகிழ்ந்தனர். மன்னரிடம் பட்டரை பித்தன் என்று  கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு வேண்டினர். மேலும் பட்டருக்கு மன்னன் நிலங்களுடன் பல மானியங்களையும் அளித்தான். 
இந்நாளின் நினைவாக, வருடந்தோறும் தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டருக்கு அம்பிகை அருள்புரிந்த நிகழ்ச்சி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 


ஜி.லட்சுமணன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்