வடக்கே தலை வைத்து ஏன் தூங்கக் கூடாது?

வடக்கே தலைவைத்து படுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். நம்முடைய முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஆனால், அந்தக் காரணம் இன்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

 

வடக்கே தலை வைத்து

 

வடக்கே ஏன் தலை வைத்து ஏன் உறங்கக்கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என்பது பற்றி நமக்கு விளக்குகிறார் வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதிஎம்.எஸ்.ஆர்.மணிபாரதி.

''உண்ணுவது எவ்வளவு அவசியமோ அந்த அளவு நல்லபடியாக உறங்குவதும் அவசியம். நல்ல உணவும், நல்ல ஓய்வும் இருந்துவிட்டால் போதும், நாம் செய்ய வேண்டிய வேலைகளை உற்சாகமாக செய்யமுடியும். நம்முடைய வேலைகளில் நமக்கு தெளிவான மனநிலை காணப்படும். நல்ல உறக்கம்தான், விழித்துக்கொண்ட பிறகு நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்; நம்மை உற்சாகமாகச் செயல்படத்தூண்டும். அதனால் நாம் படுக்கை அறையை ‘நைருதியம்’ என்று சொல்லப்படும் தென்மேற்குப் பகுதி, ‘வாயுவியம்’ (வடமேற்குப் பகுதி) சாராத மேற்குப் பகுதி, ‘ஆக்கினேயம்’ (தென்கிழக்குப் பகுதி) சாராத தெற்குப் பகுதிகளில் அமைத்தால் ஆரோக்கியம், சந்ததி வளர்ச்சி, நிம்மதி, நல்ல உறக்கம் உண்டாகும்.

 

ஆக்கினேய (தென்கிழக்கு) படுக்கை அறை உஷ்ண ரோகத்தை உண்டாக்கும். வாயுவிய (வடமேற்கு) படுக்கை அறை சலனத்தை உண்டாக்கும். ஈசான்யப் படுக்கை அறை நமது இலக்கை நாம் அடையத் தடையாக இருப்பதுடன், வம்சவளர்ச்சிக்குத் தடை அல்லது குழந்தைகளால் நிம்மதியில்லாமையை உண்டாக்கும். குறைப்பிரசவம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உண்டாவது, கருச்சிதைவு போன்றவை ஏற்படும். படுக்கை அறையில் படுக்கும்போது, தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி தூங்குவது மிக நல்லது. நன்றாகத் தூக்கம் வரும். மேற்கே தலை வைத்தும் படுக்கலாம்.

தூங்கும் குழந்தை 

 

கிழக்கே தலை வைத்து குழந்தைகளைப் படுக்க வைப்பது நன்மை தரும். அறிவு நன்றாக வளரும். சிந்தனைகள் சிறக்கும். 
வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால், மன உளைச்சலும், தூக்கமின்மையும், ஞாபகமறதியும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்குக் காரணம் கிழக்கு மேற்காக சூரியனின் பாதை செல்கின்றது. வடக்கு தெற்காக காந்தப் பாதை செல்கின்றது. பூமியில் வடதுருவம் தென் துருவம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.

பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்வார்கள். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர்.

 

தூங்கும் பெண்

 

அடிக்கடி வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கு மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் எக்காரணம் கொண்டும் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. நிச்சயம் ஒரு அறையில் இரண்டு ஜன்னல்களும் ஒரு கதவும் இருக்கவேண்டும். முறையான காற்றோட்டம் ரொம்பவே முக்கியம்.


எஸ்.கதிரேசன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!