சகல செளபாக்கியங்கள், சீரும் சிறப்புமான வாழ்க்கை அருளும் சீதா தேவி விரதம்!

சீதா ஜெயந்தி :

மிதிலையின் அரசராக இருந்த  ஜனக மகாராஜா ஒரு பெரிய ஞானி. ஒரு சமயம் ஜனக மகாராஜா நிலத்தை உழுதுகொண்டிருக்கும்பொழுது, பூமியில் இருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. அயோத்தியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றிய ராமபிரானை திருமணம் செய்துகொள்வதற்காக, மகாலக்ஷ்மியின் அம்சமாக ஜனக மகாராஜாவுக்குக் கிடைத்த அந்தக் குழந்தைதான் சீதை.

சீதை பரிசுத்தமான துளசிச் செடியைப் போன்றவள். நிலத்தில் தோன்றிய அந்தக் குழந்தை சீதை என்னும் பெயர் கொண்டு , மிகச்செல்லமாக மாளிகையில் வளர்ந்து வந்தாள்.  ஒருநாள் சீதை பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பந்து ஒரு பெட்டியின் இடுக்கில் சென்றுவிட்டது. அந்தப் பெட்டியில்தான் சிவதனுசு வைக்கப்பட்டு இருந்தது. வில்லை தூக்கி நிறுத்துவதே கஷ்டம். அப்படி இருக்கும்போது, சீதை சிவதனுசு இருந்த பெட்டியை தன் மலர் போன்ற கைகளால் சற்றே தள்ளிவிட்டு, இடுக்கில் இருந்த பந்தை எடுத்தாள். அதை மாடத்தில் இருந்து பார்த்த ஜனக மகாராஜா, அந்த வில்லை எடுத்து வளைப்பவனுக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.  அயோத்தி ராமபிரான் வில்லை எடுத்து வளைத்து சீதையை திருமணமும் செய்துகொண்டார். பிறந்த வீடும், புகுந்த வீடும் பெருமை வாய்ந்த ராஜகுலங்கள். இத்தனை சுகபோகங்களில் வாழ்ந்தாலும் ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபொழுது, தானும் கணவனுடன் சென்றாள் தீராத துயரையும் அனுபவித்தாள். சீதை உலகம் புகழும் பதிவிரதையாகவும் பரிணமித்தாள்.

விரதம்

சீதா தேவி தோன்றிய நாளான பங்குனி நவமி அன்றே , "சீதா ஜெயந்தி" என்றும் "சீதா நவமி" என்றும் பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர். பூமா தேவியின் பொறுமை அன்னையிடம் திகழ்வதால் பூமி மாதாவையும் அந்த தினத்தில் போற்றி புகழ்கின்றனர். வட மாநிலங்களான பீகார், அயோத்தியா, ஆந்திராவில் இத்திருநாளைச் சிறப்பாக மக்கள்  கொண்டாடுகின்றனர்.  இன்றும் ஜனக மாமன்னர் நிலத்தை உழும்போது சீதை கிடைத்த காட்சி , பீகாரில் உள்ளது. தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 


சீதா தேவியின் விரதம் எதற்காக? 

'நான் என்னுடைய கணவருடன்தான் இருப்பேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்து ஒன்றாக வாழ்வோம், அந்நியோன்யமாக இருப்போம்' என்று  ஒரு பெண் உறுதி மேற்கொள்ளவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான , ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால் , இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராமபிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான்.

விரதம்


பூஜை செய்யும் முறை :

விடியற்காலையில் எழுந்து, குளித்து  முடித்ததும் பூஜையறையை சுத்தம் செய்யவேண்டும்.ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சேர்ந்து இருக்கும் படத்துக்கு சந்தனம், குங்குமம்  வைத்து, மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்க வேண்டும்.விளக்கை ஏற்றி, சீதா சஹஸ்ரநாமத்தை கூறி மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அன்னைக்குப் பிரசாதமாக பழம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.பின்பு சீதா தேவியின் வாழ்க்கைக் கதையை பக்தியோடு படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

விரதம் இருக்கும் காலங்களில் திட உணவுகளைத் தவிர்த்து பழம்,பால், மோர், தண்ணீர் , இளநீர் போன்ற திரவஉணவுகளையே எடுத்துக்கொள்ளவேண்டும். அன்று அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்குச் சென்று ராமபெருமானையும், சீதா தேவியையும் தரிசித்து மகா அபிஷேகம், ஆரத்தி ஆகியவற்றைக் காணலாம். வீட்டில் ராமாயணம் படிக்க இயலாதவர்கள், கோயில்களில் நடக்கும் கதாகாலட்சேபத்தை கேட்கலாம்.

விரதம்

சீதா தேவி விரத பலன்கள் :

வம்புப் பேச்சுக்களை குறைத்து அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மை உணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னை அருள்வாள். அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும் சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள்.

- கி.சிந்தூரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!