வெளியிடப்பட்ட நேரம்: 00:31 (09/02/2017)

கடைசி தொடர்பு:10:12 (09/02/2017)

இன்று ஆறு கோயில்களில் கும்பாபிஷேகம்!

தமிழகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்ற ஆறு கோயில்களில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.  

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும், அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 10.45 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில், காஞ்சி காமகோடி பீடம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொள்கின்றனர்.

காஞ்சிபுரம் ஸ்ரீவழக்கறுதீஸ்வரர் கோயில்

வழக்குகளை தீர்த்து வைக்கும் கோயிலாக திகழும், காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுதீஸ்வரர் கோயிலில், இன்று காலை  7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதி, 8 மணிக்கு கோபுர விமானம் கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில், 16 திங்கட்கிழமை, 16 விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும், என்பது பக்தர்களின்  நம்பிக்கையாக இருக்கிறது.  

சென்னை மல்லிகேஸ்வரர் கோயில் 
 
தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாக திகழும், சென்னை முத்தியால்பேட்டை ஶ்ரீமல்லிகேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


பூண்டி ராகவேந்திரா கோயில் 

பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில், சூர்யோதயா நகரில் ஸ்ரீராகவேந்திரா கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில், இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை கோ பூஜையுடன் விழா  தொடங்கி, அதனைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அகரம் தூளி கோயில்

உத்தரமேரூர் அடுத்த அகரம் தூளி கிராமத்தில் உள்ள ஈஸ்வரர் கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயிலில், உலக நாயகி அம்மை உடனாய தோன்றிய ஈஸ்வரர் இங்கு காட்சியளிக்கிறார். 

வள்ளிமலை முருகன் கோயில் 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெறுகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு மலையடிவாரக் கோயில் நுழைவு வாயிலின் மீது அமைந்துள்ள ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, கருவறைக் கோயில் விமான கோபுரத்துக்கும் இன்று காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இங்குள்ள மலை மீது அமைந்துள்ள குடவறைக் கோயில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியாகவும், மலையடிவாரக் கோயிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக நாதராகவும் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

- ரா.வளன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க