உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்...! அசுவினி முதல் ஆயில்யம் வரை #Astrology | Nakshatra born characteristics and features as per astrology - From Ashwini to Ayilyam

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (24/03/2017)

கடைசி தொடர்பு:09:00 (25/03/2017)

உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்...! அசுவினி முதல் ஆயில்யம் வரை #Astrology

-'ஜோதிடமாமணி' கிருஷ்ணதுளசி

ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜோதிஷ சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திரம் 

அசுவினி:
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்கள்.  அன்பும் நல்ல பண்புகளும் ஒருசேர அமையப் பெற்றவர்கள். தன் கொள்கைகளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ராணுவம், காவல்துறை, உணவு விடுதிகள் போன்ற தொழில்களில் ஈடுபடுவர்.

பரணி: 
மிகவும் தைரியசாலிகள். நல்ல கல்வியறிவு பெற்றிருப்பார்கள். ‘பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள்’ என்று சொல்லி இருப்பதுபோல், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தலைமை ஸ்தானத்தை வகிப்பவர்களாக இருப்பார்கள். ஜோதிடர் கிருஷ்ண துளசிஇவர்களுக்கு பெரும்பாலும் பொறியியல், சட்டம் சார்ந்த தொழில்களே அமையும். ஒருசிலர் விளம்பரத் துறையில் பிரகாசிப்பார்கள்.

கார்த்திகை:
தலைமைப் பண்பு மிக்கவர். மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் திறமை கொண்டவர். கஷ்டப்படுபவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் சமர்த்தர். இவர்களில் பலரும் பிறந்த ஊரை விட்டு வெளியூரிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். எப்போதுமே இவர்கள் வாக்கு தவறமாட்டார்கள். மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அரசுப் பணிகள், இலக்கியம், சுரங்கம் தொடர்பான இடங்களில் பெரும்பாலும் இவர்களின் பணி அமையும்.

ரோகிணி:
எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். எப்படி ரோகிணியில் பிறந்த கிருஷ்ணன் எல்லோருடைய மனதையும் கவர்ந்தானோ, அப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். மற்றவர்களின் அறிவு, அந்தஸ்தை விடவும் அவர்களுடைய அன்புக்கே முக்கியத்துவம் தருவார்கள். இவர்கள் கலைத்துறை, அரசியல், இனிப்பு சார்ந்த தொழில்கள், பால் தொடர்பான தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடும்.

மிருகசீரிஷம்:
தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். இவர்களுக்கு சந்தேக புத்தி இருக்கக்கூடும். மற்றவர்களுக்காக உண்மையாகப் பாடுபடக்கூடியவர். எளிதில் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நிதித்துறை, கணக்கு தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அமையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணை வகையில் சொந்தத் தொழில் ஜோதிட பலன்அமையவும் வாய்ப்பு ஏற்படும்.

திருவாதிரை: 
பல்துறை வித்தகர். மிகுந்த திறமைசாலி.  எதிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் பெற்றிருப்பார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பணியை முடிக்காமல் விடமாட்டார். இவருக்கு எந்த அளவுக்கு புகழ் கிடைக்கிறதோ, அதே அளவு மற்றவர்களின் விமர்சனத்துக்கும் ஆளாக நேரிடும். கல்வி, எழுத்து, பத்திரிகை, விளம்பரத்துறை, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம்.

புனர்பூசம்: 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமபிரானைப் போல் வாக்கு தவறாதவர்களாக இருப்பார்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்கள். தனக்கென்று தனித்துவமான சில பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம் இருக்கும். கல்வித் துறை, வர்த்தகம், சட்டம், தங்கம் மற்றும் வெள்ளி தொடபான தொழில்கள் இவர்களுக்கு அமையக்கூடும்.

பூசம்:
தன்னுடைய லட்சியத்தை அடையும்வரை இவர் ஓயமாட்டார். எதிலும் நேர்மையாக இருப்பதையே விரும்புவார். மற்றவர்களுக்கு அடிமைப்படுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். வாழ்வில் இவர்களுக்கு ஏதேனும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். அரசியல், பெட்ரோ கெமிக்கல், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவர். ஒருசிலர் பெரிய எஸ்டேட்களை நிர்வகிக்கவும் கூடும்.

ஆயில்யம்:
ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணனின் நட்சத்திரம். சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர். மற்றவர்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். என்னதான் வறுமைநிலையில் பிறந்திருந்தாலும், எப்படியும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையை அடைந்துவிடுவார். விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் மற்றும் தொழில்களைப் பற்றி நாளை பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்