வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (02/03/2017)

கடைசி தொடர்பு:18:59 (02/03/2017)

ஈஷாவின் ஆதியோகி... ஆகம விதிப்படி சரியா?

கோயம்புத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் ஈஷா யோகா மையம் உருவாக்கியுள்ள 112 அடியுள்ள மார்பளவு ஆதியோகி (சிவன்) சிலை, தொடர்ந்து சர்ச்சை ஆகிவருகிறது. 'அந்தச் சிலை ஆகம விதிகளின்படி எழுப்பப்படவில்லை' என சிற்பிகளும், ஆகமவிற்பன்னர்களும் கொந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

ஆதியோகி

ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது ஈஷா யோகா மையம். இந்நிலையில், இந்த 112 அடி சிலையும் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது. 'கட்டடம் எழுப்புவது தொடங்கி, பொதுப்பணித்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளின் அனுமதி பெறாமலேயே பிரமாண்டமான சிலை எழுப்பப்பட்டுள்ளது. மத்திய, மாநில, அரசுகளின்  கீழ் உள்ள பல்வேறு துறைகளின் அனுமதி பெறவில்லை. மேலும் இயற்கை வளங்கள், மரங்கள், வனவிலங்குகளின் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன. யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது' என்று இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ஈஷா மையத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆதியோகி எனும் சிவனின் சிலையை, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்துவிட்டார். 

ஆகமவிதி மீறல் என்று தற்போது கிளம்பியிருக்கும் சர்ச்சை குறித்து, மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி கீர்த்திவர்மனிடம் கேட்டபோது, “அருவுருவ வடிவிலான (லிங்க வடிவம்) சிவனை வழிபடுவதுதான் இந்து சமயத்தின் மரபு. உருவவடிவிலான வழிபாடு என்பது மிகக்குறைவு. அப்படி உருவ வடிவிலான சிவனை வழிபட்டால், இந்து ஆகம விதிகளின்படி, மார்பளவு சிலையாக வைக்கக் கூடாது.

முழுத்தோற்றத்துடனான சிவனைத்தான் வழிபட வேண்டும். முழுத் தோற்றத்தில் வழிபட்டால் சந்திரசேகர மூர்த்தி போன்ற உருவங்களாகத்தான் சிவனின் அமைப்பு இருக்க வேண்டும். மார்பளவு சிலை என்பது இந்து ஆகம விதிகள், சாஸ்திரங்களின்படி தவறானது. கிராம தேவதையான காளிக்கு மட்டும்தான் மார்பளவு உருவத்துடன் சிலைவைத்து வழிபாடு நடத்துகிறார்கள். மார்பளவில் சிவன் சிலை என்பது இந்தியாவில் எங்கும் இல்லை.

பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே பெரிய பெரிய சிலைகளை செய்ய தொடங்கிவிட்டார்கள். கோயில்களுக்குள் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. விநாயகருக்கு ஓர் அளவு, முருகனுக்கு ஓர் அளவு என ஒவ்வொரு கடவுளுக்கும் என தனித்தனி தாளமானம் எனப்படும் அளவுகோல்கள் உண்டு. ஒரு கோயிலை கட்டுவதற்கென்று நிறைய நுணுக்கங்கள் உண்டு. ஓர் அரசன் கோயில் கட்டப்போகிறார் என்றால், அந்த தெய்வத்தின் நட்சத்திரம், அந்த ஊரின் நட்சத்திரம் மற்றும் கோயில் கட்டுவதற்கான பொருளுதவி செய்யும் கர்த்தாவின் நட்சத்திரம் என இந்த மூன்றுக்கும் பொருத்தம் பார்க்க வேண்டும். அதில் கிடைக்கும் அளவைக் கொண்டு வெற்றி, நற்செல்வம், புகழ் என எந்தப் பலன் கிடைக்கிறது என கணிப்பார்கள். அதன் பேரிலேயே கோயிலின் முழு வேலைப்பாடுகளும் அமைந்திருக்கும்.

ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு மாதிரியான கோயில்களை அரசர்கள் எழுப்பினார்கள். அதாவது, போரில் வெற்றி பெறுவதற்கு, குழந்தைப் பாக்கியம் பெறுவதற்கு, நன்றாக படிப்பு பெறுவதற்கு என்று தேடிச் சென்று நாம் வழிபடுகின்றோம். இப்படிப்பட்ட பலன்களை வேண்டிக் கொண்டே, இந்து சமய ஆகமங்கள் காட்டிய வழியில் இப்படிப்பட்ட கோயில்கள் எழுப்பப்பட்டன. பழைமையான கோயில்களின் மூலவர் சிலையை கணக்கெடுத்தால், அக்கோயிலின் மொத்த அமைப்பையும் கணக்கு போட்டுச் சொல்லிவிடலாம். இப்படித்தான் மன்னர்கள் கோயில்களை எழுப்பினார்கள். இப்போதெல்லாம் இப்படி கணக்குப் பார்த்துக் கோயில்கள் கட்டுவது குறைந்துவருகிறது. ஏதாவது ஒரு ஸ்தபதியைப் பார்த்து ஒரு சிலையை வைத்து கோயிலை எழுப்பிவிடுகிறார்கள்” என்று சொல்லும் கீர்த்திவர்மன்,
''இதுபோன்ற சிலைகளை பிரதிர்ஷ்டை செய்யக்கூடாது. இது நாட்டுக்கே கேடு. குறிப்பாக, அரசாட்சி செய்பவர்களுக்கு கேடாக முடியும். வீட்டுக்குள்ளே இதுபோன்ற சிலைகளை வைத்தால் அவர்களோடு அந்தக் கேடு முடிந்துவிடும். ஆனால், பரார்த்தமாக (எல்லா மக்களும் வணங்குவது போல்) அமைத்தால், அது அந்த நாட்டையே பாதிக்கும். அரசனையும் பாதிக்கும். இதனால் பலபிரச்னைகள், விளைவுகளை தமிழகமும் இந்தியாவும் சந்திக்க நேரிடும்.

உண்மையான ஆதியோகி சிலை

குறிப்பாக மூலவர்களை கற்சிலைகளாக மட்டுமே அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஆதியோகியின் சிலையானது இரும்பு உள்ளிட்ட பொருட்களால் செய்துள்ளதால், சனியின் ஆதிக்கம் அதிகரிக்கக் கூடும். அதனால் இந்தியாவுக்கே பெரும் பீடை பீடித்துவிடும். இதன் எதிர்விளைவுகளை எல்லாம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து சந்திப்பார்கள்” என்றும் எச்சரிக்கையாகச் சொன்னார்.
கோவை ஈஷா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை ஆகம சாஸ்திரத்துக்கு உட்பட்டதா என்பது பற்றி ஶ்ரீசோமசேகர சிவாசார்யரிடம் கேட்டோம்.

''ஆதியோகி சிவன் பற்றி ஆகமத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. யோகநெறிகளை உணர்த்துபவர் என்பதால், சிவபெருமானை யோகாயே; யோகபதாயே என்றெல்லாம் போற்றுகிறோம். ஆகவே சிவபெருமானை ஆதியோகி என்று போற்றுவது சரிதான்.
ஆனால், ஆகம சாஸ்திரங்களில் ஆதியோகி சிவபெருமானின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகையில், 'ஆதியோகி சிவபெருமான் நான்கு திருக்கரங்களுடன், முழுவடிவ உருவமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் வழிபாட்டுக்கு உரியவர் என்பதால், உரிய சந்நிதியில் முறைப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும். மற்றபடி திறந்தவெளியில் மார்பளவு சிலை என்பதெல்லாம் ஆகமத்தில் கூறப்படவில்லை.

கோவை ஈஷா மையத்தில் நிறுவப்பட்டு உள்ள மார்பளவு ஆதியோகி சிலையை காட்சிக்காக வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்வதை ஆகமங்கள் ஏற்றுக்கொள்ளாது'' என்றார்.

சிக்கல் இல்லாமல் எந்த சிலையும் எழுந்ததாக வரலாறு இல்லை போலும்! 

- பா.ஜெயவேல்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்