விபத்துகளில் இருந்து காப்பாற்றும் கோயில்..!

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்தான் அது. அம்பாள் தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து, ஸ்ரீசிறுபிடியீசர், ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரர் என்ற திருநாமங்களோடு வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு ஶ்ரீமங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோயில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

கோயில்

கோயில் உருவான வரலாறு 

திருக்கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட, அதில் பார்வதி வெற்றிபெற்றுவிட்டாள். தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வெட்கத்தினால், சிவன் திடீரென எங்கோ மறைந்துவிட்டாராம். இதனால் மனக்கவலையடைந்த பார்வதி, ஈஸ்வரனைத் தேடியலைந்து, இந்த ஊருக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கினார். அதில், ஒரு பிடி ஈரமணலை எடுத்து, சிவலிங்கமாகப் பிடித்து சிவனை வழிபட, சுவாமி பிரத்யட்சமாகி பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.  கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால்,  அபிஷேகம் செய்வதில்லை.  மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது.  

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்' என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்துவந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்துபோன திருஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.  இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது என்பதால், கூடுதல் சிறப்பு என்கிறார்கள்.  

திருத்தலம்

முத்துசுப்ரமணிய குருக்களைச் சந்தித்தபோது, “சோழர்காலத்தைச் சேர்ந்த பழைமையான கோயில் இது. செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாகவும் இருக்கு.  பெரும்பாலும் கடன்தொல்லை, பயம், தற்கொலை எண்ணம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.  

முத்துசுப்ரமணியன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் 2-ல் இருந்தால் வாக்குவாதம், குடும்பத்தில் பிரிவு, 4-ல் இருந்தால்,  உடல் ஆரோக்கியம் பாதிப்பு, 7-ல் இருந்தால், கணவன் மனைவி பிரிவு, விபத்து, கண்டம், 8-ல்    இருந்தால், மாங்கல்ய தோஷம், அவமானம், 12-ல் இருந்தால் விரயம் போன்ற இன்னல்கள் ஏற்படும்.  இப்படி அனைத்து துன்பங்களில் இருந்தும் நம்மை செவ்வாய் பகவான் காப்பாற்றுகிறார்.

புதிதாக  வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து  அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு  மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள  தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.  

குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் காட்சிதரும் திருஞானசம்பந்தர், இங்கு வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் ஆகியோரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.  செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையிருந்தால் இங்கு வந்து வணங்க தடை அகலும்.  மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது.  

சிவ திருத்தலம்

ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம் இங்கு விழாக்காலம். இது மிகவும் குக்கிராமம் என்பதால், இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள், தங்களுக்கு வேண்டிய அர்ச்சனைப் பொருட்களை வெளியிலிருந்து வாங்கி வருவது நலம்” என்றார்.  

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார்  2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.  
  
- மு. இராகவன்

படங்கள் : க. சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!