வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (29/01/2017)

கடைசி தொடர்பு:14:51 (29/01/2017)

பண்டரிநாதன் அருளால் மாதுளை மரமாகி நின்ற பக்தை!

மகாராஷ்டிராவில் மங்களபடே என்ற ஊரில் சியாமா என்பவள் வசித்து வந்தாள். நடன கணிகையான சியாமா நாற்பது வயதிலும் இளமைத் தோற்றத்துடன் திகழ்ந்தாள். அவளுக்கு ஒரு பெண் கானோபத்திரை.

 

  பண்டரிநாதன்

 


தாயைவிடவும் மிகுந்த அழகுடன் திகழ்ந்த கானோபாத்திரை, பண்டரிபுரம் பாண்டுரங்கனிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய தாய் சியாமாவுக்கோ, மிகுந்த அழகும் கலைகளில் தேர்ச்சியும் பெற்றிருக்கும் தன் மகள், பல செல்வந்தர்களை மகிழ்வித்து, அதன்மூலம் கிடைக்கும் பெரும் செல்வத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழவிரும்பினாள்.


ஒருமுறை தன்னுடைய மாளிகைக்கு வந்த செல்வந்தர்களின் முன்னிலையில் கானோபாத்திரை நடனமாடவேண்டும் என்று விரும்பினாள் தாய் சியாமா. ஆனால், கானோபாத்திரை சம்மதிக்கவில்லை. தான் பாண்டுரங்கனின் சந்நிதியில்தான் முதல்முதலில் நடனமாடவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாள்.


தாயும் மகளை அவளுடைய போக்கிலேயே விட்டுப் பிடிக்க நினைத்தாள். ஆனாலும், வந்திருக்கும் செல்வந்தர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு திரைமறைவில் மகளை ஆடிப் பாடும்படி கூறினாள். மகளும் அதற்குக் கட்டுப்பட்டு ஒரு திரைமறைவில் இருந்தபடி ஆடிப் பாடினாள். அவளுடைய பாடலும் ஆடலும் மனிதர்களை இச்சை கொள்வதற்கு பதிலாக, அவர்களுடைய மனதில் தெய்விக உணர்ச்சியைத் தூண்டுவதுபோல் இருந்தது.

பண்டரிபுரம் கோயில்


 சில நாட்கள் சென்றன. கானோபத்திரையைப் பார்த்த சியாமாவின் தோழிகள் அனைவரும், அவளுடைய அழகையும் நளினத்தையும் வியந்து பாராட்டினர். அவர்களில் ஒருத்தி, ''இவ்வளவு அழகும், நளினமும் கூடிய உன் மகள் அரண்மையில் ராணியாக வாழ வேண்டியவள். அவளை அரசனிடம் கொண்டு செல்'' என்று அவள் ஆசையைத் தூண்டிவிட்டாள். இதைக் கேட்ட சியாமா, தன்னுடைய மகளை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பி, தன்னுடைய விருப்பத்தை மகளிடம் தெரிவித்தாள்.


 இதைக் கேட்ட கானோபத்திரை, "அம்மா! கணிகையர் குலத்தில் பிறந்த காரணத்தினால், என்னால் இந்த இழித்தொழிலை என்னால் செய்யமுடியாது. நான் அந்த பண்டரிநாதன் புகழைப் பாடுவதிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று கூறினாள். மேலும் அனைவரைக் காட்டிலும், அரசனைக் காட்டிலும் இறைவனே உயர்ந்தவர் என்றும், அவரைத் தவிர வேறு யார் முன்னிலும் தான் ஆடவோ, பாடவோ முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தாள். அவளது தெய்வ பக்தியைக் கண்டு சியாமா மகிழ்ந்தாலும், அவளின் வாழ்க்கைத் துறவியைப் போல் ஆகிவிடுமோ என்றும் பயந்தாள்.

பண்டரிபுரம் கோயில்


    இதற்கு இடையில் அவர்கள் தங்கியிருந்த ஊருக்கு கோயில்களில் பஜனை பாடும் குழு ஒன்று வந்தது. கானோபத்திரையும் அவர்களுடன் அங்கிருந்த கோயில்களுக்குச் சென்று பாட்டுப் பாடி நடனமாடினாள். அவர்கள் அங்கிருந்து பண்டரிபுரம் செல்கிறார்கள் என்பதை அறிந்த அவள் தானும் அவர்களுடன் பண்டரீபுரம் சென்று தன் இறைவன் முன்னிலையில் ஆடிப் பாட வேண்டும் என்று எண்ணி, தன் தாயிடம் உத்தரவு கேட்டாள். அவளும் அவளை அவர்களுடன் செல்ல அனுமதித்தாள். கானோபத்திரை கடவுளின் புகழைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பண்டரீபுரம் சென்றாள்.


அங்கு அவர்களுடன் ஆலயத்தில் தினமும் பாடி ஆடினாள். அவளின் அழகும், இனிமையான குரலும் அனைவரையும் கவர்ந்தது. அவளின் பாடலைக் கேட்பதற்காகவே நிறைய கூட்டம் கோயிலுக்கு வந்தது. இந்த விஷயம் அறிந்த மன்னர் அவளைக் காண மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்தார். அனைவரும் அவளின் பாடல் மூலம் தெய்வ பக்தியில் திளைத்துக் கொண்டிருக்கும்போது அவர் அவளின் அழகில் மயங்கி அவளை மணந்துக் கொள்ள ஆசைப்பட்டார். அடுத்த நாள் அவளின் நாட்டிய அரங்கேற்றம் இருப்பதை அறிந்த அவர், மறுபடியும் அவளைக் காண மாறுவேடம் பூண்டு ஆலயத்திற்கு வந்தார். மன்னரின் மனதை அறிந்த அமைச்சர்கள் அதைப் பற்றி அவளின் தாயான சியாமாவிடம் சென்று தெரிவித்தனர்.


அதற்கு அவள், தனக்கு சம்மதம்தான் என்றாலும், தன்னுடைய மகள் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், அவளை கட்டாயப்படுத்திக் கூட்டிச் செல்லுமாறும் ஆலோசனை வழங்கினாள்.


அதன்படியே அரசனின் ஆட்கள் கோயிலைச் சுற்றி வளைத்தனர். மேலும் யாரும் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்றும், கோயிலில் இருப்பவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் கூறினர். இதனால் கலக்கமடைந்த அனைவரும் அதற்கான காரணத்தைக் கேட்டு அறிந்தனர். பின்னர் கானோபத்திரையிடம் சென்று, நடந்தவை அனைத்தையும் கூறி அவள் மன்னரின் ஆட்களுடன் சென்றால்தான் மாதுளை மரம்தாங்கள் உயிரோடு இருக்கமுடியும் என்று வேண்டினர். இதைக் கேட்ட அவள் தான் மட்டும் உள்ளே சென்று பண்டரீநாதனை வணங்கிவிட்டு வருவதாகக் கூறினாள். வேறு வழி இல்லாமல் அர்ச்சகர்களும் சம்மதித்தனர்.


உள்ளே சென்ற அவள் பண்டரிநாதனை வணங்கித் தொழுது, தன்னுடையப் பக்தியை ஏற்றுக்கொண்டு தன்னை காக்கும்படி வேண்டினாள். மேலும் இறைவனைத் தவிர யாரும் என்னை அணுகக் கூடாது என்றும் மனதுருகப் பிரார்த்தித்தாள். அவளின் பக்திக்கு மனமிரங்கிய இறைவன் அவளை ஆட்கொண்டான். நீண்ட நேரம் ஆகியும் அவள் வெளியே வராததால் உள்ளே வந்த அர்ச்சகர்கள் அவள் சடலமாக இருப்பதையும், அவளிடம் இருந்து ஒளி வந்து இறைவனிடம் கலப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டனர். மேலும் அவர்கள் அவளின் சடலத்தை அந்த கோயிலிலேயே புதைத்தும் விட்டனர். இதையறிந்த மன்னர் கோபம் கொண்டு ஆலயத்திற்கு வந்தார். அனைவரும் வியக்கும் வகையில் அவளை புதைத்த அந்த இடத்தில் மாதுளை மரம் வளர்ந்து இருந்தது. ஒரே நாளில் வளர்ந்த அந்த மரத்தை அனைவரும் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். மேலும் கானோபத்திரையின் பக்தியை அனைவரும் மதித்துப் போற்றினர்.


பகவான் பாண்டுரங்க விட்டலனிடம் பக்தி மிகுந்த உள்ளம் கொண்ட மாது மரமாகிவிட்டதால்தான் மாது + உளம் மாதுளம் என்ற பெயர் மாதுளைக்கு ஏற்பட்டதுபோலும்.


-க.புவனேஸ்வரி
    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்