அரசாங்க வேலை யாருக்குக் கிடைக்கும்? #Astrology  

​​​தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பாக, குரூப் 4 தேர்வுப் பணிக்கு 1,000 பேர் தேவையென்றால், 8 லட்சம் முதல்  10 லட்சம் பேர் வரை மனு செய்கிறார்கள். தேர்வு எழுதியவர்கள் எல்லோருமே தேர்ச்சி பெற்று வேலையில் சேர்வோம் என்ற நம்பிக்கையில்தான் மனு செய்கிறார்கள். ஆனால், வெற்றி பெறுகின்றவர்கள் அந்த 1,000 பேர்தான். ஏன்? மற்றவர்களுக்கு அரசுப்பணி கிடைப்பதில்லை. யார் யாருக்கு அரசுப் பணி கிடைக்குமென்று ஜோதிட சிரோன்மணி சாந்தி ராஜ்குமாரைக் கேட்டோம். 

வேலை 

‘சர்க்கார் கோழி முட்டை அம்மியை உடைக்கும்', 'அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்'ஜோதிட சிரோன்மணி சாந்தி ராஜ்குமார்
'ஆசையிருக்கு... தாசில்தாராக அம்சமிருக்கு... கழுதை மேய்க்க'  இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் கூறும் பழமொழிகள் ஏராளம் உண்டு. பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதுகூட முதல் சாய்ஸ் மாப்பிள்ளை கவர்ண்மென்ட் வேலையில் இருக்கிறாரா என்றுதான் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், மாதம் பிறந்தால் தொல்லை இல்லாத வருமானம்,  பாதுகாப்பான வாழ்க்கை, நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை, சமூகத்திலும் கௌரவம், இப்படி எல்லாமே ஒரே கல்லுல நாலு மாங்காய் என்று இருப்பதால்தான் அரசுவேலையைப் பலரும் விரும்புகிறார்கள். 

அரசுவேலை கிடைக்காமல் போனவர்கள் வேண்டுமானால், அதைக் கேவலமாகப் பேசலாம். ஆனால், அதற்கென்று ஒரு மரியாதை நிச்சயம் இருந்தே தீரும். எல்லோருக்கும் அரசு வேலை கிடைத்துவிடுகிறதா? என்றால் அதுதான் இல்லை. அதற்கு என்ன காரணம்? 

சிலருக்கு மட்டுமே அரசு வேலை கிடைப்பது ஏன்? 7.5 கோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தில், அரசுப்பணியில் இருப்பவர்கள் வெறும் 30 லட்சம் பேர்கூட இருக்கமாட்டார்கள். ஏன் இந்த நிலை? ஒருமனிதனின் தொழில் பற்றி அறிந்துகொள்ள ஜாதகத்தில் ஜீவனஸ்தானமான 10-ம் இடத்தைப் பார்க்க வேண்டும்.  கூடவே, முற்பிறவியில் அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்பவே பதவி அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நவ கிரகங்கள் 

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு அல்லது லக்னத்துக்கு 1, 5, 9-ம் இடங்களில் குரு இருந்தால், 'குரு சந்திர யோகம்' உண்டாகும். இந்த யோகம் இருப்பவர்கள், உயர்ந்த கல்வி பெற்று கல்வி கேள்விகளில் ஞானம் பெற்றவராக, அரசருக்கு நிகரான வாழ்வு வாழ்வார்கள். பூமியோகம், வாகன யோகம் அமையப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், மற்ற சுபகிரகங்களும் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும்.

குறிப்பாக, 10-ம் இடத்து அதிபதியின் தசாபுக்தி வரும்போதுதான் பார்க்கும் பணியில் உன்னதமான நிலையை அவர்கள் அடைவார்கள். தனது பணிக்காக அரசாங்க விருதைப் பெறுவார்கள்.

அரசாங்கப் பணியில் அமர்வதற்கு லக்னம், பூர்வ புண்ணியஸ்தானமான 5-ம் இடம், ஜீவனஸ்தானமான 10-ம் இடம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். சூரியன், சந்திரன், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் பலம் பெற்று இருந்தால்தான் ஜாதகருக்கு அரசுப் பணி கிடைக்கும். 
இந்த குரு சந்திர யோகம் அமையப்பெற்றவர்களில் ஒரு சிலருக்கு கிரகங்கள் மிக நல்ல நிலையில் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால், அவர்கள் தங்களின் படிப்பை விடுத்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு கோடீஸ்வரர்களாகத் திகழ்வார்கள்.

சந்திரனின் முழுமையான அருளைப் பெற தஞ்சாவூர் அருகேயுள்ள திங்களூருக்கும், குருவின் அருளைப்பெற ஆலங்குடிக்கும் சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  வசதி வாய்ப்பு உள்ளவர்கள், சந்திரன் உச்சம் பெற்ற ஸ்தலமான திருப்பதிக்கும், குருவருளைப் பெற திருச்செந்தூருக்கும் சென்றுவந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!