பன்னீர்செல்வத்தின் 40 நிமிட மெரினா தியானம்..! எப்படி சாத்தியம்? | 40 minutes Merina meditation of Panneerselvam... How is it possible?

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:42 (09/02/2017)

பன்னீர்செல்வத்தின் 40 நிமிட மெரினா தியானம்..! எப்படி சாத்தியம்?

நினைத்தவுடன் நினைத்த இடத்தில் 40 நிமிடம் தியானம் செய்ய முடியுமா? தியானம் குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிவரும் வேளையில், அது பற்றி ஜோதிட சிரோண்மணி ஶ்ரீரங்கம் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியவற்றிலிருந்து முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்...

தியானம்

மனம், வாக்கு, செயல் என்று சொல்வார்கள். மனதிலிருந்து உதிக்கும் எண்ணஶ்ரீரங்கம் கிருஷ்ணன்ங்களே வார்த்தைகளாக வெளிவருகின்றன. வார்த்தைகள்தான் செயல்களாக வடிவம் பெறுகின்றன. செயல்கள் பழக்கமாக மாறி, நம் பழக்கம்,  குணமாக மாறிவிடுகின்றது. 

மனம் என்பது சிறுவயது முதல் நாம் சேகரித்துவைத்திருக்கும் தகவல்கள், செய்திகள், படங்கள்,  பாடங்கள், படித்தவை, கேட்டவை மற்றும் நம் அனுபவங்களை சேமித்துவைத்திருக்கும் தகவல் பெட்டி. இதிலிருந்து  ஆயிரமாயிரம் எண்ணங்கள் உதித்த வண்ணம் இருக்கின்றது. அப்படி எழும் எண்ணங்களை, நாம்  செயலாக்கம் செய்யும்போது ஏற்படும் `எதிர்வினை’ அதற்கு நம் `பதில் வினை’ எனச் சம்பவங்கள் சங்கிலித்தொடராகப் போய்க்கொண்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட நம் மனதையும் ஐம்புலன்கள் அடங்கிய நம் உடலையும் எப்படி  நம் கட்டுக்குள் வைத்துக்கொள்வது? அதற்கு உதவுவதுதான் தியானம். உடலுக்கு ஓய்வு தருவதுபோல் நம் எண்ணங்களுக்கும் ஓய்வு தருவது. எண்ணங்களற்ற  நிர்மலமான  மனம் அளவிட முடியாத சக்திமயமானது. அந்தச்  சக்தியை உபயோகித்து நாம் எதை நினைத்தாலும், அதைச் செய்ய முடியும்.

`தியானத்தில் உட்காருவது திடுதிப்பென ஒருவருக்கு சாத்தியப்படுமா?’ என்றால், அதற்கு நிச்சயம் முறையான பயிற்சி வேண்டும். அதன் பிறகு கால ஓட்டத்தில் அதில் நாம் சில நிலைகளைக் கடந்ததும், நமக்கு தியானப் பயிற்சி அளித்த குரு நமக்கு தீட்சை வழங்குவார்.
தியானம் செய்யப் பழகுவது எப்படி? குரு ஒருவரிடம் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ, தனிமையான ஓர் அறையிலோ  திறந்த வெளியிலோ அமர்ந்து தியானிக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணமாக உதிர்த்துவிட்டு ஏதுமற்ற மனநிலைக்கு வர வேண்டும்.

தியானம்

நாம் சீராக தியானம் செய்துகொண்டிருப்போம். ஆனாலும்,  எண்ணங்களின் உலகிலிருந்து  நம்மால் முழுவதுமாக விடுபட முடியாது.  அதற்குச் சில முன் ஆயத்தங்களை நாம் செய்துகொள்ள வேண்டும்.

*  மனத்தை எப்போதும்  மகிழ்ச்சியுடன்  வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவிடும் குணத்துடன் இருப்பது நமக்கு நாமே நம்மைப் பெருமைகொள்ளச் செய்யும். அடுத்தவர்களுக்கு உதவும்போது மனதில் ஒரு பூரிப்பு மேலிடும். அவை நமக்குள் நேர்மறை எண்னங்களை உருவாக்கும்.  

*  இயற்கை, மலர்கள், நீலவானம், தெளிந்த நீரோடைகள், குழந்தைகள் என எல்லாவற்றிலும் உள்ள அழகை ரசித்து மகிழ வேண்டும்.

*  தேவையானவற்றை மட்டும் பேசுங்கள். மௌனம் தியானத்துக்கு துணைசெய்யும்.

*  தியானம் செய்ய விரும்புபவர்கள், இயற்கையான விளைபொருட்களைச் சாப்பிடுவது நல்லது.

*  மனதுக்கினிய பாடல்களைக் கேட்டு  மகிழுங்கள்.

* தியானத்தை முதன்முறையாகத் தொடங்குபவர்கள், ஒரு நாளின்  குறிப்பிட்ட நேரத்தில், தொடர்ந்து 21 நாட்கள் தியானம் மேற்கொள்ளவேண்டும்.

ஓபிஎஸ் மெரினா தியானம்

யோகா, தியானம் போன்றவற்றில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறதென்றால்,  அவருடைய ஜாதகத்தில் சந்திரன், சனி கிரகங்களின் சேர்க்கையோ சந்திரன், சனி பார்வையோ  இருக்க  வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் மனோகாரகன். சனி கர்ம வினைகளுக்கு காரணமானவர். ஒருவருடைய கோபம், அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றுக்கு சனிதான் காரணம். அனுஷம் நட்சத்திரம், சந்திரன் சனி  ஏழாம் பார்வை சம்பந்தம் ஏற்பட்டுள்ளவர்கள், கொஞ்சம் ரிசர்வ் டைப்பாகவே இருப்பார்கள்.  காஞ்சிப் பெரியவர் மஹா பெரியவா உட்கார்ந்த இடத்தில் தியானம் மேற்கொள்வார். குருவும் ராகுவும் சேர்ந்திருக்கும் அமைப்பு, குருவின் வீட்டில் ராகு, ராகுவின் வீட்டில் குரு இருக்கும் அமைப்பு இருந்தாலும் அவர்கள் நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் தியானிக்கும் வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். 
ஓ.பன்னீர்செல்வம், தியானத்தில் ஈடுபாடுகொண்டவராக இருக்கலாம்; அதில் முறையான பயிற்சி பெற்றவராகக்கூட  இருக்கலாம். ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடம் அவருக்குக் கோயிலாகத் தெரிந்து, அதற்கு முன்பாக அமர்ந்து வழிபாட்டு முறையில் கண் மூடி அமர்ந்திருந்தாலும் இது சாத்தியமே!

- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்