வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (14/02/2017)

கடைசி தொடர்பு:20:30 (14/02/2017)

புராணங்களில் தெய்வங்களுக்கு இடையிலான காதல் கதைகள்! #ValentineDay

காதல் என்ற சொல்தான், இளைஞர்கள் மனதில் எப்படி ஓர் எழுச்சியை உண்டு பண்ணுகிறது!  காதல் வயப்படும் இளைஞனோ, இளைஞியோ, ஏதோ  ஒரு புதிய பலம் தங்களுக்குள் வந்ததுபோல் துள்ளித்திரிகிறார்கள்.  அது ஒரு புதிய உலகம்;  சொர்க்கம்.  யதார்த்தமான உலகில் நடமாட முடியாத சூழலில்  அவர்களைக்கொண்டு சேர்க்கும்.  

 
காதலில்தான் எத்தனை வகைகள்... `ஒருதலைக் காதல்’, `இரு மனமொத்த காதல்’, `புனிதமான காதல்’, `தெய்விகக் காதல்’....  என ஏராளம். காதலுக்குச் சொல்லும் அடைமொழிகள் இவை.   

தெய்விகக் காதல் என்பது என்ன?  ஒருவரை ஒருவர் மனதால் ஈர்க்கப்பட்டு, உடல் ஸ்பரிசம் இல்லாமல் ,  ஆத்ம பரிவர்த்தனை செய்துகொள்வதே.  ஜென்ம ஜென்மங்கள் தொடரும் பந்தம் இது. 

தெய்வங்களின் காதல் கதைகளை ஒரு வலம் வருவோம் வாருங்கள்’ என நமக்கு விளக்கமளிக்கக் கூட்டிச் செல்கிறார், ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்... 

காதல் கதைகள்

வள்ளி மணாளன் முருகன்!ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்

முருகன் வள்ளியைக் காதலித்து,  மணமுடிக்க அவர் செய்த தந்திரங்கள்... அப்பப்பா சொல்ல முடியாதவை.  ஏன், தன் காதலைச் சொல்ல  தன் சகோதரன் கணேசனையே தூது போகச் சொல்லி அதைச் சாதித்து காட்டியவர்.  பிரம்மாவுக்கே வேதத்தின் பொருளை உரைத்தவர், காதலுக்காக  ஒரு வேடுவனாக மாறி, வள்ளியின் மனதை மாற்ற முயற்சித்து, அதில் வெற்றியும் காண்கிறார்.  அந்தக் காதலில் ஓர் அழுத்தம், ஒரு பிடிவாதம், அதை நடத்திக்காட்டிய விதம்  வள்ளி திருமணமாக இன்றும் நம் நெஞ்சில் ஆனந்தத்தைத் தருகிறது.

ஈசனை மணந்த  தட்சன் மகள்!

அடுத்து தட்சனின் மகளாகப் பிறந்து, ஈசனையே தன் கணவனாக மனதால் பாவித்து, அவர் பால் காதல்கொண்டு, ஊண், உறக்கமின்றி,  விரதம் இருந்து, அவரையே வேண்டி, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், தன் காதல் ஒன்றையே லட்சியமாகக்கொண்டு அதை நிறைவேற்ற தன் தந்தையையே பகைத்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்டவர் பார்வதி தேவி. தான் காதலித்துக் கைப்பிடித்தவரை யாகத்துக்கு அழைக்கவில்லை என்பதற்காக, தன் தந்தையையே சபித்தவள். அந்தக் காதலில்  இருந்தது அசைக்க முடியாத வைராக்கியம்.

காதல் கதைகள்

காலங்களை வென்ற ராதையின் காதல்!

கோகுலத்தில் கிருஷ்ணனும்  ராதையும் கொண்ட காதல்தான் எத்தனை இன்பமயமானது. தன்னைச் சுற்றி எத்தனையோ கோபிகா ஸ்திரீகள் இருந்தாலும், தன் மனம் அவளிடம்தான் என்பதை ஒரு தூய்மையோடு சொன்னவர். அவளுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்.  அவர்கள் காதலில் ஒரு நளினம், ஒரு மோகம், ஓர் எளிமை இருந்ததை என்றும் ரசிக்கலாம்.

காதல் கதைகள்

ஏழுமலைகளின் அரசி பத்மாவதி ஶ்ரீநிவாஸன் காதல்!   

ஸ்ரீநிவாஸன்-பத்மாவதி காதல்.  தன் லட்சியத்தை அடையவேண்டி, பூமிக்கு வந்து ஶ்ரீநிவாசனாக தன்னை வருத்திக்கொண்டவர் மகாவிஷ்ணு.  அதற்காகத் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் தானம் செய்து, திருமலையின் காடுகளில் அலைந்துதிரிந்தவர்.  தன் காதலில் ஜெயித்து, பத்மாவதியை மணமுடிக்க, தான் வாங்கிய கடனை இன்றும் அடைத்துக்கொண்டிருப்பதில் மகிழ்ந்துகொண்டு அதை தன் வாழ்க்கையாகவே ஏற்றுக்கொண்டவர்.    

காதல் கதைகள்

ஆண்டாளின் ஆத்ம நிவேதனம்!

உலகத்து காதலுக்கெல்லாம் ஒப்பற்ற தத்துவ விளக்கம்  ஆண்டாளின் காதல்.  இவளுக்கு அரங்கன்பால் கொண்ட காதல்  எப்பேற்பட்ட மகிமை வாய்ந்தது!  என்ன ஒரு யதார்த்தம்.  தன் காதலை தன் தந்தைக்கு ஒரு பூமாலை வாயிலாகப் புரியவைத்த விதம் என்ன ஓர் அழகு.  அதை அவரோடு வாதிட்ட விதம் என்ன ஓர் அற்புதம்.  அதில் ஜெயித்து, தன் தந்தையின் ஆசியோடு அவரை அடைய, உண்ணா நோன்பிருந்து  அதை நடத்திக்காட்டியவிதம்... ஆஹா, என்ன அருமை! 

ஆகவே, உள்ளம் சார்ந்த காதல் தெய்விகமானது.  அதில் ஓர் உறுதியும், செயல் வேகமும், விவேகமும் நிச்சயம் இருக்கும். அதில்  வெற்றி பெற்று வாழ்ந்தாலே காதலில் நீங்கள் வெற்றியாளர்கள்தான்.

- எஸ்.கதிரேசன் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்