'செங்கல் தளி'... துக்காச்சிக் கட்டடக்கலை சொல்லும் தமிழர்களின் பெருமை..! | Thukkachi Architecture is another pride of Tamil people..!

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (10/02/2017)

கடைசி தொடர்பு:20:53 (10/02/2017)

'செங்கல் தளி'... துக்காச்சிக் கட்டடக்கலை சொல்லும் தமிழர்களின் பெருமை..!

மிழகக் கோயில்களும் தமிழர்களின் கலாசாரமும் உலகப் புகழ் பெற்றவை.  தமிழகத்தின்  சாதாரண குக்கிராமங்களில் இருக்கும் கோயில்களில்கூட மாபெரும் 'கலாசார விழுமியங்கள்'  பொதிந்து கிடப்பது நம் எல்லோரையும் ரொம்பவே ஆச்சர்யப்படுத்தும் செய்தியாகும். நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் பண்டைய கலை, அழகியல், கட்டுமானம் (குறிப்பாக செங்கல் தளி கட்டுமானம்) ஆகியவற்றைக் குறித்தான பார்வையை நாம் இன்னும் வளர்த்து எடுத்துக்கொண்டோமா என்றால், இல்லை எனும் கவலை தரும் பதில்தான் நம்மிடம் உள்ளது.

சமீபத்தில் தமிழ்ப் பாரம்பர்ய குழுமத்தின் சார்பாக, நடைபெற்ற உரை நிகழ்ச்சியில் அந்தப் பார்வை குறித்தான அவசியம் இன்னும் அழுத்தம் திருத்தமாக, உணர்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய, தேசிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியரான, இரா.விசுவநாதன் ஆற்றிய உரையிலிருந்து சில முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். 


''தமிழகக் கோயில்கள், மண், மரம், கருங்கல், செங்கல் என கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் மண் தளி, மரத் தளி, செங்கல் தளி  மற்றும் கற்றளி என நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. கால ஓட்டத்தில் மண் மற்றும் மரங்களால் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் புதைந்து அழிந்துவிட்டன. 

                               துக்காச்சி, செங்கல் தளி கட்டடக்கலை


நூற்றாண்டுகள் கடந்தும் நம் கண் முன்னே நிலைத்து நிற்பவை குடைவரைக் கோயில்களும், கற்றளிகளுமே. மக்களின் வருகை மட்டுமின்றி, ஆய்வுகளும்கூட பெருமளவு இவற்றை மையமிட்டே நடந்து வருகின்றன. மக்களின் வருகையற்று, இன்று சிதைந்துபோன நிலையில் காட்சி தரும் செங்கல் தளிகளைக் கொண்ட கோயில்களில் ஒன்று, கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோயில் செல்லும் வழியில், 'துக்காச்சி' எனும் கிராமத்தில் இருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
இந்தக் கோயில் 11 -ம் நூற்றாண்டில் விக்கிரமச் சோழன் காலத்தில், செங்கல் கோயிலாகக் கட்டப்பட்டது. மற்ற கோயில்களைப் போலவே அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கருங்கல் கோயிலாக மாற்றி அமைக்கப்பட்டாலும், கோபுர மேற்பகுதி, விமான மேற்பகுதி ஆகியவை செங்கல்-சுதை கட்டுமானங்களாகவே இருந்தன. இன்றும் இருக்கின்றன.
இந்தக் கோயிலை உருவாக்கிய சோழர்காலத்து சிற்பிகள் உலோகத்திலும் கருங்கல்லிலும் தங்களுடய வேலைப்பாடுகளை எத்தனை நேர்த்தியாக வெளிக்காட்டினார்களோ, அத்தனை நுட்பமாக தங்களது முத்திரையை செங்கல் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் பதித்திருக்கிறார்கள். 

                                 துக்காச்சியில் இருக்கும் பரிவார தெய்வங்கள் 


துக்காச்சியில் இருக்கும் இந்தக் கோயில்தான், தமிழர் கட்டடக்கலையின் உச்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தாராசுரம் கோயிலுக்கு இதுதான் அமைப்பு ரீதியாகவும் வடிவ ரீதியாகவும்  முன்மாதிரிக் கோயில். துக்காச்சி கோயிலில் இருக்கும் சோழர்கால ஓவியங்களின் சிறப்புகள் மற்றும் அதன் தொழில்நுட்ப நுணுக்கங்கள் வியக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.  
ஒரு மாபெரும் கலைப் பாரம்பர்யத்தின் பிள்ளைகள் நாம் எனும் உணர்வெழுச்சியை அடைகின்ற நாம், இன்று இந்தக் கோயில்கள் பராமரிப்பற்று, விமானத்திலும் கோபுரத்திலும் விதை விழுந்து செடி வளர்ந்து சிதைந்து போய் கிடப்பதைப் பார்த்து ஒன்றும் செய்யாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

'திருப்பணி செய்கிறோம்' என்கிற பெயரில் ஒவ்வொரு கோயிலின் பழைமையை வேரோடு பிடுங்கி எறிந்துவிடுகிறோம். திருப்பணி செய்வதென்றால், அந்த கலை மரபையும், பாரம்பர்யத்தையும் உள்வாங்கி கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால், அதற்கெல்லாம் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வீட்டுக்கு வெள்ளை அடிப்பதைப் போல சுண்ணாம்பு பூசுகிறார்கள். பல சுதை வேலையுடன் கூடிய சிற்பங்களை தேவையற்றதெனக் கருதி உதிர்த்து விடுகின்றார்கள். ஆனால், சிற்பம் என்பது வெறும் உருவமல்ல. அவை  நம்முடைய தொன்மங்களின், புராணங்களின் - கலை வெளிப்பாடு.

                                                துக்காச்சி கட்டடம் மற்றும் ஓவியம்


சாண்ட் பிளாஸ்ட் (Sand blast) முதலிய நவீன தொழிற்கருவிகளைக் கொண்டு கோயிலைச் சுத்திகரிக்கின்ற முறையானது, சிற்பங்களைச் சேதப்படுத்துவதால், அரசங்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இப்போதும் அதைக் கொண்டே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யாருக்கும் அது குறித்த போதுமான விழிப்பு உணர்வு இல்லை. 

இதைவிடவும் மோசம்,கேட்பாரற்று கிடக்கும் சில கட்டடங்களின் நிலை. தஞ்சைக்கு அருகில் இருக்கும் 'வெண்ணாற்றங்கரை' எனும் கிராமத்து குளத்தின் படித்துறையை ஒட்டியபடி கம்பீரமாக நிற்கும் மண்டபங்கள், இன்று பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் கூடமாய் பயன்படுகிறது. அவை யாவும் களையப்படவேண்டும்" என்றார் வருத்தமாக.

இப்படி ஒரு கலாசார நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்ப் பாரம்பர்யக் குழுமத்தின் செயற்பாட்டாளர்  பத்ரி சேஷாத்ரியிடம் பேசியபோது, 'தமிழ் மற்றும் இந்திய பாரம்பர்யத்தின் பல்வேறுக் கூறுகளை அறிந்துகொள்ள, அவை  குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே பரப்பவும்,பாதுகாக்க உதவுவதும்தான், எங்கள் குழுவின் நோக்கம்' என்றார் உற்சாகமாக.

பாரம்பர்யத்தைக் குறித்த ஒவ்வொரு விழிப்புஉணர்வுக் கருத்தரங்குகளும், இளைஞர்களிடையும் வருங்கால இளைய தலைமுறையினரிடையும் நிச்சயம் வெளிச்சம் பாய்ச்சும் என்பது நிதர்சன உண்மை.  பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் விழிப்பு உணர்வு நிகழ்வுகள் கொண்டாடப்பட்டால்தான், நம் தமிழ் மக்களின் வாழ்வியல், கலை, கட்டுமானம் குறித்த செறிவான, விசாலமான பார்வை இன்று இருக்கும் மக்களுக்கு புரியவைக்கப்படும்.

பாரம்பர்யம் வெல்லட்டும்..!

- ந. அருண் பிரகாஷ் ராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்