ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் வழிபடும் புலிப்பாணி சித்தர் யாரென்று அறிவோமா?

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருக்கும் புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளைச் செய்து வருகிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே சசிகலா வழக்குகளில் இருந்து விடுதலையாகி, தமிழக முதல்வராக வேண்டுமென இந்தப் பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா - பழநிமலை

யார் இந்த புலிப்பாணி சித்தர்?

புலிப்பாணி சித்தரின் குருவாகத் திகழ்ந்தவர் போகர். போகர்தான் பழநி மலையில் முருகக்கடவுளின் நவபாஷாண சிலையை புலிப்பாணிச் சித்தரின் உதவியுடன் வடிவமைத்தவர். அங்கே இவருக்கு தனிச் சந்நிதியே உண்டு. பழநி மலையை அருவுருவமாக இருந்து காத்து வருபவர். நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர். போகர், திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர்.

போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். 
போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி சித்தருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது.

ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும்  உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

முருகன்  சுதாகரன்

போகர், நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர். போகர், திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர். போகரின் பிரதான சீடர்தான் புலிப்பாணி சித்தர்.

‘கொங்கு மண்டல சதகம்’ என்ற நூலின் 36 -ம் பாட்டில் இருந்து கிடைக்கும் தகவலைக் கொண்டு, இவர் தமது குருநாதரான போகருடன் பழநிமலை அடிவாரத்தில் உள்ள வைகாவூரில் வாழ்ந்திருக்கக்கூடும் எனபதை  நாம் அறிய முடிகிறது.

‘பாணி’ என்ற சொல் ‘பாதம்’ என்ற பொருளைக் குறிக்கும். புலியின் பாதத்தைப் போன்ற பாத அமைப்பு இவருக்கு இருந்ததால் ‘புலிப்பாணி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம். ‘வியாக்கிரபாதர்’ என்ற இவரது வடமொழி பெயரே தமிழில் புலிப்பாணி என்று மாறியதாகச் சொல்லப்படுகிறது.

ஐதீகக் கதை - புலி வாகனன்

இவரது இயற்பெயர் புலிப்பாணி அல்ல என்றும், இது ஒரு காரணப்பெயர் என்றும் செவி வழித் தகவல்கள் கூறுகின்றன.
இவர் புலி ஒன்றை தமது சக்தியால் வசியப்படுத்தி, அதன் மேல் ஏறிக்கொண்டு காட்டுக்குள் சுற்றி, மூலிகைகளைத் தேடிப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், தனது குருநாதர் போகருடன் புலிப்பாணி காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அது மிகுந்த கோடைக் காலம் என்பதால், நீர்நிலைகள் பலவும் காய்ந்து காணப்பட்டன. அந்த நேரத்தில் போகருக்கு தாகம் ஏற்பட்டு குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். 

பக்கத்திலோ நீர்நிலைகள் எதுவுமில்லை. குருநாதரின் தாகத்தை தாமதிக்காது தணிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில், தான் வசியப்படுத்திய புலியின் மீது ஏறிச்சென்று தண்ணீர் தேடினார் புலிப்பாணி.

புலிப்பாணி

ஒரு சிறு ஓடையில் ஓடும் தண்ணீரைக் கண்டு முகமலர்ந்த அவர், தனது கைகளிலேயே தண்ணீரை அள்ளிக்கொண்டுவந்து குருநாதரின் தாகம் தணித்தார்.

‘புலி’ என்பது தமிழ்ச் சொல். ‘பாணி’ என்பது இந்துஸ்தானியச் சொல். இந்தச் சொல்லுக்கு ‘தண்ணீர்’ என்று பொருள். புலிமேல் சென்று தனது குருநாதருக்கு தண்ணீர் எடுத்து வந்ததால் ‘புலிப்பாணி’ என்று அழைக்கபட்டதாகவும்  கூறப்படுகிறது. அதன் பிறகு போகருடன் மேலும் நெருக்கமான, நம்பிக்கைக்கு உரிய சீடராக புலிப்பாணி விளங்கினார்.

பழநிமலை முருகனின் கட்டளைக்கு இணங்க, தண்டயுதபாணி சிலையை செய்வதற்கு உதவி புரிந்தவர் புலிப்பாணி என்றும், அந்தச் சிலை செய்வதற்குத் தேவையான நவபாஷாண மூலிகைகளை, தமது புலி வாகனத்தில் ஏறிச்சென்று காடுகளில் தேடித் திரிந்து சேகரித்து வந்தவர் என்றும் கூறுகிறார்கள்.

வைத்திய சாஸ்திரத்தில் 500 பாடல்களும், பல திரட்டுகளில் இடம்பெற்றதாக 100 பாடல்களும், ஜாலத் திரட்டில் 200 பாடல்களும் இவர் பெயரில் உள்ளன. இவருடைய சிறப்புத் திறமைகளாக, 'கண்கட்டு வித்தை', 'பச்சைப் பாம்பு வித்தை', 'மாம்பழ ஜாலம்', 'தேங்காய் ஜாலம்' ஆகியவற்றில்  தேர்ச்சி பெற்று இருந்ததாக ‘புலவர் சரித்திர தீபகம்’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருமூலர் காலத்தைச் சேர்ந்தவராகப் புலிப்பாணி இருப்பார் என்பதற்கு, வேறு சித்தர் பாடல்களிலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இதனால், இவரது காலம் கி.பி. 5-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரையறுக்க முடிகிறது.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, இன்றளவும் பல்வேறு அற்புதங்களை தமது தவ வலிமையால் ஆற்றி வருபவர் புலிப்பாணிச்சித்தர். சுதாகரன் தனக்கு பிர்சனைகள் ஏற்படும்போது, மனம் கவலையடையும் போதெல்லாம் இங்கு வந்து ஆசி பெறுவது வழக்கம்.இத்தனை சிறப்பு வாய்ந்த புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில்தான், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளை செய்து வருகிறார். 

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!