கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்ட விநாயகர் தரிசனம்! #PhotoStory | Glory of Ashta Vinayak's Darshan

வெளியிடப்பட்ட நேரம்: 03:19 (07/03/2017)

கடைசி தொடர்பு:03:19 (07/03/2017)

கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்ட விநாயகர் தரிசனம்! #PhotoStory

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சுற்றி அமைந்துள்ளன அஷ்ட விநாயகர் ஆலயங்கள். இந்த 8 விநாயகர் ஆலயங்களை முறைப்படி வழிபட்டால், கஷ்டங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதாவது,ஜோதிர்லிங்கத் தலங்கள் மற்றும் சக்தி பீடங்களைத் தரிசிப்பது எவ்வளவு புண்ணியமோ, அந்த அளவுக்கு மகிமை வாய்ந்தவையாக இந்த அஷ்ட விநாயகர் தலங்கள் போற்றப்படுகின்றன.

அஷ்ட விநாயகர் 

மோர்காம்- மயூரேசர்
புனே- ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில், புனேவில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மயூரேச விநாயகர் ஆலயம். விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் ‘கணபதி பப்பா மோர்யா’ என பக்தர்கள் கோஷம் மிகப்பிரபலம். அந்த மயூரேசர்தான் இந்த மோர்காம் விநாயகர். இவரை அபிஷேகம் செய்து, மனதார வழிபட்டால்  விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

தேயூர் ஸ்ரீசிந்தாமணி விநாயகர் 

தேயூர்- ஸ்ரீசிந்தாமணி விநாயகர்

புனே நகரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேயூர் திருத்தலம். அங்கு மூவா, முக்தா, பீமா எனப்படும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீசிந்தாமணி விநாயகர். தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சம், காமதேனு போல் தேவலோகத்து சிந்தாமணியும் விரும்புவதைக் கொடுக்கக்கூடியது.பக்தர்கள் கேட்பதை எல்லாம் அருள்வதால் இவருக்கு ஶ்ரீசிந்தாமணி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
 

சித்தி விநாயகர் 


சித்த டேக்- சித்தி விநாயகர்
புனே- ஷோலாப்பூர் ரயில் பாதையில் தோண்ட் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் பீமா நதிக்கரையில் அமைந்துள்ளது சித்தடேக் திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீசித்தி விநாயகர் சிறந்த வரப்பிரசாதி! தன்னை நோக்கி தவம் இருந்த பிரம்மனுக்கு விநாயகர் அருள்பாலித்ததாக தலபுராணம் கூறுகிறது. 

ராஞ்சன் காமின் ஸ்ரீமகா கணபதி

ராஞ்சன் காமின்- ஸ்ரீமகா கணபதி
இந்தத் தலம் புனே- கோரேகான்- அஹமத் நகர் நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஶ்ரீமகா கணபதி ஆலயம். அஷ்ட விநாயகர்களிலேயே மிகவும் அழகிய வடிவம் கொண்டு, அபூர்வ வேலைப்பாடுடன் கூடிய வெள்ளிக் கிரீடம் அணிந்து காட்சி தருகிறார்.

வேனாத்ரி- ஸ்ரீ கிரிஜாத்மஜ விநாயகர் 

வேனாத்ரி- ஸ்ரீ கிரிஜாத்மஜ விநாயகர்
பூனேயிலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில், குக்கா நதியின் வட மேற்குக் கரையில் அமைந்துள்ளது லேனாத்ரி என்ற திருத்தலம். பார்வதிதேவிக்கு மற்றொரு பெயர் கிரிஜா. தன் தாயான அம்பிகையின் பெயரையும் இணைத்துக்கொண்டு ஶ்ரீகிரிஜாத்மஜ விநாயகர் என்று திருப்பெயர் கொண்டார்.

ஓஜர்  ஸ்ரீவிக்னேஸ்வர் 

ஓஜர்- ஸ்ரீவிக்னேஸ்வர்
புனே நகரிலிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் குக்கடி நதிக்கரையில் அமைந்துள்ளது ஓஜர்- ஸ்ரீவிக்னேஸ்வர் (விநாயகர்) ஆலயம். இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அஷ்ட விநாயகர் கோயில்களில் இதற்கு மட்டுமே தங்கத்தால் விமானம் உண்டு.

பாலி ஸ்ரீ பல்லாவேச்வர விநாயகர்

பாலி- ஸ்ரீ பல்லாவேச்வர விநாயகர்
புனே நகரிலிருந்து 120 கி.மீ தொலைவில் சரஸ்காட் கோட்டை மற்றும் அம்பா நதிக்கு இடையில் அமைந்துள்ளது பாலி கிராமம். ‘பல்லால்’ என்ற சிறுவனது பிரார்த்தனையை ஏற்று விநாயகர் இங்கு கோயில் கொண்டதால், இவருக்கு ஸ்ரீபல்லாலேச்வர விநாயகர் என்று பெயர் வந்தது. இங்கு வந்து விநாயகரை 21 முறை பிரதட்சணம் செய்து வணங்கினால், எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை.

மஹத்  ஸ்ரீவரத விநாயகர்

மஹத்- ஸ்ரீவரத விநாயகர்
புனே நகரிலிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது மஹத் கிராமம். இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவரத விநாயகர்.  8 யானைகள், இந்த ஆலயத்தைத் தாங்கி நிற்பது போன்ற அமைப்பு ரசிக்கத் தக்கது. பக்தர்களே மூலவரை பூஜிக்கலாம். இந்தத் திருத்தலம் தியானத்துக்குச் சிறந்தது என்கிறார்கள். 

சகல துன்பங்களும் நீங்கிட, இந்த வரிசைப்படி விநாயகர் தலங்களை தரிசித்து, சந்தோஷங்களை பெறுங்கள்.

தொகுப்பு: ஜி.லட்சுமணன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்