வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (06/02/2017)

கடைசி தொடர்பு:10:43 (07/02/2017)

ஆன்மிகம் மணக்கும் மாமதுரை..! #PhotoStory

 'மதுரை மாநகர்' தமிழ் மற்றும் கலைகளை வளர்த்த நகரம் மட்டும் அல்ல. அது, ஆன்மிகத்தையும் அன்பையும் போற்றி வளர்த்த பெருநகரம். மதுரையில் மட்டும் தான், எல்லா மாதங்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுவது உண்டு. அத்தகைய உன்னத மதுரையின் ஆன்மிக பெருமைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மீனாட்சி அம்மன் ஆலயம்:

மதுரை


 'திரு ஆலவாய்' என அழைக்கப்படும், மதுரை அல்லது மதுரையம்பதியில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இது நடராஜப் பெருமானின் ஐம்பெரும்சபைகளில்,'வெள்ளி சபை'என போற்றப்படுகிறது.  


 மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றம்:

கொடியேற்றம்


 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு திருவிழா கொண்டாடுவது வழக்கம். இங்கு நடக்கும் பெரும்பாலான விழாக்களுக்கு , இவ்வாலயத்தில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் அமைந்து இருக்கும் தங்கக்கொடிமரத்தில்  கொடியேற்றுவது மரபு.

தேரோட்டம்:

தேரோட்டம்


   ஒவ்வொரு ஆண்டும் மதுரையில்  நடக்கும் முக்கியத் திருவிழாக்களில்  ஒன்று  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் திருத்தேரோட்டம். மாசிவீதிகளில் நடைபெறும் இத்தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தேரை, வடம்பிடித்து இழுத்துச் செல்வது மதுரையின் அழகு..!


கள்ளழகர் வைகையில் இறங்கல் :

வைகையில் இறங்கல்


ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது 'கள்ளழகர் வைகையில் இறங்கல்' நிகழ்வு நடைபெறுகிறது. தன் தங்கை மீனாட்சியின்  திருக்கல்யாணத்தைக் காண வரும்,  கள்ளழகர் திருமணம் முடிந்துவிட்டது என்ற தகவல் அறிந்து, வைகை ஆற்றில் இறங்கி, கோபத்துடன் மீண்டும் தன்னிடம் திரும்புவதாக ஐதீகம்.


கள்ளழகரின் கோபத்தைத் தணித்தல்:

நீர்ப் பீய்ச்சி அடித்தல்


தன் தங்கையின் திருமணம் முடிந்த கோபத்தில் திரும்பும் கள்ளழகரை ராமராயர்  மண்டபத்தின் அருகில், தண்ணீரை வேகமாகத் தூவி குளிர்விக்கும் நிகழ்வு வெகுபிரசித்தி பெற்றது.


சூரியன் வழிபடும் முக்தீஸ்வரர்:

முக்தீஸ்வரர்


மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் அருகில் இருக்கும், முக்தீஸ்வரர் ஆலயத்தில்  மார்ச் 10 முதல் 21 வரையிலும், செப்டம்பர் 19 முதல் 30 வரையிலும் சூரியன் வந்து, மூலவரை வணங்கும் அதிஅற்புதநிகழ்வு நடைபெறுகிறது.


33 அடி நீள அரிவாள் கொண்ட கருப்பண்ணசுவாமி கோயில்:

நீள அரிவாள் கொண்ட கருப்பண்ணசுவாமி


மதுரை மாவட்டம்,  டி.கல்லுப்பட்டியில் உள்ள கருப்பணசுவாமி ஆலயத்தில் மூலவர் 33 அடி நீளம், 6  அடி அகலம், 800 கிலோ எடையுடன் கூடிய அரிவாளுடன் காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம் - சூரசம்ஹாரம்:

திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்


அறுபடைவீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்,சூரபதுமனை வதம் செய்ய சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்புரியும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி வைபவத்தின் நிறைவு நாளில்  நடைபெறுகிறது.


 - ம.மாரிமுத்து 

படங்கள் - ஈ.ஜெ. நந்தகுமார், வீ. சதீஷ்குமார்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்