வீட்டுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடலாமா? வாஸ்து ஜோதிடம் சொல்லும் உண்மை! | Can We use Swing in the Hall as per Vasthu?

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (14/03/2017)

கடைசி தொடர்பு:18:13 (14/03/2017)

வீட்டுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடலாமா? வாஸ்து ஜோதிடம் சொல்லும் உண்மை!

காம்பவுண்ட் சுற்றுச்சுவருடன் உள்ள சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அந்த சொந்த வீட்டில் ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் என்று இன்னும் ஸ்பெஷலாக ஆசைப்படுபவர்களும் உண்டு. மன்னர்கள் காலம் முதல் இன்றைய தலைமுறை வரை இதில் ஆடுவது என்பது மகிழ்ச்சியானதாக இருக்கிறது. சிறுகுழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்கள்கூட ஆடும்போது சிறுகுழந்தைகளாகி விடுகிறார்கள். ஆனால், சிலர் வீட்டில் ஊஞ்சல் கட்டக்கூடாது என்று சொல்கிறார்கள். வாஸ்துப்படியும் இது ஆகாது என கூறுகின்றார்கள். இது உண்மையா என்று வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர். மணிபாரதியிடம் கேட்டோம். அதற்கு அவர் தந்த விளக்கங்களைப் பார்ப்போம்.  

ஊஞ்சல்

ஊஞ்சல் விளையாட்டு:
அந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான். அரசக்குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடும் ஒரு  விளையாட்டு ஊஞ்சல் விளையாட்டு.

மணிபாரதிஊஞ்சல்களில், பொன் ஊஞ்சல், மரத்தினாலான ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல், ஆலமர விழுதுகளினாலான ஊஞ்சல் என பல வகை உண்டு. தொடக்கத்தில் ஊஞ்சல் ஆடும் பழக்கத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது ஆலமரமே! ஆலமரத்தின் விழுதுகள் மிக நீண்டும் உறுதித்தன்மையும் கொண்டவையாக இருந்ததே இதற்குக் காரணம். விழுதுகளைப் பிடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் மட்டும் இன்றி, பெரியவர்களும் ஆடி  மகிழ்வார்கள்.

இரண்டு விழுதுகளை முடிச்சுப் போட்டு அதில் அமர்ந்துகொண்டால்  ஒருவர் தள்ளி விட, மற்றவர்ஆட என்றும் முன்புறம் ஒருவர் பின்னோக்கித் தள்ளவும், பின்புறம் ஒருவர் முன்னோக்கித் தள்ளவும் என மீண்டு வருவது ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுதான். இந்த விளையாட்டு உளவியல் ரீதியாக, நம் கவலைகளைக் காற்றாகப் பறக்கவிட்டு மனதை லேசாக்கி விடுகின்றது.
                   
கயிற்றின் பயன்பாட்டை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்த பின், புளிய மரம், வேப்ப மரம், அரச மரம், புங்கன் மரம் என உறுதியான கிளைகளைக் கொண்ட மரங்களில் கயிற்றைக் கட்டி அதில் சாக்கு அல்லது  போர்வையைச் சேர்த்துக் கட்டி ஆடுவார்கள். இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் இப்போதும் விளையாடப்பட்டு வருகின்றது.

பொன் ஊஞ்சல்:
நாகரிகம் வளர வளர, மரப்பலகை உறுதிமிக்க தேக்கு மரப்பலகைகளால் செய்யப்பட்டு, இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, மரங்களில் கட்டி  விளையாடினார்கள். அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில்  இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என ஆடி மகிழ்ந்தனர். 

பிற்காலத்தில் வசதி படைத்த அனைவரது வீட்டிலும் கொல்லைப்புறத்தில் (கார்டனில்) மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர்.

ஊஞ்சல்

ஆலயங்களில் இறைவனை வழிபாடு செய்வதற்கும் ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டது.இதை 'ஊஞ்சல் உற்ஸவம்' என்றே அழைத்தனர்.
இறைவனையும் இறைவியையும் ஊஞ்சலில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றது. காலப்போக்கில் இதை, வீட்டின் ஹாலிலும், முற்றம் என அழைக்கப்படும் போர்டிகோவிலும் மாட்டி பயன்படுத்தத் துவங்கினர். பிறகு இளைப்பாறுவதற்கும்  குட்டித் தூக்கம் போடுவதற்கும் பயன்படுத்தினர். அதாவது சிறுபிள்ளையாக இருக்கும்போது தொட்டிலில் தூங்கிய உணர்வைப் பெறுவதற்காக ஊஞ்சல் பயன்பட ஆரம்பித்தது. 

இடவசதி இல்லாத இடங்களில்கூட ஸ்டாண்டில் வடிவமைக்கத் துவங்கினர். இன்று அபார்ட்மெண்ட்களில் ஊஞ்சல் என்பது ஒரு கெளரவமான குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், வாஸ்துப்படி, இதை வீட்டின் நடுஹாலில் அமைக்கக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில்தான் அமைக்கவேண்டும். 

நம் வீட்டுக்குள் வரும், காஸ்மிக் கதிர்கள் (காந்த அலைகள் + சூரியக்கதிர்களுடன் இணைந்த ஆற்றல்) பரவி உயிர் ஆற்றல் என்னும் பயோ-எனர்ஜியாக மாறி இருக்கும். இதை வாஸ்துப்படி அமையப்பெற்ற வீடுகளில் நாம் மிக எளிதாக உணரமுடியும். இந்த காஸ்மிக் கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு குந்தகம் ஏற்படுகின்றது. 

'வீட்டில் தொட்டில் கட்டி ஆட்டுகிறோமே' எனப் பலர் கேள்வி எழுப்பலாம். குழந்தைகளுக்கு, குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது. பெரியவர்கள், தம்பதியர்களுக்கு உயிராற்றல் சக்தி அதிகம் தேவைப்படுவதால்தான் வடகிழக்கு அறையை படுக்கை அறையாகப் பயன்படுத்தக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் வர்ணிக்கின்றது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 16 வயது வரை உள்ளவர்கள் வடகிழக்கு அறையைப் பயன்படுத்தலாம். 

'தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது' என்பது இதனால்தான். 

வீட்டில் குழந்தைகள் கதவு மற்றும் தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் காஸ்மிக் கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தைகளை கதவு, தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பக்கூடாது என்று பயமுறுத்துவார்கள்.

- எஸ்.கதிரேசன்  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்