ஊட்டியில் சூட்டிங் அதிகம் ஏன்? #Astrology | Why Ooty is Best place for Cinema Shooting?

வெளியிடப்பட்ட நேரம்: 06:24 (26/02/2017)

கடைசி தொடர்பு:06:23 (26/02/2017)

ஊட்டியில் சூட்டிங் அதிகம் ஏன்? #Astrology

ஊட்டியில் அதிகமாக சினிமா ஷூட்டிங் நடக்க என்ன காரணம் என்று வாஸ்துநிபுணர் எம்.எஸ்.ஆர் .மணிபாரதியைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை. அந்த பதில்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக..

ஊட்டி 

சினிமாவின் அதிபதிகளான ‘சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்ற ஜாதக அமைப்புக் கொண்டவர்களே கற்பனைத்திறன்வாஸ்துநிபுணர் எம்.எஸ்.ஆர் .மணிபாரதி கொண்டு கதை, கவிதை, பாடல்கள், இசை, டைரக்ஷன், நடிப்பு என மக்களின் மனம் ஈர்க்கப்படும் விதத்தில் அமைத்துத் தர முடியும்,’ என்பது பொதுவான விதி. ஆனாலும் வாஸ்துத் தன்மைதான் உயர்வைத் தருகிறது. சந்திரன் கற்பனைத் தன்மையையும் புதன் கலையின் விசாலத்தையும், சுக்கிரன் கவர்ச்சியையும் தரவேண்டுமானால், இந்தக் காட்சிகளையும், கவர்ச்சிகளையும் வேகப்படுத்தித் தருபவை, வாஸ்து ஆற்றல்கள்தான். 

திரைப்படம் வெற்றிபெற வெளிப்புறப் படப்பிடிப்புகள் பெரிதும் உதவுகின்றன. செலவைக் குறைத்தும் சுக்கிரனின் யோகத்தன்மை எனும் ஆதாயத்தை அதிகரிக்கச் செய்தும் தருவதற்கு வெளிப்புறப் படப்பிடிப்புகளே காரணம்.. 

பொதுவாகப் பாட்ல்காட்சிகள் என்றில்லாமல், மற்ற காட்சிகளைக்கூட ‘மலை, மலை சார்ந்த இடம்’, ‘நீர்வீழ்ச்சி அதை ஒட்டி ஓடும் நீரோடை , அந்த நீரோடையைச் சார்ந்த நிலப்பகுதி’, ‘நிலப்பகுதியின் இயற்கை எழில் அழகு’ என்று பார்த்தால், ‘செட்’ அமைப்பைக் காட்டிலும் இந்த எழில் சார்ந்த இடங்கள் சினிமாவை வாழவைக்கின்றன. மூன்றாம்பிறை படத்தின் வாயிலாக ஊட்டியின் இயற்கை அழகையெல்லாம் ஒரு சேர தந்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா. 

 

ஊட்டி வரை உறவு 

மேற்குத் தொடர்ச்சி மலை அரசியின் காலடியில், ஊட்டியாக இருந்தாலும் சரி கம்பம் தேனியாக இருந்தாலும் சரி 80 கள் தொடங்கி இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏதேனும் ஒரு படத்தின் படப்பிடிப்பு இப்போதும் நடந்து வருகின்றது. சினிமா சார்ந்த அனைவரையும் வளம்பெறச் செய்து வருகின்றது. 

ஒரு பாடலை ஒலிநாடாவில் கேட்டாலே, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்வது இந்த இயற்கையின் உந்துதல்தானே! மனக்கண்முன் நடிகர் நடிகைகளை மட்டுமா பார்க்கின்றோம். அங்கே நம்மையுமல்லவா பொருத்திப் பார்க்கின்றோம்! 
நீலகிரி எனும் மலையரசி! 

சினிமாவின் தொடக்கக் காலத்தில், ஸ்டுடியோக்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்புச் செய்தாலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் ஒரு பாடல் காட்சியாவது படமாக்கப்படுவது வழக்கமானது. ‘மலைகளின் அரசி’ நீலகிரி என்று வர்ணிக்கப்படுவதற்கு ஏற்றார்போல் பசுமை நிற ஆடையைத் தன்மேல் போர்த்திக்கொண்டு, பரந்து விரிந்து கிடக்கும் நீலகிரியின் அழகை 'காதலிக்க நேரமில்லை' படத்தில் இயக்குநர் படம் பிடித்துக் காட்டிய பிறகுதான், பலரும் ஊட்டியை நோக்கி படையெடுத்தனர். 

வெள்ளையர் காலம் முதல் சென்னையை (மெட்ராஸ்) தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டாலும், ஓய்வு எடுப்பதற்கும், அரசு சம்பந்தமான பல முடிவுகள் எடுப்பதற்கும் ‘ஊட்டிக்கு’ வருவது என்பது ஒரு தொடர்கதைதான். இதற்கு வாஸ்துவின் பல்வேறு அம்சங்களே பலம் என்றால், கண்டிப்பாக வியப்பைத்தான் ஏற்படுத்தும். 

சென்னையும் நீலகிரியும் 

தமிழகத்தின் தலைநகரமான சென்னை, தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் கிழக்கே கடல், மேற்குச் சார்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை என்ற அமைப்பைப் பெற்றிருப்பதும், தமிழகமானது வடக்கு ஈசான்யம் வளர்ந்த அமைப்பிலும்., கிழக்கு ஈசான்யம், மேற்கு வாயுவியம் விரிவடைந்துள்ளது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புடன் இருப்பதால்தான், தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மட்டும் இல்லாமல், உலக அரங்கிலும் பல தொழில் மற்றும் சினிமா சார்ந்த தொழிலிலும் சிறப்பான இடத்தில் உள்ளது. 

சூட்டிங் 

தமிழகத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையானது சென்னைக்கு மேற்கு பாகத்தில் அமையப்பெற்று, தெற்கில் பல அடுக்குகளாக உள்ளது. இந்த வகையில், தென்மேற்கு என்று சொல்லக்கூடிய பகுதியில் நீலகிரிமலை அமைந்திருப்பதால்தான் ஊட்டிக்கும் சென்னைக்கும் இடையிலான உறவு பாலமாகவும் பலமாகவும் உள்ளது. 

வாஸ்து சாஸ்திரப்படி தென்மேற்கில் மலைகளால் சூழப்பட்டு உயர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமேயானால், அது தனிச்சிறப்புடன் செல்வச் செழிப்போடு இருக்கும். வடகிழக்கு ஈசான்யம் என்ற பாகத்தில் உள்ள சென்னை இதனால் செழிப்படைகிறது. தென்மேற்கு உயர்ந்தும் வடகிழக்கு தாழ்ந்தும் இருக்கவேண்டும் என்ற தத்துவம் இதன்மூலம் நீலகிரியையும் சென்னையையும் வளப்-படுத்துகின்றது. 

ஊட்டி 

சினிமாவின் சொர்க்கபுரி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள்! 

பொள்ளாச்சியும், உடுமலைப்பேட்டையைச் சார்ந்த பகுதிகளும் ‘சினிமாவின் சொர்க்கபுரி’ என்று கூறலாம். 
இந்த வகையில் பொள்ளாச்சியும், இதைச் சார்நத ஆளியாறு, உடுமலைப்பேட்டை, காளியாபுரம், ஊத்துக்குளி, நெகமம், கிணத்துக்கடவு, திருமூர்த்தி மலை, சூளிக்கல், வால்பாறை, அமராவதி அணைப்பகுதிகள் சினிமாவின் சொர்க்கபுரியாக உள்ளன. 

தெற்கேயும், மேற்கேயும் மலைகளால் சூழப்பட்டு; தெற்கில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் நீர்வீழ்ச்சிகள், மேற்கில் இருந்து ஓடிவரும் குரங்கருவி, சாலையில் இருந்து கிழக்கில் தெற்கில் இருந்து வடக்காக ஓடும் ஆறு, சாலையில் இருந்து கிழக்குச் சரிவில் உள்ள ஆற்றுப் பகுதி என வாஸ்து சாஸ்திரத்தின் சகல அம்சங்களையும் பெற்றிருப்பது ஆளியாறு. இந்த ஆளியாறு அணைப்பகுதிகள் தென்மேற்கே அழகுற அமைந்துள்ளன. விருந்தினர் இல்லம், இவ்வணையின் சுற்றுப்புறத்தில் நடைபெறும் அனைத்துப் படப்பிடிப்புகளிலும் இந்த இல்லம் இடம்பெறும் பகுதியாக அமைகிறது. இந்த விருந்தினர் மாளிகையில்தான் ‘அமைதிப்படையில்’ சத்யராஜ் ‘நாகராஜ சோழனாக’ வலம் வந்தார். இந்தப் படம் சத்யராஜின் வெற்றிப்பட வரிசையில் பிரதான அந்தஸ்தைப் பெற்றது. இந்த இல்லம் இவ்வணையின் தென்மேற்கில் தெற்குச் சார்ந்து அமைந்திருப்பதும் இதன் வாஸ்து சிறப்புத் தன்மைக்கு உரிய கூடுதல் சிறப்பாகும்.

 -எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்