வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (19/03/2017)

கடைசி தொடர்பு:13:54 (20/03/2017)

ராகு காலம், எமகண்டம்... செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை #Astrology

நல்ல நேரம் பார்த்து ஒரு செயலைச் செய்யும்போது ஏன், ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை கெட்ட நேரங்கள் என ஒதுக்குகின்றோம் என்று ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். 

ராகு காலம்

இன்றைய வாழ்க்கையில் மனிதர்களுக்கு புதுப் புதுப்பிரச்னை என ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டுதான் இருக்கும். அதை எப்படிச் சமாளித்து வாழ்வது என்பதை சிந்திப்பதில்தான் அவனது பாதி வாழ்க்கையைப் போக்குகிறான். இதற்கு நடுவில், அவன் செய்யவேண்டிய சில நல்ல காரியங்களும் வரும். அப்படி வரும் காலங்களில் அதைச் செய்யத் தகுந்த நல்ல நேரம் அமைய வேண்டும் என்று நினைப்பான்.  
நல்ல நேரத்தில் செய்யும் நல்ல காரியங்கள் நல்ல சந்தோஷத்தையும், நிறைவான வாழ்க்கையையும் கொண்டுவரும் என்று நினைப்பான். இப்படி ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் சில நல்ல காரியங்கள் செய்யவேண்டி வரும். அப்படி வரும்போது அதற்கு நல்ல நேரம் பார்க்கும் வழக்கம் உண்டு. நல்ல நேரம் என்பது ராகு காலம், எமகண்டம் எனும் கெட்ட நேரங்கள் இல்லாமல் பார்த்துச் செய்வது வழக்கம். 
தினந்தோறும் வரும்  சரியில்லாத நேரம் என்பது ராகு காலம் மற்றும் எமகண்ட காலம் ஆகும்.

வாரம் என்பது ஏழு நாட்களாகும். ரிஷிகள் ஏழு கிரகங்களுக்கும் ஏழு நாட்கள் தந்தார்கள். இதில் சாயா கிரகங்கள் எனும் நிழல் கிரகங்களான ராகு கேதுவுக்கு  நாட்கள் தரமுடியவில்லை. ஆகவே, ராகு கேதுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, ஏழு நாட்களுக்கும் பகிர்ந்தளித்தார்கள்.  

ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாக கருதப்படவில்லை, அந்தக் காலத்தை ஒதுக்கி வைத்தார்கள்.   

நல்ல நேரம்

இதில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி நேரத்துக்கும் இரவு 12 மணி நேரத்துக்கும் 1 மணி 30 நிமிடம் என்ற கணக்கில் அந்த நாளில் 8 கோள்கள் எந்த வரிசையில் செல்லும் என்பதைக் கணித்து, அதை கெளரி பஞ்சாங்கம் என்று வைத்தார்கள்.  

உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை, காலை 6 மணி முதல் 7.30 மணிவரை உள்ள காலம் அந்த நாளின் கோளான சூரியனுக்கும், அதற்கு அடுத்த ஒரு மணி முப்பது நிமிடத்தை அதாவது 7.30 மணிமுதல் 9 மணிவரை சந்திரனுக்கும் அதற்கு அடுத்த ஒரு மணி முப்பது நிமிடத்தை செவ்வாய்க்கும்  அதற்கு அடுத்து புதனுக்கும் அதற்கு அடுத்து குருவுக்கும், அதற்கு அடுத்து சுக்கிரனுக்கும் அதற்கு அடுத்து சனிக்கும் அதற்கு அடுத்து ராகு/கேதுவுக்கும் கொடுத்தார்கள். 

பிறகு, திங்கட்கிழமை சந்திரன் ஆரம்பம் ஆகும். செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஆரம்பமாகும்.  இதில் ராகு காலம் மட்டும் விஷ காலமாக இருந்து அதற்கு அடுத்து அதே வரிசையில் தொடரும். 

இதில் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் காலங்கள் சுபத்தன்மையாகவும், மற்ற செவ்வாய், சனி, ராகு/கேது காலங்கள் அசுபத்தன்மையும் கொண்டிருக்கும்.  இந்தக் காலங்களில் வரக்கூடிய எமகண்டத்தையும் ஒதுக்குவது நல்லது.  

உதாரணமாக ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி 30 நிமிடம் முதல் ராகு காலம். அது விஷ காலம். அதேபோல் மதியம் 12 மணிமுதல் 1 மணி 30 நிமிடம் வரை எமகண்டம் ஆகும்.  இதை ஒதுக்க வேண்டும். இதில் சில சமயங்களில் சுபக் கிரகங்களின் காலங்கள் வந்தாலும், அதை ஒதுக்குவது நல்லது. 

ராகு காலம், எமகண்டம்

இந்த ராகு காலம் என்பது ஏன் அசுபமாகக் கருதப்படுகிறது.  ஜாதகத்தில் ராகு எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக காட்டும்போது, அதன் காலம் மட்டும் ஏன் சிறப்பில்லையென்றால், ராகு, கேது என்பது தலையும் உடலும் மாறி நிற்கும் ஒரு கிரகம். அதாவது 'அரூபி' என்பார்கள். அதனுடைய அந்தத் தன்மை ஒரு நல்ல செயலைச் செய்ய விடாமல் நமது மதியை மயங்கவைத்து செயல்படுவதில் ஒரு தடங்கலைத் தரும். 

நம் மனம் என்பது சந்திரனைக் குறிப்பதால் ராகு எமகண்ட காலங்களில் அதன் தாக்கம் அவ்வளவு சரியாக இயங்காது. அதாவது கிரகண காலங்கள் என்று சொல்லக்கூடிய  ராகு, கேதுவால்  ஏற்படக்கூடிய சூரிய, சந்திர கிரகண காலங்களில் அதன்  ஒளியானது தடைப்பட்டு, நம் ஆத்மாவுக்கும், மனதுக்கும் சரிவர கிடைகாத காரணத்தால் நம் ஆத்மா என்று சொல்லக்கூடிய இதயமும், மனம் சிந்தனை ஆகியவற்றைச் செயல்படுத்தும் மூளையும் இயல்பான கதியில் இருந்து சற்று மாறுபட்டு இயங்குவதால், அதற்கு உண்டான தினப்படியான காலத்தையும் சுபகாரியங்களுக்கு ஒதுக்கி வைக்கும்படி சொன்னார்கள்.

- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்