13-ம் எண் ராசி எடப்பாடியை என்ன செய்யப்போகிறதோ?

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற 13-ம் எண் ராசி எடப்பாடியை என்ன செய்யப்போகிறதோ? என்று பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணனைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய கருத்துகளின் தொகுப்பு இதோ...

13-ம் எண் ராசி

 

வாடகைக்கு நாம் வீடு தேடினால், வீட்டு புரோக்கர்கள் நமக்குக் காண்பிக்கும் நான்கு வீடுகளில் ஜோதிடர் ராமகிருஷ்ணன்இரண்டு வீடுகள் நிச்சயம் 8-ம் எண் வீடாகவோ, 13-ம் எண் வீடாகவோ இருக்கும். மற்ற எண்கள் உள்ள வீடுகள் ஒரு சில வேளைகளில்தான் கிடைக்கும். 

ஆனால், அதேவேளையில், 8-ம் எண் வீடுகள், 13-ம் எண் வீடுகள் ஒரு சிலருக்கு நன்றாக செட்டாகிவிடும். இந்த அளவுக்கு 13-ம் எண்ணைக் கண்டு பலரும் பயப்படுவதற்குக் காரணம் என்ன?

உலகம் முழுவதுமே வரலாற்றில் , 13-ம் எண் கொண்ட நாட்கள், வருடங்கள் வரும்போது பல்வேறு துயரச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உலக மக்களால் அப்படி நம்பப்படுவதற்குக் காரணமும் இருக்கிறது. போதாக்குறைக்கு வெள்ளிக்கிழமையும் சேர்ந்துகொண்டால், ரொம்பவே பயந்து போய்விடுவார்கள். ஆதாமும் ஏவாளும் வெள்ளிக்கிழமையில்தான், `கடவுள் சாப்பிடக் கூடாது’ என்ற அறிவுக்கனியை 'ஏதேன்' தோட்டத்தில் சாப்பிட்டார்களாம். 

வெள்ளிக்கிழமை 13-ம் தேதியில்தான் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. இதைவிட இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாள் தன் சீடர்களுடன் இரவு விருந்து சாப்பிட்டார். அப்போது அவருடன் உணவருந்திய கடைசி சீடரான யூதாஸ் காரியத்துதான் அவரை எதிரிகளுக்கு முத்தமிட்டு அடையாளம் காட்டினான். 

கடைசி விருந்து

லியானார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியமான `கடைசி விருந்து’ ஓவியத்தை அவர் வரைந்து முடிக்க, ஏழு ஆண்டுகளானதாகச் சொல்வார்கள். கூடவே, இயேசுவுக்கு மாடலிங்காக இருந்த வாலிபனே கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாகி யூதாஸ் காரியத்துக்கும் மாடலிங்கானான் என்றும் ஒரு கதை உண்டு. 

இதனால், ஐரோப்பா தொடங்கி அமெரிக்கா , ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் 13-ம் எண்ணை தங்கள் வாழ்க்கையில் தவிர்க்கத் தொடங்கினர். 

லியனார்டோ டா வின்சி

ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் 13-ம் எண் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக 12-பி பயன்படுத்தப்படுகிறது. 
லூஃப்தான்ஸா விமானத்தில் 13-ம் எண் கொண்ட இருக்கை கிடையாது. 12-ம் எண்ணுக்குப் பிறகு 14-ம் எண்தான் குறிப்பிடப்படுகிறது. 
ஃபார்முலா ஒன் கார் ரேசில் பங்கேற்கும் கார்களுக்கு 13-ம் எண் வழங்கப்படுவதில்லை. 

'ஃப்ரைடே 13' என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் படம் வெளியாகி 80 களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அப்பல்லோ 13 விண்கலம் வெற்றிகரமாகச் செயல்படாததற்குக் காரணம் 13-ம் எண்தான்’ என இன்னமும் நம்புகிறார்கள், அமெரிக்கர்கள். 
13-ம் எண் பற்றி இப்படி ஏராளமான மூடநம்பிக்கைகள் வெளிநாடுகளில் இருப்பதுபோல், நம் நாட்டிலும் சில உதாரணங்கள் உண்டு. ஒரு சிலருக்கு திடீரென அந்தஸ்தும் கௌரவமும் மிக்க உயர்வான வாழ்க்கையைத் தந்தாலும், மனக்குழப்பத்தையும் இடைவிடாத துன்பங்களையும் கொடுக்கிறதாம். 

எடப்பாடி பழனிசாமி

நமது நாட்டின் 13-வது பிரதமராக வாஜ்பாய் 13 நாள்களே நீடித்தார். அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டின் 13-வது முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவரது ஆட்சி நீடித்து நிலைக்குமா என்ற அச்சம் பொதுமக்களுக்கும் நிலவிய வண்ணமே உள்ளது.

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!