வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (24/02/2017)

கடைசி தொடர்பு:19:54 (24/02/2017)

ஆதி யோகி சிவன் சிலையைத் திறந்து வைத்தார் மோடி

கோவை வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 112 அடி ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, மத்திய, மாநில அமைச்சர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Aadhi yogi statue

இதற்காக கோவை வந்த மோடிக்கு, கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மோடி சென்றார். 

 

அப்போது பேசிய மோடி, "ஆதியோகி திறப்பு விழாவில் பங்கேற்பதில் பெமைப்படுகிறேன். மகா சிவாரத்திரி இயற்கையை பாதுகாப்பதை வலியுறுத்துகிறது.  பல கடவுகள் இருந்தாலும் ஆதியோகி ஒருவரே அனைவருக்கும் கடவுள். ஜீவாத்மாவை, பரமாத்வாக்குவது யோகா. வேறுபாடுகளை கடந்து பக்தி என்ற ஒன்றில் அனைவரும் இணைந்துள்ளோம். நல்லவற்றுக்காக போராடும் திறனை இறைவன் வழங்குகிறார்.


நான் என்பதில் இருந்து நாம் ஆக்குவது யோகாதான். காசியில் இருந்து கோவைக்கு நம்மை சிவன் இணைத்துள்ளார். யோகா என்ற பரிசை உலகிற்கு இந்தியா வழங்கியுள்ளது. யோகா இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. யோகா அனைவரையும் ஒன்றிணைக்கும். யோகாவை காப்பது நம் முக்கிய கடமை. பல மொழிகள் இருப்பினும், ஆன்மிகமே அனைவருக்குமான மொழி.

இன்று உலகம் முழுவதுக்குமே அமைதி தேவைப்படுகிறது. போர்களில் இருந்து மட்டுமல்ல மன அழுத்தத்தில் இருந்தும் அமைதி தேவைப்படுகிறது. அதற்காக நம்மிடம் உள்ளதுதான் யோகா" என்றார்.  

இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம், கோவை விமான நிலையம் செல்லும் மோடி, இன்றிரவே டெல்லி திரும்புகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க