குழந்தைப் பாக்கியம்... நீடித்த ஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..! | Benefits of various types of Homam

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (16/03/2017)

கடைசி தொடர்பு:17:42 (16/03/2017)

குழந்தைப் பாக்கியம்... நீடித்த ஆயுள்... திருமணத் தடை நீக்கும் மகத்தான ஹோமங்கள்..!

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஐந்து விதமான யக்ஞங்கள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அவை பிரம்ம யக்ஞம்; தேவ யக்ஞம்; பித்ரு யக்ஞம்; அதிதி யக்ஞம்; பூத யக்ஞம் ஆகியவைகள் ஆகும்.

ஹோமங்கள் 


பிரம்ம யக்ஞம் என்பது வேத பாராயணம் செய்வது, நாம ஜபம் செய்வது.

தேவ யக்ஞம் என்பது தேவர்களைக் குறித்து ஹோமங்கள் செய்வது.

பித்ரு யக்ஞம் என்பது மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது.

அதிதி யக்ஞம் என்பது வீடு தேடி வருபவர்களுக்கு உணவு தருவது.

பூத யக்ஞம் என்பது காகம் உள்ளிட்ட சகல ஜீவராசிகளுக்கும் உணவு தருவது.

இந்த ஐந்து யக்ஞங்களும் அவசியம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு செய்யவேண்டும். தேவர்களைக் குறித்து செய்யப்படும் ஹோமங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தரக்கூடியவை.

ஹோமம்

எந்த ஒரு ஹோமமாக இருந்தாலும் முதலில் அக்னி வழிபாடு செய்யவேண்டும். அக்னி பகவான் தான் நாம் தேவர்களுக்கு அளிக்கும் ஆஹூதிகளை சூரிய பகவான் உதவியுடன் அந்தந்த தேவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். அதேபோல் தேவர்களின் அருளையும் நமக்குப் பெற்றுத் தருகிறார். ஹோமம் செய்த உடனே நமக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உரிய காலத்தில் அந்தப் பலன் நமக்குக் கிடைக்கவே செய்யும்.

மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வாக ஒரு ஹோமம் நம் முன்னோர்களால் அருளப்பட்டு இருக்கிறது. இங்கே சில முக்கியமான ஹோமங்களைப் பற்றியும், அந்த ஹோமங்களால் ஏற்படக்கூடும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

மகா கணபதி ஹோமம்: சகல விதமான காரியத் தடைகளும் விலகி, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

நவகிரக ஹோமம்: நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய அனைத்துவிதமான தோஷங்களையும் போக்கி, நன்மைகளைத் தரும்.

லக்ஷ்மி குபேர மகாலக்ஷ்மி ஹோமம்: வறுமை நீங்கி அளவற்ற செல்வம் பெருகும்.

துர்கா ஹோமம்: பகைவர்களால் ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாற்றும்.    

சுதர்சன ஹோமம்: கண் திருஷ்டி, பொறாமை போன்றவைகள் நீங்கும்.

மிருத்யுஞ்சய ஹோமம்: நோய்களில் இருந்து விடுபடவும், நீடித்த ஆயுளும் பெறலாம்.

தன்வந்திரி ஹோமம்: இந்த ஹோமமும் உடல் ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படுவதுதான்.

சுயம்வர பார்வதி ஹோமம்: திருமணத் தடை விலகி, நல்ல வரன் அமைந்து திருமண வாழ்க்கை அமையும்.

சந்தான கோபால ஹோமம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்: பிள்ளைகள் கல்வியில் மேன்மை பெறலாம்.  

ஹோமம்

இன்னும் ஒரே பலனைத் தரக்கூடிய பல ஹோமங்களைப் பற்றி நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன

ஒவ்வொரு ஹோமத்துக்குமே சில பிரத்தியேகமான ஹோம திரவியங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதேபோல் பிரத்தியேகமான சமித்துகளும் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஹோமத்தை முறைப்படி வேதம் பயின்ற சாஸ்திரிகளைக் கொண்டே செய்யவேண்டும். முழு நம்பிக்கையுடனும் செய்யவேண்டும்.

நாம் இப்படி பலன் வேண்டி செய்யும் ஹோமங்களுடன், சாஸ்திரிகளைக் கொண்டு வேத பாராயணம் செய்வது அல்லது வேத பாடசாலை மாணவர்களுக்கு உதவுவது, மறைந்த முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்வது, வீடு தேடி வருபவர்களை உபசரிப்பது, காகம், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு தருவது போன்றவற்றையும் நம்மால் இயன்ற அளவு செய்து வந்தால் நாமும் நம் சந்ததியினரும் எல்லா விதமான வளங்களுடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம். 

- எஸ்.கண்ணன்கோபாலன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close