வெளியிடப்பட்ட நேரம்: 04:22 (01/03/2017)

கடைசி தொடர்பு:04:21 (01/03/2017)

ராகு- கேது தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள் #PhotoStory

சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியைப் போலவே ராகு-கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரது ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும். திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி, ராகு-கேது தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிப்படுவோர் உண்டு. அந்த தோஷத்திற்குரிய பரிகாரத்தலங்களை வழிபட்டால், அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

திருக்களாச்சேரி

ராகு- கேது தோஷம்  நீக்கும் கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. மகாவிஷ்ணு  வழிபட்ட தலம் என தலபுராணம் கூறுகிறது.
ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் விலகும்.

ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று.  இது வாயுத் தலம். காற்றாக எம்பெருமானே எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும் என்பது ஐதீகம்.

சென்னை ஸ்ரீகோலவிழி அம்மன்

சென்னை ஸ்ரீகோலவிழி அம்மன்


சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும்  ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில்.
ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள  ஜவஹர்லால் தெருவில்  அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன்  அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!
இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும்  நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன

தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்

தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்

திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீசக்தி விநாயகர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருப்பாம்புரம்

திருப்பாம்புரம்

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.

திருமுருகன்பூண்டி

திருமுருகன்பூண்டி 

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.

தொகுப்பு:ஜி.லட்சுமணன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்