மகா சிவராத்திரியில் வேடனுக்கு முக்தி தந்த திருவைகாவூர்!  #MahaShivaratri | Hunter got salvation at Thiruvaikavur on Maha Shivaratri

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (24/02/2017)

கடைசி தொடர்பு:08:33 (24/02/2017)

மகா சிவராத்திரியில் வேடனுக்கு முக்தி தந்த திருவைகாவூர்!  #MahaShivaratri

வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் முக்தி கொடுத்து அருளிய தலம். சம்பந்தர் பாடல் பெற்ற சிவ ஆலயம். பிரம்மா, விஷ்ணு, அக்னி வழிபட்ட தலம், வேறெங்கும் இல்லாத அம்சமாக  நந்திதேவர் வாயிலை நோக்கி திரும்பி நிற்கும் அதிசய அமைப்பு என  மற்ற சிவதலங்களுக்கு இல்லாத சிறப்புகள் பல பெற்ற தலம் திருவைகாவூர் ஆலயம். 

திருவைகாவூர்  

தஞ்சாவூர்  மாவட்டத்தில்  திருவைகாவூரில் அமைந்துள்ள இந்த வில்வவனேசுவரர் ஆலயம் சிவராத்திரித் தலங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. 

மகா சிவராத்திரி தலங்களாக போற்றப்படும் திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி என்ற வரிசையில் திருவைகாவூரும் ஒன்றாக விளங்குவதற்கு சுவையான வரலாறு உண்டு. 

ஒரு மகா சிவராத்திரி நாளில் ஒரு வேடன் வேட்டைக்காக மான் ஒன்றை துரத்தி வந்தான். உயிர் பிழைக்க தப்பியோடிய மான் காட்டில் உள்ள ஒரு சிவலாயத்தில் (திருவைகாவூரில்) தஞ்சம் புகுந்தது. அங்கு தவநிதி என்ற முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். 

திருவைகாவூர் கோயில் 

வேடனும் வில்லோடு அந்த தலத்திற்குள் நுழைந்தான். அப்போது, தவம் கலைந்த முனிவர் அவருக்கு பின்புறமாக மறைந்து நின்ற மானையும், எதிரே மானை வேட்டையாட நின்ற வேடனையும் கண்டார். நிலைமையை புரிந்து கொண்டார். அந்த மானிற்கு அவர் அபயமளித்தார். ஆனால் இறை நம்பிக்கையும் இரக்க குணமும் துளியும் இல்லாத அந்த வேடன், முனிவர் மீது கடும் கோபம் கொண்டான். 
உடனே தன் கையில் வைத்திருந்த வில்லெடுத்து, முனிவரை தாக்க முற்பட்டான். தன்னையே கதியென நினைக்கும் முனிவருக்கே ஆபத்து என்றால் சிவன் விட்டுவிடுவாரா என்ன? உடனே  புலி வடிவெடுத்து ஆலயத்திற்குள் நுழைந்தார். சற்றும் எதிர்பாராத அந்த வேடன் பயத்தில் தன் கையில் வைத்திருந்த வில்லையும் அங்கேயே போட்டு விட்டு அருகே இருந்த மரத்தில் ஏறிக்கொண்டான். 

அந்த புலி, 'அவனை விடுவதில்லை' என்பது போல் மரத்தடியிலே நின்று விட்டது. நேரம் செல்ல செல்ல வேடனுக்கு பயமும் பசியும் அதனால் சோர்வும் ஏற்பட்டது. இரவும் நெருங்கியது. எங்கே களைப்பு மிகுதியால் உறங்கி விடுவோமோ, உறக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவோமோ என்று அஞ்சினான் வேடன். இதனால் உறக்கம் வராமல் இருக்க மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை அனைத்தும் கீழே புலி வடிவம் கொண்டிருந்த சிவபெருமானின் மேலேயே விழுந்த வண்ணமிருந்தது. 

திருவைகாவூர் சிவலிங்கம் 

வேடன் தான் செய்வது இன்னதென்று அறியாமலேயே, ஒவ்வொரு வில்வ இலையாகப் பறித்து கீழே புலி வடிவத்திலிருந்த சிவபெருமான் மேல் போட்டதன் மூலமாகச் மகா சிவராத்திரியன்று சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தை அவன் அறியாமலேயே பெற்றுவிட்டான். பரமேஸ்வரன் நேரில் தரிசனம் கொடுத்தார். மேலும் வேடனுக்கு வேண்டிய வரம் அளித்து மறைந்தார்.  

சிவனை தினமும் துதிக்கின்ற பல பக்தர்களுக்கு காட்சி தந்து வரம் தராத அவன். ஒரு வேடன் மகாசிவராத்திரி அன்று அறியாமல் செய்த அர்ச்சனையை ஏற்று முக்தியும் அளித்தார். 

மகா சிவராத்திரியில் சிவ வழிபாடு எவ்வளவு உயர்வானது என்பதை இக்கதை உணர்த்துகிறது. எனவே இந்த நல்ல நாளில் சிவனை வழிபடுவோம்; ஈசனின் அருளை பெறுவோம்.

- ஜி.லட்சுமணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்