வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (04/02/2017)

கடைசி தொடர்பு:21:31 (04/02/2017)

கரூரில்  அபயம் அருளும் ரங்கநாதர்..!


'வஞ்சி நகா்' சேரர்களின் ஆட்சிக் காலத்தில் பிரசித்தி பெற்ற  நகரம் வஞ்சி. வஞ்சி நகரமே இன்று கரூர் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவர் இந்தத் தலத்தில் படைப்புத் தொழிலைத் தொடங்கியதாகவும், அதனால், இந்த ஊர் கருவூர் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது 'அருள்மிகு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயம்.

ரங்கநாதர்


திரேதாயுகத்தில் இந்தப் பகுதி இலந்தை வனமாக இருந்துள்ளது. அப்போது சிலர் கட்டட வேலைக்காக நிலத்தைத் தோண்டினார்கள். அப்போது ஒருவருடைய கோடரி பட்டு  ஒரு பெரிய கல் உடைந்திருக்கிறது. அருகில் சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அங்கே ரங்கநாதர் சயனக் கோலத்தில் காட்சி தந்தார். கோடரி பட்டதால் பெருமாளின் திருமேனி பின்னப்பட்டுவிட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முசுகுந்த சக்கரவர்த்தி, பெருமாளின் சிலை இருந்த இடத்தில் புதிகாக ஒரு சிலையை சுதைச் சிற்பமாக வடித்து பிரதிஷ்டை செய்து, வழிபட்டதாக தல வரலாறு. பின்னப்பட்ட ரங்கநாதர் சிலை, அந்தக் கோயிலின் பின்புறம் இன்றும் இருப்பதைக் காணலாம்.


ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் காட்சி தரும் ரங்கநாதரின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மதேவர், தாமரை மலரில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். பெருமாளுக்கு அருகிலேயே ஶ்ரீதேவி தாயாரும், ஆண்டாளும் திருக்காட்சி தருகிறார்கள். மார்க்கண்டேயருக்கு அபயம் தந்து அருள் புரிந்ததால், ரங்கநாதர், 'அபய பிரதான ரங்கநாதர்' என்ற திருப்பெயர் கொண்டதாகவும் தலவரலாறு குறிப்பிடுகிறது. இங்கு பெருமாள் சுதை வடிவில் அருள்வதால் திருமஞ்சனம் கிடையாது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று மூலிகைகள் சேர்த்த எண்ணெய்க் காப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து 48 நாள்கள் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

விசேஷ தினங்கள்:


வைகுண்ட ஏகாதசி, சித்திரை பிரம்மோற்ஸவம், நவராத்திரி ஊஞ்சல் உற்ஸவம், கோகுலாஷ்டமி ஆகிய விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ரங்கநாதரை தரிசித்து வழிபட்டால், பெருமாள் நமக்கு அபயம் அருளி, நமக்கு ஏற்பட்டிருக்கும் பலவிதமான பயங்களை அகற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில்


 கோயிலுக்குச் செல்லும் வழி:

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ., தொலைவு பயணித்து  (ஜவஹர் பஜார் வழி) மேட்டு வீதி வழியாக கோயிலை அடையலாம்.

நடை திறக்கும் நேரம்:

தினமும் காலை 6:30  மணியிலிருந்து 11:30 வரையிலும், மாலை 4:30 மணியிலிருந்து 8:30 மணி வரையும்.

தல விருட்சச் சிறப்பு:                           

இங்கு இலந்தை மரம் தலவிருட்சமாக காணப்படுகிறது. வருடம் முழுவதும் காய் கொடுப்பதால், இத் தலவிருட்சத்தை 'உறங்கா இலந்தை' எனப்பெயர் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள். மேலும், ஏழு வகை சுவைகளில், காய் கொடுத்து வருவதாகவும் சுவாரசியமான தகவல் ஒன்றை சொல்கின்றனர்.       
இத்தகு சீர்மை பொருந்திய, 'அபயபிரதான ரங்கநாத சுவாமியை' தரிசித்து, நாமும் பயம் நீங்கப்பெற்றவராய் வாழ்வோம்.

கட்டுரை மற்றும் படங்கள் ர.புஷ்பலதா (மாணவப் பத்திரிகையாளர்)                                                   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்