வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (07/02/2017)

கடைசி தொடர்பு:20:21 (07/02/2017)

தம்பதிகளுக்கான பிரச்னைகளும் பரிகாரங்களும்..!

'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

பரிகாரம்


ஒருவருக்கு இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் 7-ம் இடம் என்னும் களத்திர ஸ்தானம் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும். ஒருவேளை ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், திருமணம் நடைபெறுவதில் தாமதமும், திருமணத்துக்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் சில குறைபாடுகளும் ஏற்படக்கூடும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்காது. அப்போது எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்த கிரகத்துக்கும், அந்த கிரகத்துக்கு உரிய தேவதைக்கும் வழிபாடு செய்து கெடுபலன்களில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.

கிருஷ்ணதுளசி

குரு, சுக்கிரன்: இவர்களுக்கு வழிபாடு செய்வதன் மூலம், நல்ல கணவன் அல்லது மனைவி அமையவும், இனிய இல்லறம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கிரகங்களால் ஏற்படும் தோஷமும் பரிகாரமும்:

சூரியன்: 7-ல் அமர்ந்து நீசம் பெற்றிருப்பின், திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இதற்கு அந்த ஜாதகர், சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். சூரியனின் ப்ரத்யதி தேவதையான ருத்ரன் அல்லது சிவபெருமானை வணங்க வேண்டும். சூரியனுக்கு வழிபாடு செய்யும்போது, ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். சிவனை வணங்கிப் போற்ற கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்து வழிபடலாம்.

சந்திரன்: சந்திரனுக்கு வலிமை குன்றி, அவர் 7-ல் இருப்பின், தாமதத் திருமணம் மற்றும் இல்லற வாழ்க்கையில் குறைகள் ஏற்படும். அப்போது வாசகர்கள் சந்திரனை வழிபட வேண்டும். பௌர்ணமிதோறும் அம்மனை வழிபட்டு வந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய்: செவ்வாயால் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டு இருப்பின், செவ்வாயை வணங்குவதுடன், சுப்ரமணியரையும் வணங்கி, சஷ்டி கவசம் படித்துப் பயன்பெறலாம்.

புதன்: புதன் 7-க்கு உடையவராகி, பலம் குன்றி ஜாதகத்தில் இருந்தால், அதுவும் தோஷம்தான். அதற்கு, ஜாதகர் புதனை வழிபட்டு வருவதுடன், மகா விஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் செய்யலாம்.

குரு: குருபகவான் 7-ல் அமர்ந்திருந்தால், அதிக தோஷம் ஏற்படுகிறது. இதற்கு குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால், நல்லபடியாக திருமணம் நடைபெறும்.

நவகிரகம்

 

சுக்கிரன்: சுக்கிரனால் ஜாதகத்தில் தோஷமிருப்பின், சுக்கிரனையும், இந்திரனையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டு வந்தால், தடைகள் விலகி, நல்ல வரன் அமைந்து, திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சனி: சனி 7-ல் இருந்தாலும், 7-க்கு உடையவருடன் சேர்ந்தாலும், 7-ம் வீட்டைப் பார்த்தாலும் திருமணம் நடைபெறத் தடையும் தாமதமும் ஏற்படும். இதற்கு சனிபகவானை வணங்கி வர வேண்டும். சனி மந்திரம், சனி காயத்ரி கூறி வழிபடவும்.

ராகு அல்லது கேது: ராகு அல்லது கேது 7-ல் இருந்தாலும், லக்னத்துக்கு 2-ம் வீடு, 8-ம் வீடு இவற்றில் இருந்தாலும் நாகதோஷம் ஏற்படுகிறது. அதன் காரணமாக திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகும். இதற்கு ராகுகேதுவை வழிபடுவதுடன், சர்ப்பேஸ்வரன், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகியோரையும் வழிபாடு செய்து வந்தால், சங்கடங்கள் விலகி, நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகத்தினால் களத்திர தோஷம் ஏற்பட்டுள்ளது என்று பார்த்து, அந்த கிரகத்துக்கு உரிய தெய்வத் திருவுருவப் படத்தை பூஜையறையில் வைத்து, தினமும் காலை மாலை இரண்டு வேளையும், உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வந்தால், தோஷம் விலகி நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க