சர்க்கரை நோயாளிகள் சுவாமிக்கு விரதம் இருக்கலாமா? | Is it safe for diabetic patients to fast for spiritual purposes ?

வெளியிடப்பட்ட நேரம்: 05:04 (31/01/2017)

கடைசி தொடர்பு:05:00 (31/01/2017)

சர்க்கரை நோயாளிகள் சுவாமிக்கு விரதம் இருக்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் சுவாமிக்கு விரதம் இருக்கலாமா? என்பது பற்றி வேத விற்பன்னர் சுந்தரேச ஷர்மாவிடம் கேட்டோம். விரதங்கள் பற்றியும், அவற்றை இருப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் யார் யார் விரதமிருக்கலாம், என்பது பற்றியும் அவர் கூறிய தகவல்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக...    

சர்க்கரை நோயாளிகள்


உண்ணாநோன்பு, மவுன விரதம் என்றெல்லாம்  நம் முன்னோர்கள்  உருவாக்கியது, ஆன்மிக நலனுக்காக  மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள விரதங்கள் நமக்கு உதவி செய்கின்றன. 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்' என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும்போது, மனம், ஞானத்தை தேடிப் புறப்படுகின்றது.

விரதம்


'வறுமையால் உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உண்ணவில்லை' என்ற நிலை வரும்போது, இறைவனின் திருநாமத்தை வேண்டிக் கொண்டிருந்தோமானால், அந்த பட்டினி கிடக்கும் சூழ்நிலையே விரதமாக மாறிப்போய் பகவான் நம்  பொருளாதார நிலையையே மாற்றும் நிலை வரலாம்

.விரதம்

 நம் கண்முன்னே பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போதுகூட, மனதை அடக்கி  இறைவனை பிரார்த்தித்திருந்தால், அதுதான் உண்மையான விரதம். 
இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள். டயட்டீஷியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று   மருத்துவ நிபுணர்கள் நமக்கு நிறையவே ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத்தான்,  அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள் 'விரதம்' என்றார்கள.

 

விரத பூஜை 


ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் 'லங்கனம் பரம ஒளஷதம்' என்று சொல்லப்பட்டுள்ளது. 'லங்கனம்' என்றால் பட்டினி. ஒளஷதம் என்றால் மருந்து. பட்டினியே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால்தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. தேவையற்ற கழிவுகள் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர்கள் வகுத்தனர்.


விரதங்களை அனுஷ்டிப்பதில், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எப்போதுமே விலக்கு உண்டு. எனவே உடல் நலமற்றவர்கள் விரதமிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அந்த அளவு விரதங்களை மேற்கொள்வது நல்லது. 


விரதங்களில் வாராவாரம் இருக்க வேண்டிய விரதம், 15 நாட்களுக்கு ஒருமுறை  இருக்கவேண்டிய விரதம், மாதத்துக்கொருமுறை இருக்க வேண்டிய விரதம் என இருக்கின்றன. அவற்றில் தங்களுக்கு தோதான விரதத்தை தேர்வு செய்து இருக்கலாம். 
சுகர் பேஷன்ட், மற்றும் உடல்நலம் இல்லாதவர்கள், வயதானவர்கள் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனை கேட்டு, சாத்தியம் இருந்தால் விரதம் இருக்கலாம். 

விரதங்கள் இருப்பதால் நமக்கு அப்போது வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். ஆனால், அதன் பலனோ மிகுதியாக இருக்கும். நமக்கு எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் விரதங்கள் தரும்.

எஸ்.கதிரேசன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்