பழநிமலையில் தைப்பூசத் திருவிழா... பக்தர்கள் கொண்டாட்டம்! | Thaipusam festival in Palani Murugan Temple

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (09/02/2017)

கடைசி தொடர்பு:16:44 (09/02/2017)

பழநிமலையில் தைப்பூசத் திருவிழா... பக்தர்கள் கொண்டாட்டம்!

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதத்தில் ‘பூச’ நட்சத்திரத்தோடு, நிறை சந்திரன் கூடும் மங்கள நாளில், கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுளான முருகன் கோயில்களில், தைப்பூச தினத்தன்று  முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடப்பது வழக்கம்.

தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருநாளில் முருகனின் அறுபடை வீடுகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படைவீடான பழநியில் நடக்கும் தேரோட்டம்  ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா, பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 12-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஏழு நாட்களாக பழநியில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று (புதன்கிழமை) மாலை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில், மேற்குவெளிப் பிராகாரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. 

விநாயகர் பூஜையுடன், பூரண கும்ப கலச பூஜைகள் நடந்தன. இரவு, வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நாளான இன்று 9-ம்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது. 

தைப்பூசத் திருவிழா தேரோட்டம்

இந்து அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் பழநி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் நடக்கிறது. 

தொலைபேசி எண்கள் அறிவிப்பு

 

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோயில், படிப்பாதை, மலைக்கோயில் ஆகிய இடங்களில் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், ஆண், பெண் இருபாலருக்குமான கிரீன் டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதவிநாயகர் கோயில், யானைப்பாதையில் உள்ள இடும்பன் கோயில், மலைக்கோயில் ஆகிய இடங்களில் மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. மலையேறும் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசலைத் தவிர்க்கவும் குடமுழுக்கு நினைவரங்கு வழியாக, யானைப்பாதையை இணைத்து, ஒருவழிப்பாதையாகவும், மலைக்கோயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதையை ஒருவழிப்பாதையாகவும் மாற்றியுள்ளனர். மேலும் திருக்கோயில் தொடர்பாக தேவைப்படும் விவரங்களைப் பெறுவதற்காக 04545- 242236, 242293,25544 ஆகிய எண்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

கொடி மரம்

பாதுகாப்பு வளையத்தில் பழநி!

தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு பழநியில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பழநி வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், பழநியில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் மூவாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தைப்பூசத் திருவிழா - திருக்கல்யாணம்

'அரகர... அரகர...முருகைய்யா  கந்தனுக்கு அரோகரா...  வேலனுக்கு அரோகரா..!' கோஷங்களால் அதிரும் பழநி!

பாதயாத்திரையாக பழநியை அடையும் பக்தர்கள், பழநி நகரில் பல இடங்களிலும் தங்கி ஓய்வு எடுத்த பிறகு கிரிவலம் வந்து மலையேறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பாதயாத்திரை பக்தர்கள் தைப்பூச நாளான இன்று சுவாமி தரிசனம் செய்வது சிறப்பானது என்ற நம்பிக்கையால், அதிகாலை முதலே மலையேறிச் சென்று முருகனை வழிபட்டு வருகிறார்கள். இதனால் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை, மலையேறும் பாதை, மலையின்  மேல்பகுதி எங்கும் பக்தர்களின் 'அரகர... அரகர...முருகைய்யா  கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா..!' கோஷம் விண்ணைப் பிளக்கிறது. 5 லட்சம் பக்தர்களின், பக்தி பரவசத்தில்  பழநி நகரமே முருகப்பெருமானின் அருள்மழையால் நனைகின்றது. 

தைப்பூசத் திருவிழா

சிவகிரியும் பழநியும் ஒன்றுதான்!

பழநி மலைக்கு அருகே மற்றொரு மலை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த இரண்டு மலைகளும்தான் காவடிக்கான அடிப்படை. கயிலாயத்தில் வைத்து, சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டுமலைகளை அகத்தியருக்குப் பரிசாக வழங்கினார் சிவபெருமான். அந்த மலைகளை எடுத்துக்கொண்டு பொதிகை மலைக்கு வருமாறு, இடும்பன் என்ற அசுரனுக்கு உத்தரவிட்டார் அகத்தியர். இதனால், இரண்டு மலைகளையும் காவடி போல் தூக்கிக்கொண்டு வரும் வழியில் களைப்படைந்த இடும்பன், தற்போதைய பழநி பகுதியில் மலையை இறக்கி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வந்த முருகன் சிவகிரி மலைமீது ஏறி அமர்ந்துக்கொண்டார்.

ஓய்வு முடிந்து எழுந்த மலையைத் தூக்க முயலும்போது, தூக்கவே முடியவில்லை. காரணம் அறிந்த இடும்பன், முருகப்பெருமானுடன் போர் புரிந்து உயிர்நீத்தார். இடும்பனின் செயலுக்கு அவரது மனைவி மன்னிப்புக்கேட்கவே, இடும்பனை உயிர்ப்பித்து தந்தார் முருகன். இதனால், இடும்பன் சுமந்துவந்த  மலைகளில் ஒன்றான சக்திகிரியில் இடும்பனுக்கு கோயில் அமைக்கப்பட்டது. கைலாயத்தில் இருந்து, இரண்டு மலைகளையும் காவடி போல இடும்பன் சுமந்து வந்ததால், பக்தர்களும் காவடி எடுத்துவருவதாக ஐதீகம். காவடி எடுத்துவரும் பக்தர்கள் முதலில் இடும்பன் மலைக்குச் சென்று வணங்கி விட்டு, அதற்கு பிறகு முருகப்பெருமான் வீற்றிருக்கும், சிவகிரி மலைக்குச் சென்று வழிபடுவார்கள். ஆனால், சமீபகாலமாக இடும்பன் மலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

- ஆர்.குமரேசன். படங்கள் : வீ. சிவக்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்