ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் தெரியுமா? #PhotoStory

றைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். ஒவ்வொரு மலருக்கும் உள்ள ஆற்றல் பற்றி தெரியுமா? நம்முடைய நன்மைக்காக   அரவிந்த அன்னை மலர்களின் ஆற்றல்களைப் பற்றி நமக்குக் கூறி அருளி இருக்கிறார். 
நம்முடைய அன்றாட வாழ்க்கையில்தான் நாம் எத்தனை எத்தனை பிரச்னைகளைச் சந்திக்கிறோம்? எத்தனை தடைகளை நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது? 'யாரைத்தான் நம்புவதோ?' என்று அலைபாயவேண்டி இருக்கிறது? அவ்வப்போது மன அமைதியைத் தொலைத்துத் தவிக்கிறோம்?

ஒவ்வொரு மலருக்கும்

இது போன்ற நிலை வரும்போது அன்னையின் பக்தர்கள், அன்னையின் திருவுருவப் படத்துக்கு முன்பாக மலர்களைச் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதனால், தங்களுடைய பிரச்னைகள் நீங்குவதாக நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கவே செய்கிறது. நமது பிரச்னைக்கேற்ப ஒரு மலரைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பித்து மனமுருக வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் சிக்கல்கள் விலகும் . 

ஆயிரம் மலர்கள் இருந்தாலும் ஒரு சில மலர்களையும் அதன் ஆற்றல்களையும் பற்றிக் காண்போம்.

*.செம்பருத்தி : 
நாம் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி, காரியங்களில் வெற்றியும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவையும் நமக்குத் தருவது செம்பருத்தி. 

ஒவ்வொரு மலருக்கும்


* தைரியம் தரும் எருக்கம் பூ : 
என்ன நேருமோ ? என்று நாம் பயந்து கொண்டே இருந்தால் நம்மால் எதையும் தொடங்கவே முடியாது . நாம் இருக்கும் இடத்திலேயே தேங்கிவிடுவோம் . தைரியம்தான் மனதின் உரம் . இது மனிதனை முழுமையாக்கும் குணங்களுள் ஒன்று .அதனால்தான் எருக்கம்பூவை தைரிய மலர் என்று அன்னை கூறி இருக்கிறார்.
 

* எங்கும் எப்போதும் பாதுகாப்பை தரும் போஹன்வில்லா : 
மனிதனுக்கு அசட்டுத் தைரியம் மற்றும் வீரம் இவை மட்டும் இருந்தால் போதாது . கூடவே விவேகமும் வேண்டும் . அப்போதுதான் பாதுகாப்போடு வெற்றியடைய முடியும் . அழிவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் விவேகத்தை நமக்குத் தருவது போஹன்வில்லா. இந்த மலரை அன்னைக்குச் சமர்ப்பித்து விவேகத்தைப் பெறலாம். 

* தீயசக்திகளை வெளியேற்ற வேப்பம்பூ : 
தாங்கள் சுவாசிக்கும் காற்றுகூட இறைவனின் ஆற்றல் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள். இவர்கள் அனைவருக்கும் உகந்த பூ வெப்பம் பூ. வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் வேப்பம்பூவை அன்னைக்குச் சமர்ப்பியுங்கள் . இதனால், துஷ்ட சக்திகள் விலகும். 

வெள்ளைத் தாமரை


* பண வரவு தரும் வெள்ளைத் தாமரை : 
பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்பது நாம் அறிந்ததே. நல்ல வருமானத்துடன் கடன் தொல்லை இல்லாத வாழ்க்கையை நாம் விரும்பினால், வெள்ளைத் தாமரை மலரை அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபடலாம். 

* குடும்பப் பிரச்னையை நீக்கும் கனகாம்பரம் : 
குடும்ப வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கவேண்டும். ஆனால், பல வீடுகளில் கருத்து வேறுபாடு காரணமாகப் பல குடும்பங்களில் பிரச்னைகள் நிறைந்திருப்பதைக் காணமுடிகின்றது. அத்தகையவர்கள் மூன்று தட்டுகளில் கனகாம்பர மலர்களைச் சமர்ப்பித்து அன்னையை வழிபட்டால், குடும்பத்தில் சுமுகமான நிலை உருவாகும். 

* திருமண வரம் தரும் சம்பங்கி பூ :

சம்பங்கி மலர்


திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கிறதே என்று வருந்துகின்றீர்களா ? கவலைவேண்டாம் . அன்னையின் திருவுருவப் படத்துக்கு முன்பு ஐந்து தட்டுகளில் சம்பங்கி பூவை வைத்து , அவரிடம் முழுமனதோடு நல்ல வரன் வர வேண்டிக்கொள்ளுங்கள். 

வெள்ளை அரளி


* மனக்கவலை நீக்கும் வெள்ளை அரளி : 
நம்முடைய கவலைகளுக்குக் காரணமே நாம்தான். நம்முடைய மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் நம்முடைய கவலைகளுக்குக் காரணமாகின்றன. மற்றவர்களைக் குறைகூறாமல், நம்முடைய மனதில் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுவது வெள்ளை அரளி. வெள்ளை அரளி மலர்களை நாம் அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டால், நம்முடைய மனதில் நல்ல பண்புகள் ஏற்படும்; மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். 

* கடன் பிரச்னையைத் தீர்க்கும் நாகலிங்கப் பூ: 
இன்றைக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படவே செய்கிறது. நம்முடைய நியாயமான தேவைகளுக்குக் கடன் வாங்குவதில் தவறே இல்லை. நியாயமான தேவைகளுக்குக் கடன் வாங்கினாலும்கூட, சமயங்களில் நம்மால் அந்தக் கடனை திருப்பமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற நேரங்களில், அன்னைக்கு நாகலிங்க மலர்களைச் சமர்ப்பித்து வழிபட்டால், வருமானம் அதிகரிப்பதுடன், சிறுக சிறுக கடனும் நீங்கி, நிம்மதி ஏற்படும். 

* குழந்தை வரம் பெற டிசம்பர் பூ : 
ஆயிரம் செல்வம் இருந்தாலும் ஒரு குழந்தை செல்வமாவது வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் . குழந்தை இல்லாமல் வருந்துபவர்கள் அன்னைக்கு டிசம்பர் பூவை சமர்ப்பித்துத் தொடர்ந்து வேண்டி வாருங்கள் . நிச்சயம் சந்தான பாக்கியம் கிட்டும் . 

- கி .சிந்தூரி 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!