வி.கே.சசிகலாவுக்கு முதல்வர் யோகம் உள்ளதா... ஜாதகம் என்ன சொல்கிறது?!

மிழகத்தின் புதிய முதல்வராக வி.கே.சசிகலா பதவி ஏற்க உள்ள நிலையில் அவரது ஜாதகத்தில் அத்தகைய யோகம் இருக்கிறதா? என்பது பற்றி ஜோதிஷ சிரோண்மணி ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறிய விளக்கம் இங்கே...

சசிகலா

தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலை எல்லோருக்கும் ஓர் ஆச்சர்யத்தைக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.   காலம் சென்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லோருடைய புருவத்தையும் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கின்றன.

ஶ்ரீரங்கம் கிருஷ்ணன்சமீபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்ட வி.கே.சசிகலாவால் எப்படி இந்த உயரத்தைத் தொட முடிந்தது. இதுவரை மக்கள் செல்வாக்கு பெற்ற ஒருவர்தான் தமிழக முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது. ராஜ கோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவத்சலம், அண்ணா துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் மக்களின் செல்வாக்கைப் பெற்று முதல்வரானவர்கள். ஓ.பன்னீர் செல்வம் தேர்தலில் வெற்றி பெற்று, ஒரு சூழ்நிலையில் ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர். ஆனால், வி.கே.சசிகலா மக்களுடன் அவ்வளவாகத் தொடர்பில் இல்லாதவர். அவரால் எப்படி இது சாத்தியமாயிற்று.    

தொண்டர்கள் ஆதரவு இருந்தாலும், ஒருவரின் ஜாதகத்தில் அரசுக் கட்டிலில் அமரும் யோகம் இருந்தால்தான் இது சாத்தியமாகும். கர்நாடகாவில் மிகப்பெரும் மக்கள் செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ராஜ்குமாரால் அரசு சிம்மாசனம் ஏற முடியவில்லை. அகில இந்தியாவிலும் புகழுடன் விளங்கும் அமிதாப் பச்சனால் அரசாள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு இருந்தும், இவர்களுக்கு அந்த யோகம் இல்லை.

சசிகலா

வி.கே.சசிகலாவுக்கு இந்த யோகம் எப்படி இருக்கிறது? இவரது ஜாதகத்தில் சிம்மம் லக்னமாகி லக்னாதிபதி சூரியன் ஆட்சியாக உள்ளது. சூரியன் ஒருவருக்கு அவர் வீட்டிலேயே ஆட்சியாக இருந்தாலும், சிம்மாசன யோகம் கிடைக்காது. ஆனால், ஒருவருடைய லக்னாதிபதி சூரியன் ஆக வந்து, அவர்  ஆட்சியாக அமர்ந்து, அந்த ஜாதகரின் யோகாதிபதியான செவ்வாய் அதற்கு  ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானமான தனுசில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஐம்பது வயதுக்குப் பிறகு சிம்மாசன யோகத்தை அளிப்பார். இவரது  ஜாதகத்தில் சூரியன் ஆட்சியாகி, அவரது யோகாதிபதியான செவ்வாய் ராகுவோடு சேர்ந்து ஐந்தில் அமர்ந்து அந்த யோகத்தைக் கொடுத்துள்ளார்.

சசிகலா

மேலும் இவரது ஜாதகத்தில் சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் அதிக ஷட் பலம் பெற்று, முதல்வர் நாற்காலியில் உட்காரும் யோகத்தைத் தந்துள்ளனர். மேலும், இவரது ஜாதகத்தில் பாவரீதியாக, 6, 7, 8-ம் இடங்கள் அதிக பலத்தைப் பெறுகின்றன. லக்னத்தின் ஐந்தாமதிபதியான குருவும், ஒன்பதாம் அதிபதியான செவ்வாயும் ஒருவருக்கொருவர், சம சப்தமத்தில் இருப்பது குருமங்கள யோகமாகும். மேலும் சூரியன் அம்சத்தில் உச்சம் பெற்றும், சனியும் அம்சத்தில் வலுப்பெற்றும் அரச யோகத்தைத் தந்திருக்கிறார்கள்.  

ஒருவர் மக்கள் செல்வாக்கு பெற சுக்கிரனும், புதனும், சந்திரனும் மிக அவசியம். ஆனால், இவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகியும், புதன் பன்னிரண்டிலும், சந்திரன் எட்டில் மறைந்தும், அம்சத்தில் நீசமாகியும் நின்று  இருப்பதால், இவருக்கு மக்கள் செல்வாக்கைக் கொடுக்காவிட்டாலும்,  ஜாதகத்தில் அரச கிரகமான சூரியன் ராசியில் ஆட்சியாகி, அம்சத்தில் உச்சமாகி, சனியும் பலமாகி இந்த அரச யோகத்தைக் கொடுத்துள்ளனர்.  

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!